Friday, 3 March 2023

வாழ உலகினில் பெய்திடாய்

வாழ உலகினில் பெய்திடாய்


ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாயிர பாடல்களாக அமைந்திருக்கக்கூடிய முதல் ஐந்து பாடல்களில் நான்காவதாக அமைந்துள்ள இந்த பாடலில் ஆழிமழைக்கண்ணா! என்று மழைக் கடவுளை அழைத்து ‘வாழ உலகினில் பெய்திடாய்’ என வேண்டுகிறாள் ஆண்டாள். இதில் சிறப்பாக மழைப் பெய்தலின் அறிவியல் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அழகான உவமைகள் கையாளப்பட்டிருப்பதும் அறிந்து மகிழ தக்கது.

‘ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்’. ‘கரவேல்’ என்ற சொல்லை நமக்கு வெகுவாக பரிச்சயமான இரண்டு இலக்கியஙகளில் படித்திருப்போம்.

ஆத்திச்சூடியில் – ‘இயல்வது கரவேல்’

திருக்குறளில்

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள

கரவல் என்றால் மறைத்தல், ஒளித்துக் கொள்ளுதல் என்று பொருள். இயல்வது கரவேல் என்றால் முடிந்ததை, இயன்றதை மறைத்துவைத்துக் கொள்ளாமல் கொடுக்க வேண்டும். பொருள் மட்டுமல்ல நேரம், கவனம், அக்கறை, உழைப்பு எதுவானாலும் இயன்றதை மறைக்காமல் மற்றவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் அல்லவா? காக்கையானது இரையை கண்டால் தான் மட்டும் மறைத்து உண்ணாது தன் இனத்தை அழைத்து கரைந்து பின்னே சேர்ந்து உண்ணும்.

அப்படியே மழைக்கு அதிபதியே! ஒன்றையும் நீ மறைத்துக் கொள்ளாதே! உன்னால் இயல்வதை கரவாதே!!

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

என்பது குறள். உலகில் உயிர்கள் வாழ வேண்டும் என்றால், உலகம் செழிக்க வேண்டும் என்றால் மழை வேண்டும்.

வருணனே! ஒளித்துக் கொள்ளாமல் அனைத்தையும் முழுவதுமாகக் கொடு என்கிறாள் ஆண்டாள். அதுவும் சார்ங்கத்தின் சரமழைப் போல் கொடு. வில்லிலிருந்து எய்யப்பட்ட அம்பினை, எய்தவன் கூட திரும்பப் பெற முடியாது. அது போல் இடையில் நிற்காதவாறு கடைசி சொட்டு நீர்வரை பெய்து கொடு என்கிறாள்.

வருணனே! நீ கடலில் புகுந்து நீரை முகந்து கொண்டு ஆர்த்து ஏறி, நீரை நிறைத்துக் கொண்டு மேலே சென்று, ஊழி முதல்வனாகிய கண்ணனின் வண்ணம் போல் உன் மெய் கறுத்து பத்மநாபன் கையில் உள்ள ஆழி என்ற சுதர்சன சக்கரம் போல் மின்னி, பஞ்ச சன்னியம் போல் நின்று அதிர்ந்து முழங்கி, சார்ங்கம் என்ற வில்லிலிருந்து பொழியும் சரமழைப்போல் இவ்வுலகில் உயிர்கள் வாழ்வதற்காக மழையை பெய்விப்பாயாக என்கிறாள்.

இங்கு மற்றொரு பாவைப் பாடலான திருவெம்பாவையில் 16 ஆவது பாடல் ஒப்பு நோக்கத் தக்கது.

முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

கார்கால மழை பொழியும் ஒரு ஆற்புதமான இயற்கை காட்சியைக் கண்டதும் ஆண்டாளுக்கு கண்ணனே கண்முன்னே தெரிகிறான். இதோ கார் மேகம் வானம் முழுதும் பரந்து கண்ணன் உடல் நிறம் போல் கறுத்திருக்கிறது, அவன் கையில் சுதர்சன சக்கரம் ஒளிவீசுவதைப் போல் மின்னலடிக்கிறது, பாஞ்ச சன்னியமாகிய அவன் சங்கு முழங்கும் போது அதிர்வதைப் போல் இடிக்கிறது, விஷ்ணுவின் சார்ங்கம் என்ற வில் எப்படி அம்பு மழை பெய்யுமோ அப்படி மழை பொழிகிறது என காண்கிறாள்.

இதே இயற்கை நிகழ்வு, மாணிக்க வாசகருக்கு உமையவளை நினைவூட்டுகிறது. மழையே! முதலில் இக்கடலை அணுகி அதன் நீரைச் சுருக்கி மேகமாக மேலெழுந்து, எம்மை அடியவராக உடைய உமையவளின் மேனி நிறம் போல் கறுத்து, அவளின் இடையைப் போல் மின்னி, பொலிவுடன் காட்சி அளித்து அவள் திருவடிகளில் இருக்கும் பொன்சிலம்பினைப் போல் இடித்து முழங்கி, அவளது திருப்புருவம் போல் வானவில்லாக தோற்றமளித்து, தன்னை என்றும் பிரியாத சிவபெருமானின் அடியவருக்கு பெருமானைக் காட்டிலும் முன்னே தான் வந்து உமையாள் பொழியும் அருளைப் போல் நீ பொழிவாயாக! என்கிறார்.

நாம் ஒருவர் மேல் அன்பு வைத்துவிட்டால் அவர் நினைவு நம்மை முழுவதுமாக ஆட்கொள்ளுமல்லவா? எக்காரியம் செய்தாலும் அவர் நினைவு வருமல்லவா? சாதாரண மனித காதலுக்கே அவ்வளவு வலிமை என்றால், ஆண்டாளும் மாணிக்கவாசகரும் கொண்ட அன்பு தெய்வீகமானதல்லவா? எதைச் செய்தாலும் அவனுக்காகவே செய்வதும் எதைப் பார்த்தாலும் அவனாகவே பார்ப்பதும் பக்தியின் உச்சநிலை. அதனால் தான் ஆண்டாளுக்கு காண்பதெல்லாம் கண்ணனாகவும், மாணிக்கவாசகருக்கு காண்பதெல்லாம் எம்பெருமானும் எம்பிராடியுமாகவே தெரிந்தனர்.

அதுமட்டுமல்ல இவ்விருப்பாடல்களிலுமே, மழை பெய்யும் நிகழ்ச்சி அறிவியல் பூர்வமாக சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் கடல் நீர் ஆவியாகி மேலே சென்று, மேகங்களாகத் திரண்டு, நீர் நிறைய நிறைய கருமை நிறம் கொண்டு, மின்னி அதன் பின் இடியோசை கேட்க மழையாகப் பொழியும் என்று மழைப் பொழியும் நிகழ்வு வரிசை கிரமமாக சொல்லப்பட்டிருப்பது அறிந்து போற்றத்தக்கது.

ஆண்டாள் கண்ணனாக பார்க்க, மாணிக்க வசகரோ உமையாளாக பார்க்க, கம்பன் மழைப் பொழிவை எவ்வாறு காண்கிறான் பார்ப்போமே!

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில்
சேறு அணிந்த முலைத் திரு மங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே

நீறணிந்த கடவுள் சிவபெருமானைப் போல் வெண்மையான மேகங்கள் வான் வழிக்கு அழகு சேர்த்தவாறு மிதந்து கடல் நீரை உட்கொண்டபின் அகிற் பூசிய மார்பினைக் கொண்ட இலக்குமி தேவியால் பெருமைபெற்ற திருமாலின் நிறம் போல் கறுத்து மேலெழும்பினவாம்… என்ன ஒரு கற்பனை.

