எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
துயிலெடையாக வரும் பாடல்களில் இது கடைசியான பாடல். நமது வீடுகளில் கூட சிறுவர்கள் கடைசியாகத்தானே எழுந்துக் கொள்வர். அப்படியே எழுப்பினாலும் உடனே எழுவார்களா? அண்ணன் எழுந்து விட்டானா? அக்காள் எழுந்தாளா என சினுங்கமாட்டார்களா?
அப்படித்தான் இப்பெண்ணும், பக்தியில் சிறியவள். உலக விஷயங்களில் நாட்டம் விடாமல் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாள். ஆனால் இறை அனுபவம் பெற மிகவும் உகந்தவள் இவளையும் அழைத்துக் கொண்டுதான் செல்லவேண்டும்.
இதோ பாடுகிறாள் ஆண்டாள். இப்பாடல் வெளிப்படையான உரையாடலாக அமைந்த அழகான பாடல்.
முந்தைய பாசுரங்களில் பொழுது புலர்ந்ததற்கான அடையாளங்களெல்லாம் தெரிகின்றன. இன்னமும் எழாமல் இருக்கும் தோழியரை சிறிது கேலி பேசுகிறாளல்லவா” இங்கும் அது தொடர்கிறது. இவள் தூங்கவில்லை, எழாமல் கிடக்கிறாள். அதனால்
தோழிகள் : எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
உறங்குபவள்: சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்
தோழிகள் : வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
உறங்குபவள்: வல்லீர்கள் நீங்களே!
உறங்குபவள்: நானேதான் ஆயிடுக.
தோழிகள் : ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
உறங்குபவள்: எல்லாரும் போந்தாரோ?
தோழிகள் : போந்தார்
தோழிகள் : போந்தெண்ணிக்கொள்
தோழிகள் : வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்!
இப்படித்தான் இவர்களின் உரையாடல் செல்கிறது. பெண்கள் சிலர் சேர்ந்து பேசும் பொழுது பேசும், கிண்டல் கலந்த பேச்சை மிக அழகாக காட்டியிருப்பாள் ஆண்டாள்.
எல்லே! என்பது தென் தமிழகத்தின் ஆழகான வட்டார பேச்சு. ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவளாயிற்றே!
இளங்கிளியே! இவள் இளையவளில்லையா? அது மட்டுமல்ல இவள் கிளிபோல அழகாக பேசக்கூடியவள். முன்பு பாவை நோன்பிற்கு வருவதாக நிறையா பேசியிருப்பாள் போல!
இன்னம் உறங்குதியோ? என்னவோ நேற்று மிக அழகாக பேசினாய். எழாமல் இன்னமுமா தூங்கிக் கொண்டிருக்கிறாயே? பொடி வைத்த பேச்சு. பெண்களல்லவா!
உள்ளே இருப்பவளுக்கு இப்பொழுது வெட்கமாகிவிடுகிறது. இப்படி சில்லென்று என்னை அழைக்காதீர், நங்கைமீர், போதர்கின்றேன்.
உறக்கத்திலிருந்து எழும் போதே கேலி செய்யப்பட்டால், சிறிது எரிச்சலடைவது இயல்புதானே! பனிப்பெய்யும் அக்காலை பொழுதில் இவர்களின் அழைப்பு வேறு இவளுக்கு மேலும் சில்லென்று குத்துவதாக உள்ளது. அழைக்காதீர் வந்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று சொன்னவள், அவளது வார்த்தைக்குள்ளும் சிறிது கிண்டலை வைக்கிறாள். வந்தவர்களை நங்கைமீர் என்றழைக்கிறாள்.
முந்தைய பாசுரத்தில் தோழிகள் உறங்குபவளை, நங்காய் எழுந்திராய் என்றார்களல்லவா! இப்பொழுது அதையே உறங்குபவள் தோழிகளைப்பார்த்து ‘நங்கைமீர்’ என்று சொல்கிறாள்.
நங்கை என்றால் பெண்களில் சிறந்தவள் என்று பொருள். ஆண் மகனில் சிறந்தவர் நம்பி’ எனக் குறிக்கப்படுவர்.
