Wednesday, 8 March 2023

போய பிழையும், புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்

போய பிழையும், புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

இந்தப் பாடலில் கண்ணனை பலவாறாக அழைக்கிறாள் ஆண்டாள். மாயனை, வடமதுரை மைந்தனை, யமுனைத் துறைவனை, ஆயர்குல அணிவிளக்கை, தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனை என்று ஐந்து நாமங்களில் அழைக்கிறாள்.

இறைவன் மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாதவன், அறிவிற்கு அரியவன் என்பதால் மாயன். இதையே ஆண்டாள் முதல் பாசுரத்தில் நாராயணன் என்ற நாமத்தால் குறிக்கிறாள் என்று பார்த்தோம்.

வடமதுரை மைந்தன், வடமதுரையில் தானே வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாக அரச வம்சத்திலே பிறந்தான். எனவே வடமதுரை மைந்தன்.

அடுத்து தூயப்பெருநீர் யமுனைத் துறைவன். ஓர் இரவிலேயே யமுனை கரைக்கு வந்து நந்த கோபன் மகனாக யசோதையின் இளஞ்சிங்கமாக வளர்ந்தானல்லவா. அதனால் யமுனைத் துறைவன்.

இது சாதாரன யமுனை அல்ல தூயப் பெருநீர் யமுனை. இரவோடிரவாக கண்ணனை வசுதேவர் ஆயர்பாடிக்கு எடுத்து வருகிறார். வழியிலே யமுனை ஓடுகிறது. பெருக்கெடுத்து ஓடுகிறது. என்றாலும் வசுதேவருக்கு வழி விட்டு விடுகிறது. அதேநேரம் யமுனைக்கு ஒரு ஆசை, தனது கருணையால் மிகப்பெரியவனான இறைவன் கண்ணனாக இறங்கி வந்து பிறந்திருக்கிறானல்லவா! அவனது பாத மலர்களை ஒருமுறை தொட்டுவிட வேண்டும் என்று எண்ணியதாம் அது. அதனால் மெதுவாக பெருகுகிறது. கூடையில் கண்ணனாக படுத்திருந்த அவன் சின்னப் பாதங்களை ஒரு முறை தொட்டதும் கிடு கிடுவென்று வடிந்து வழி விட்டு விட்டதாம். அதனால் தான் அது தூயப் பெருநீர் யமுனையாகிறது.

அப்படி ஆயர்குலம் செய்த தவத்தால் அக்குலத்தின் விளக்காக வந்தவனை, ஆயர்குல அணி விளக்கே என்றழைக்கிறாள்.

தாயை குடல்விளக்கம் செய்த தாமோதரன். இவனைப் பெற இவன் தாய் என்ன தவம் செய்தாளோ என்றென்னும் படி தேவகியின் கருவில் உதித்தானல்லவா கண்ணன். ஒரு தாயின் வயிற்றில் பிறப்பது வினைப்பயன். தாயின் நல்வினை, நல்ல பிள்ளைகளை கொடுக்கும். பிள்ளைக்கும், எங்கு யாருக்கு பிறக்க வேண்டும் என்பதும் வினைப்பயனே.

ஆனால் கண்ணன் வினையால் பிறந்தவனல்ல. தானே அவதரித்தவன். தேவகியின் கருவில் தோன்றியதால் அவள் குடல் விளக்கம் பெற்றது. இன்னும் ஒரு பிறவிக்கு காராணமாக இல்லாமல் பிறவி பிணி தீர்த்தவன், அவளை ஆட்கொள்ளவே அவள் கருவில் தோன்றினான். குடல் விளக்கம் செய்தான்.

ஆனால் தாமோதரன் என்று இங்கு ஏன் சொன்னாள்?

தாமோதரன் என்றால் கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன் என்பது பொருள். ஆயர்பாடியில் கோவலர்கள் மேய்ச்சலுக்கு போகும் போது கன்றுகளை கட்ட பயன்படுத்தப்படும் கயிற்றை இடுப்பில் ஒரு கயிறு கட்டி அதில் தொங்க விட்டிருப்பார்கள். எனவே இடையர்களிடையே தாமோதரன் என்ற பெயர் உண்டு. கண்ணன் இடைகுலத்தில் வளர்ந்தவன். எனவே அவன் தாமோதரனாகிறான்.

அவன் யசோதையிடம் தானே வளர்ந்தான்? என்ன தவம் செய்தனை யசோதா, எங்கும் நிறை பரப்பிரம்மம் ‘அம்மா’ என்றழைக்க என்ன தவம் செய்தனை என வியக்கும் படியாக யசோதையிடம் குட்டு பட்டு கயிற்றால் கட்டப்பட்டு நின்றானல்லவா கண்ணன். அவள் மீண்டும் பிறவி கடலில் வீழாத வண்ணம் அவளையும் ஆட்கொண்டான். அதனால் தாயை குடல்விளக்கம் செய்தவனாகிறான். யசோதை கண்ணனை கயிற்றால் கட்டினாள். அவனோ அவளை பிறவி கட்டிலிருந்து விடுவித்தான் என்பது எவ்வளவு அழகு!

இப்படி ஐந்து விதமாக கண்ணனை இப்பாடலில் அழைப்பது நோக்கத் தக்கது.