சிவனைப் போல் வெண்மையான மேகங்கள் கடலில் புகுந்து திருமாலைப் போல் கறுத்து வெளிவந்தனவாம்.

கம்பன் காலத்திற்கு முன் சமய சண்டைகள் இருந்தன. பக்தி இலக்கியங்களில் கூட இதன் தாக்கத்தைப் பார்க்க முடியும். இந்த பின்னனியில் சமய ஒருமைபாடு, கடவுள் ஒருவனே என்கிற தனது கருத்தை மழைப் பெய்யும் வானியல் நிகழ்வில் ஏற்றி கூறியிருப்பது நயமிக்கது. மேகம் ஒன்றுதான் அதுவே சில காலங்களில் வெண்மையாகவும் சில காலங்களில் கறுத்தும் இருப்பது உண்டு. அது போலவே பரம்பொருள் ஒன்றுதான், அவனே பல வடிவங்களில் காட்சியளிக்கிறான் என்பதை குறிப்பால் காட்டியிருப்பார்.

சங்க இலக்கியங்களில் கூட இந்த மழை பெய்யும் நிகழ்வு மிக அழகாக கூறப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியத்தில் திருமாலும் அவர் அவதார காட்சிகளும் மிகவும் அதிகமாக பேசப்பட்டிருக்கும். ‘மாயோன் மேய காடுறை உலகம்’ என்று முல்லை நிலத்திற்கு மாயோன் அல்லது திருமாலே கடவுளாக சொல்கிறது தொல்காப்பியம்.

சங்க இலக்கியமான பத்துப்பாட்டு தொகுப்பில் முல்லைப்பாட்டில்

நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல,
பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி,
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை

இந்த உலகம் முழுவதும் நிறைந்து, வலப்புறமாக சுழி கொண்ட வலம்புரிச் சங்கையும் சக்கரத்தையும் கையில் கொண்டு மகாபலி சக்கரவர்த்தி இட்ட நீரைப் பெற்றதும் விஸ்வரூபமெடுத்து நின்ற திருமாலைப் போல் முகிலானது ஒலி முழங்குகின்ற குளிர்ந்த கடலிலிருந்து நீரைப்பெற்று வலப்புறமாகச் சுழன்று மலைகளை இடமாகக் கொண்டு எழுந்து மிகுந்த மழையைப் பொழிந்த சிறிய புல்லிய மாலை நேரம் என்று முல்லை நில கடவுள் திருமாலின் தோற்றமும் கார்கால மழைப் பொழிவும் அழகாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

மேலும்

நிறைகடல்முகந்துஉராய், நிறைந்து, நீர்துளும்பும்தம்
பொறைதவிர்புஅசைவிடப்பொழிந்தன்று, வானம்;


கடலில் நீரை முகந்து சென்ற மேகம் உரசும் போது தன்னிடமுள்ள நீர் தளும்பித் தாங்கமாட்டாமல் மழையாகப் பொழிந்தது என்று பரிப்பாடலும்

பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகிக்
காலை வந்தன்றால் காரே (அகம் 183)


கடல் முகந்து கொண்ட காமஞ் சூல்
மாமழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு (அகம். 43)
என்று அகப்பாடலும் மழைப் பொழிவைக் குறிப்பிடுகின்றன.


அடுத்ததாக திருக்குறளில் வள்ளுவரும்


நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

கடலிலிருந்து பெறப்பட்ட நீரை மழையாக பொழியாவிட்டால், அக் கடலும் கூட தன்தன்மை கெடும் என்பதைக் காட்டுகிறார்.

இது மழை பொழிதல் பற்றிய அறிவியல் அறிவு தமிழரிடையே அன்றே இருந்தமையைக் காட்டுகின்றது.

‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து’, வாழ உலகினில் பெய்திடாய்’ என்று வலியுருத்திச் சொல்லும் ஆண்டாளின் சிந்தனையும், வான் சிறப்பு என்று ஒரு அதிகாரத்தையே எழுதிய வள்ளுவரின் சிந்தனையையும் சற்று ஒப்பு நோக்குவோமே!!