கம்பராமாயாணத்தில் சீதையையும் இராமனையும் நங்கை, நம்பி என அழைத்திருப்பார் கம்பர். கோலம் காண் படலத்தில் ஒரு பாடல். சீதையின் அழகைக் கண்டு பெண்களே வியப்பதான அழகான பாடல்.
சங்கு அம் கை உடைமையாலும்,
தாமரைக் கோயிலாலும்,
எங்கு எங்கும் பரந்து வெவ்வேறு
உள்ளத்தின் எழுதிற்று என்ன,
அங்கு அங்கே தோன்றலாலும்,
அருந்ததி அனைய கற்பின்
நங்கையும் நம்பி ஒத்தாள்;
நாம் இனிப் புகல்வது என்னோ?
பெண்களில் சிறந்தவள் சீதை, ஆடவரில் சிறந்தவன் இராமன். இவர்களுக்கு ஒப்புமைக் கூற வேறு யாருமில்லையாதலால், மிக அழகாக ஒருவருக்கு மற்றவரை ஒப்புமை படுத்தும் அழகு கம்பனின் தனித்திறம். இங்கு இராமனை ஒத்தாள் சீதை என்று கூறவில்லை. நங்கையும் நம்பி ஒத்தாள் எங்கிறாள். இப்படி நங்கை என்னும் சொல் மிகச் சிறந்த பெண்ணான சீதையைக் குறிப்பதாக அமைந்துள்ளது.
சிலப்பதிகாரத்திலும் கவுந்தி அடிகள் கண்ணகியை ‘சீர்சால் நங்கை’ என்றே குறிப்பிடுகிறார்.
திருப்பாவையில் இப்பெண்களும் மிகச் சிறந்தவர்களே! நங்கையர் என அழைக்கப்பட வேண்டியவர்களே! என்றாலும் சிறிது மாயையில் சிக்கி இருக்கிறார்கள். அதனால் இப்பெண்கள் சற்று கேலி பேசுகிறார்கள். இப்பொழுது உறங்குபவளும் ‘நீங்களெல்லாம் மிகச் சிறந்தவர்கள், நானே குறைபாடுடையவள் என்பதாக தன் கோபத்தைக் காட்டவே ‘நங்கைமீர் எங்கிறாள்.
இதைக்கேட்டவுடன் பேச்சு இன்னமும் நீள்கிறது. நீ மிகுந்த பேச்சு வல்லமை மிக்கவள். வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன்வாயறிதும். இங்கு அவளது சொல்லை கட்டுரைகள் என்று குறிப்பது அறிய தக்கது. கட்டுரை என்றால் பொருள் பொதிந்த சொல் என்று பொருள். உன் உள்ளர்த்தம் கொண்ட பேச்சுத் திறமையை முன்பே அறிவோம் எனக்கூறுகிறார்கள். உள்ளிருப்பவளும் சளைத்தவளல்லவே. வல்லீர்கள் நீங்கள் தான். இவர்கள்தானே முதல் பாசுரத்தில் ’எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்’ என்றழைத்து கேலி பேசத் துவங்கினார்கள். அதனால் பேச்சில் வல்லவர்கள் நீங்களே என சொல்கிறாள். மேலும் நீடிக்க விரும்பாமல், நானேதான் ஆயிடுக! நானாகவே இருந்துவிட்டுப் போகிறேன் என்றும் கூறுகிறாள். விவாதத்தை தடுக்கும் ஒரு உத்தி இது.
தோழிகளோ இன்னமும் விட்டப் பாடில்லை. உனக்கு மட்டும் என்ன சிறப்பு இவ்வளவு எழுப்ப வேண்டுமோ, என கேட்க, உள்ளிருப்பவள் எல்லோரும் வந்தார்களோ, ஆமாம் வந்து விட்டார்கள். வேண்டுமானால் நீயே வந்து எண்ணிபார்த்துக் கொள்ளேன். நாமெல்லோருமாக, வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாடுவோம் வா என அழைக்கிறார்கள். இப்படி இவர்கள் உரையாடல் நிகழ்கிறது. இதோபோல் உரையாடலுடன்
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்
என்ற திருவெம்பாவைப்பாடல் இப்பாடலுடன் ஒப்பு நோக்கத் தக்கது. தோழிகள் உறங்குபவளை ‘முத்துப் போன்ற சிரிப்புடையவளே!’ என்றழைக்க, அவளோ தோழிகளை ‘வண்ணக் கிளி மொழியார்’ எனக்கூறி எல்லோரும் வந்தாரோ எனக் கேட்க, வந்து நீயே எண்ணிக் கொள், குறைந்தால் மீண்டும் உள் சென்று தூங்கி விடு என்று கேலியும் கிண்டலுமாக அமைகிறது இப்பாடலும்.