இறைவனின் ஐந்து நிலையை முன்பே பார்த்தோம். இறைவன் பரமபதம் என்று சொல்லப்படுகிற வைகுண்டத்தில் நாராயணனாக இருக்கிறார். ஆனால் சாதாரண மனிதரின் அறிவிற்கு அகப்படாதவனாய் அரியவனாக, மாயனாக இருக்கிறார். அடுத்ததாக பாற்கடலில் பள்ளி கொண்ட பரமனாக இருக்கிறான். அப்பொழுதும் மனிதர்களால் நெருங்க இயலாதவனாகவே இருக்கிறார். மூன்றாவது அவதார நிலையில் ஓங்கு உலகளந்த பெருமானாக இருக்கிறார். அவதார காலத்தில் இருந்தவர்கள் அவனை அனுபவித்திருப்பார்கள் ஆனாலும் இன்னும் சாதரண மனிதருக்கு எட்டாதவனாகவே உள்ளார். நாங்காவதாக எங்கும் வியாபித்திருக்கும் நிலை. காற்றை போல, மழையைப் போல எங்கும் இருக்கிறான் என அறிய முடிந்தாலும், மனிதருக்கு அதுவும் உணரமுடியாததாகவே உள்ளது.

ஆனால் ஆயர்குல அணிவிளக்காக, கண்ணனாக அவன் வந்து பிறந்தவுடன் ஆயர் குல மக்களுக்கு அவன் எளிதில் அடையக் கூடியவனாக இருக்கிறான். ஆயர்குல அணி விளக்கை இடையர்கள் எளிதாக அனுபவித்தார்கள் அல்லவா! ஆண்டாளும் ஆயர் குல பெண்ணாகத் தானே இப்பொழுது இருக்கிறாள். அவளால் கண்ணனை அனுபவிக்க முடிகிறது.

இன்று கலியுகத்தில் நாம் கண்ணனை எப்படி உணர்வது. எப்படி அவனை சரணடைவது. மிக அழகாக சொன்னார்கள்

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா (இராஜாஜி)

இன்று நமது இஷ்ட தெய்வமாக ஒவ்வொரு கோவிலிலும் அவனே அருள்கிறான். கலியுகத்தில் பக்தி செய்து அவன் நாமம் பாடி நாம் அவனை அடைய முடியும். அதுதானே ஆண்டாள் நமக்கு காட்டுவதும்.

அப்படி அவன் நாமம் பாடினால் நாம் அடைய கூடியது என்ன என்பதையும் மிக அழகாக ஆண்டாள் காட்டுகிறாள். அவனை மனம், மெய், மொழிகளால் வணங்கினால், போயப் பிழையும், நாம் இவ்வளவு நாள் செய்த வினைகளும், புகுதருவான் நின்றனவும், இனி விதிவசத்தால் நாம் செய்ய கூடிய வினைகளும் தீயினிற் தூசாகும். அதனால் தூய மனத்துடன் அவன் நாமம் செப்புவீர் எங்கிறாள்.

நாம் தூய மனத்துடன் மெய்யால் வணங்கி தொழுதால் கூட அருள்வான். மலர்களை முறையாக சூடத் தெரியாமல் தூவினால் கூட அவன் ஏற்றுக் கொள்வான். வாயினால் அவன் நாமம் பாடினாலே அவன் அருள்வான். அவனைத் தேடி எங்கும் செல்லத் தேவையில்லை, மனத்தால் சிந்தித்து தியானித்தாலும் போதும் அவனை அடையலாம் என்கிறாள்.

நம் வீட்டில் கூட பூசை அறையில் சிறுவர்களை மணி ஒலிக்கச் செய்வோம், பூ போடச் சொல்வோம். இப்படி சில சின்ன சின்ன காரியங்களைச் செய்யும் போது அது பழக்கமாகும். சற்று பெரியவர்களானதும், சில பாடல்களை மனப்பாடம் செய்து பாடச் செய்வோம். அறிந்து கொள்ளும் வயதானால் இப்பழக்கமே அவர்களைச் சிந்திக்கச் செய்யும். மனத்தினால் சிந்தித்து தியானிப்பது உயர்நிலை. இப்படி பக்தியில் சிறியவர்கள் உயர்நிலை அடைய நல்வழியை ஆண்டாள் காட்டுகிறாள்.

அப்படி அவனைச் சரணடைந்தால் நம் வினைகள் எல்லாம் தீயிட்ட தூசாகும் என்று கூறுகிறாள். நாம் நீரினால் ஒரு அழுக்கை கழுவினால், அழுக்கு போகும் ஆனால் நீர் அசுத்தமாகும். இன்றைய தொழில் நுட்ப காலத்தில் காற்றால் சுத்தம் செய்தாலும் அழுக்கு இடம் மாறுமே தவிர முழுதும் அழியாது. ஆனால் தீயால் ஒரு பொருளை எரிக்கும் பொழுது அப்பொருள் முழுவதுமாக அழிகிறது. அதேசமயம் தீ அசுத்தப்படுவதில்லை. நமது மன அழுக்கையெல்லம் இறைவன் தீயாக இருந்து நீக்குவான் என்று கூறுகிறாள்.

இப்படி நோன்பைப் பற்றியும் பலன் பற்றியும் சொன்ன ஆண்டாள் அடுத்தப் பாடல்களில் துயின்று கொண்டிருக்கும் தமது தோழியரை எழுப்பி இறைவனை நாட அழைக்கிறாள். மிக அற்புதமாக மொழி வளத்தை இப்பாடல்களில் இரசிக்க முடியும். காண்போம்.

No comments:

Post a Comment