வள்ளுவர் கடவுள் வாழ்த்திற்கு அடுத்ததாக ‘வான் சிறப்பு’ பற்றி கூறுவதே மழையின் முக்கியத்துவம் கருதியே! வானின்று பெய்யும் மழை உலகில் உயிர்கள் வாழ காரணமாயிருப்பதால் அதனை ‘அமிழ்தம்’ என்று கூறுகிறார். அதுமட்டுமல்ல

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

என்று கெடுக்கவல்லதும் மழை, கொடுக்கவல்லதும் மழை என்பதை காட்டுகிறார். அதை உணர்ந்தவளாதலால் ஆண்டாளும், தீங்கின்றி, வாழ உலகினில் பெய்திடாய்’ என்றுதானே கேட்கிறாள்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

மழை பொய்க்குமேயானால், பூமியில் மனிதர் செய்யும் விழாக்கள், பூசனைகள் எதுவும் நடைபெற இயலாது என்பது குறள். எனவே தான் ஆண்டாளும் நாங்கள் மார்கழி நீராடி மகிழ்ந்து நோன்பிருக்க மழையே பொழிவாயாக! என்கிறாள்.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

வானம் மழையை தராது போனால், பிறருக்காக செய்யப்படும் தானம், தமக்காகச் செய்யப்படும் தவம் இரண்டும் செய்ய இயலாமல் போகும். தானம் பிறருக்காக செய்யப்படும் சிறப்பு கருதி முதலில் கூறப்பட்டது. தவம் தமக்காகச் செய்யப்படுவதால் பிறகு கூறப்பட்டது. ஆண்டாளும் பாவைப்பாடலில்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

என்று முதலில் உலகம் வாழ வேண்டும் என்று பிறருக்காகவும் பின் நாங்களும் மார்கழி நீராடி மகிழ வேண்டும் என்று தங்களுக்காகவும் மழை வேண்டியிருக்கிறாள்.

இங்கு நாங்களும் என்று உம்மை இட்டுச் சொல்வதால் திருப்பாவையின் முதன்மையான நோக்கம் மனிதர் உய்யவேண்டும் என்பதாகக் கொள்ளலாம். திருக்குறளும் மனிதர் வாழ பாடிய அற நூல் அல்லவா!! இப்படி தமிழ் இலக்கியங்கள் சிறப்பான சிந்தனைகளை வெளியிட்டிருப்பது அறிந்து மகிழ மட்டுமின்றி பின்பற்றவும் தக்கது.

இப்பாவைப்பாடலில் ஆண்டாள் கையாண்டிருக்கும் உவமைகளின் அழகும் அறிய தக்கது. வடிவம், நிறம், வினை, பயன் என்ற நான்கு விதமாகவும் மழையை கண்ணனோடு ஒப்புமைப்படுத்துகிறாள்.

முதலில் ‘ஊழி முதல்வன் உருவம் போல்’ இங்கு வடிவ உவமை சொல்லப்படுகிறது. ஊழி காலத்தில் இறைவன் அனைத்தையும் தன்னுள் அடக்கியவனாக எங்கும் வியாபித்திருப்பான். அதுபோல் நல்ல மழைக்காலத்தில் வானமே கவிழ்ந்தது போல் இருட்டிக் கொண்டு பெய்வதை நாம் நினைத்துப் பார்த்தோமேயானால் இந்த உவமையின் அழகை நம்மால் உணரமுடியுமல்லவா? இன்று சாதாரண மழைக்கூட பொய்த்து போகிற காலத்தில் இவ்வியற்கை நிகழ்வை நாம் கற்பனைதான் செய்ய வேண்டியிருக்கிறது.