இங்கு எல்லோரும் வந்து விட்டாரா என்றெல்லாம் கேட்டு ‘கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதைத்தான் இருப்பாடல்களிலும் உறங்கும் தோழிகள் செய்கிறார்கள். எழுந்திருக்க மனமில்லை. தேவையில்லாத கேள்விகள் கேட்டு காலத்தை போக்குகிறார்கள்.
இங்கு தோழிகளை எழுப்புதல் என்பது நம் மனத்தினை எழுப்புதல் அல்லவா! மனம் இப்படித்தான் தேவையற்றவற்றில் கவனம் செலுத்தி உண்மைப் பொருளை பிடித்துக் கொள்ளாமல் வழுக்கிச் செல்லும். மனமே மனித வாழ்க்கை எனபது அரியது, தூக்கம் என்ற மாய வலையில் சிக்குண்டு காலத்தை வீணாக கழிக்காதே! என்பதுதானே ஆண்டாளும், மாணிக்கவாசகரும் நமக்குச் சொல்வது.
இதோ மாணிக்க வாசகர் விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைப்பாட அழைக்கிறார்.
ஆண்டாள் திருப்பாவையில், வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாட அழைக்கிறாள்.
வல்லானை என்ற சொல் வலிமைமிக்க யானையையும், வல்லவன் என்ற பொருளிலும் வந்து பல பொருட் ஒருமொழியாக அமைந்திருப்பது அழகு.
வலிமைப் பொருந்திய யானையான குவாலைய பீடம் என்ற கம்சனின் யானையை கொன்றவன் அல்லவா கண்ணன்!
சிலப்பதிகாரத்திலும் யானையைக் கொன்ற நிகழ்வு குறிக்கப் படுகிறது. கடலாடு காதையில் மாதவியின் பதினொரு வகையான ஆடல்கள் சொல்லப்பட்டிருக்கும். அதில்
கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியத் தொகுதியும்
குவாலய பீடம் என்ற யானையை கொன்ற அஞ்சன வண்ணனான கண்ணன் ஆடிய ஆட்டம் அல்லியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாட்டத்தை மாதவி ஆடுகிறாள் எங்கிறது சிலப்பதிகாரம்.
இப்படி குவாலய பீடம் என்ற யானையைக் கொன்றவனும், தன் பகைவரின் பகையை செருக்கை அழிக்க வல்லவனும், புரிந்துக் கொள்ள முடியாத மாயம் நிறைந்தவனும் ஆகிய கண்னனைப் பாடுவோம் வாருங்கள் எங்கிறாள். தன்னை எதிர்த்தவரின் பகையை அழிப்பானே அன்றி அவரை அழிக்கமாட்டான். மாற்றாரின் மாற்றழிக்க வல்லான். வாலி, கும்பகர்ணன் போன்றவர் பகைவராயினும் பகையை அழித்து ஆட்கொண்டவனல்லவா! அவனது செயல்கள் மனிதரால் புரிந்து கொள்ள இயலாதல்லவா, அதனால் மனமே தேவையற்ற கேள்விகளை விடுத்து, அந்த மாயனைப் பாடி பரவுவாயாக என இப்பாடலில் நமக்கெல்லாம் வழி காட்டுகிறாள் ஆண்டாள்.
இந்த பாடலுடன் தோழியர் அனைவரும் எழுந்து சேர்ந்துக் கொள்ள, பாவை நோன்பிருக்க, கண்ணனிடம் பறை கொள்ள அவன் மாளிகை வாசல் அடைகிறாள் ஆண்டாள்.