அடுத்ததாக ‘மெய் கறுத்து’ என்று நிறத்தில் உள்ள ஒற்றுமை சுட்டப்படுகிறது. முதல் பாடலில் ‘கார்மேனி செங்கண்’ என்று கார்கால மேகத்தைப் போன்று கரிய நிறம் கொண்டவன் கண்ணன் என்று சொன்ன ஆண்டாள், இப்பாடலில், கண்ணனின் நிறம் போல் நீயும் கறுத்து பெய் என மேகத்திற்கு அதிபதியான வருணனிடம் சொல்கிறாள்.

ஆயர்பாடி சிறுமிகளுக்கு மழை மிகவும் பரிச்சயமானது. மழையினால் தானே புற்கள் நிறைந்து பசுக்கள் செழுமையாக வளர்ந்தன. அதனால் தானே வருடா வருடம் இந்திரனுக்கு விழா எடுத்தார்கள். அதுமட்டுமல்ல அவர்கள் கண்ணனோடு வளர்ந்தவர்கள்! அவன் லிலைகளையும், கருணையையும் பேசுவதில் ஆர்வம் கொண்டவர்கள். எனவே, மழை போல் கரிய நிறம் கொண்டவனான கண்ணனைப் பாடுவோம் வாருங்கள் என்று முதல் பாடலில் அச்சிறுமிகளை அழைக்கிறாள்.

ஆனால் இப்பாடலில் மழைக்கு அதிபதியான வருணனனிடம் பேசுகிறாள். இயற்கை எல்லாம் கண்ணன் படைப்பல்லவா? கண்ணனை போல் அல்லவா மழை இருக்கிறது. எனவே மழைக்கதிபதியே! உன்னை படைத்தவனும் ஊழி முதல்வனுமான கண்ணனின் நிறத்தைப் போல் நீயும் கரிய நிறம் கொண்டு பொழி என சொல்வதுதானே தகும்.

மேலும் நீ அவன் கையில் கொண்ட சுதர்சன சக்கரத்தைப் போல் மின்னி, வலம்புரி சங்கான பஞ்ச சன்னியம் போல் அதிர்ந்து முழங்கி பொழிவாய் என்றும் கூறுகிறாள். இங்கு வினை உவமை சொல்லப்படுகிறது. வினை மட்டுமே ஒப்புமை படுத்தப்பட்டுள்ளது.

‘பத்மநாபன் ‘கையில் உள்ள சக்கரத்தைப் போல் மின்னி, சங்கை போல் முழங்கி என்று சொல்கிற அழகும் கவனிக்கத்தக்கது. ஊழி காலத்தில் இறைவன் அழிப்பது மட்டும் செய்வதில்லை. மீண்டும் அனைத்தையும் படைக்கவும் செய்கிறான் அல்லவா? பத்மநாபன் என்றால் நாபியிலே தாமரை மலரைக் கொண்டவன் என்பது பொருள். தாமரையில் உறைபவன் பிரம்மன், படைப்புக் கடவுள். எனவே ஊழி முதல்வன் உருவம் போல் என்று ஆரம்பித்தவள் பதமநாபனை சொல்வதும் பொறுத்தம் தானே!!

அதுவும் ‘பாழியந் தோளுடைப் பற்பநாபன்’. தோளுக்கு ஒரு சிறப்பு உண்டு. துன்பத்தில் ஒருவர் இருந்தால் நாம் என்ன சொல்வோம். அவருக்கு தோள் கொடுக்க வேண்டும் என்போம். சாய்ந்து கொள்ள தோள் வேண்டும் என்று சொல்வதில்லயா? ஏன் தோள். ஆதரவாக அனைக்கும் போது தோளில் சாய்ந்து அவ்வுயிர் ஆறுதலடைகிறது. இறைவனின் தோள் அனைத்து ஜீவராசிகளையும் இரட்சிக்கக்கூடியது. உயிர்கள் அவன் காலடியைத்தான் அடைகின்றன. ஆனால் அவற்றை தன் தோளில் தாங்கி அரவனைக்கிறான் இறைவன். எனவே பாழியந் தோளுடை பத்மநாபன் கையில்’ என்று பாடுகிறாள்

அடுத்து,

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

இங்கு சொல்லப்பட்டிருக்கும் சார்ங்கம் என்ற வில் விஷ்ணுவினுடைய வில். படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கு உதவியாக இந்த அண்டங்களையெல்லம் படைத்தவர் விஸ்வகர்மா. இவர் தேவலோகத்தின் சிற்பி. இவர் ஒரு அற்புதமான மூங்கிலிலிருந்து இரண்டு விற்களை செய்கிறார். ஒன்று பினாகம் எங்கிற சிவ தனுசு மற்றொன்று சார்ங்கம் எங்கிற விஷ்ணு தனுசு. இவை இரண்டிற்குமான கதை மிக வும் சுவாரஸ்யமானது, படித்தறிய வேண்டியது. இந்த சிவ தனுசுவைத்தான் இராமர் உடைத்து சீதையை மணந்தது.

வலிமைவாய்ந்த இந்த சார்ங்கம் என்ற விஷ்ணுவின் வில் பரசு இராமர் மூலமாக இராமருக்கு கிடைக்கிறது. கரன் என்ற அசுரனை வதைக்க இராமர் இதை பயன் படுத்தினார் என்று சொல்கிறது கம்ப இராமாயணம். இவ்வில் அற்புதமான வில். ஒரே ஒரு அம்பு, பலவாக மிகுந்து மழைப்போல் பொழியுமாம். அது நீர் தீ என வேண்டிய வடிவத்தில் பொழியும். இதை வருணனே பாதுகாக்கிறான். அதன் சிறப்பை நன்கு உணர்ந்தவன் என்பதால் மிகுதியாக பொழியும் சார்ங்கத்தின் அம்புமழைப்போல் மழையே நீ பெய்யவேண்டும் என்கிறாள்.

இங்கு வினை உவமையாயின் அது நலம் பயக்காது அல்லவா. சரமழை அழித்தது. ஆனால் ஆண்டாள் கேட்பதோ ‘வாழ பெய்யும்’ மழை. எனவே இங்கு பயன் உவமிக்கப் படுகிறது என்பதை அறியலாம். சார்ங்கத்தின் சர மழை அசுரர்களை அழித்து தேவரும் மனிதரும் வாழ வழி வகுத்தது. அது போல் மழையே இவ்வுலகில் உயிர்கள் வாழ நீ பெய்திடாய் என்று பாடுகிறாள்.

திருப்பாவை முழுவதுமே நாம் முன்பே பார்த்த படி நமது அறிவிற்கும், பக்திக்கும், ஞானத்திற்கும் ஏற்ப பலவாறு பொருள் கொள்ள முடியும். அதனால் தான் இராண்டாயிரம் படி, நாலாயிரம் படி, ஆராயிரம் படி என பல உரைகளை பெரியவர்கள் எழுதியுள்ளனர்.

ஆழிமழைக்கண்ணா என்பதை ‘ஆழிமழைக்கு அண்ணா’ என்று கொண்டு, இப்பாசுரம் இராமானுஜரைக் குறிப்பதாகவும் சொல்வதுண்டு. அவரே மழைப்போல் கருணையுடன் வைணவத்தை அனைவருக்குமானதாக அளித்தார். அதுமட்டுமல்ல ஆண்டாள் தான் செய்வதாக வேண்டிக்கொண்டவற்றை இராமானுஜர் செய்து முடித்ததால் காலத்தாற் முற்பட்ட ஆண்டாளே அவரை அண்ணனாக அழைத்ததாக வரலாறு உண்டு. இப்படி பல அற்புதமான உரைகள் திருப்பாவையின் நயத்தை நாம் சுவைக்கத் தருகின்றன.

அடுத்த பகுதியில் அந்த மாயனை வாயினால் பாடி மனத்தினால் சிந்திப்போம் வாருங்கள்…

No comments:

Post a Comment