வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்!
ஒரு நாட்டின் அடிப்படைத் தேவையான நீர்வளம் நில வளம், பொருள் வளம் என்று மூன்று வளங்களையும் காட்டும் மிகச்சிறந்த பாடல் இது. இந்தப் பாடலில் செழிப்பான ஒரு இயற்கை காட்சியை ஆண்டாள் நம் கண்முன்னே நிறுத்தியிருப்பாள்.
மழைப் பெய்யவேண்டும், மும்மாரி பெய்ய வேண்டும். அதுவும் தீங்கின்றி பெய்யவேண்டும். ஒரு மாதத்தில் 10 நாட்கள் வெயிலும் ஒருநாள் மழையும் இருந்தால் நிலத்தடி நீர் பெருகி, அவ்விடம் செழிப்பானதாக இருக்கும். உயிரினங்களுக்கு தீமை விளைவிக்காத மழையாக அது இருக்கும்.
பல வருடங்கள் மழையின்றி வறட்சியாலும் சிலவருடங்கள் மிதமிஞ்சிய மழையால் வெள்ளம் பெருகியதாலும் உயிரினங்கள் பட்டத் துன்பத்தை நாமறிவோமல்லவா? அதனால்தான் தீங்கின்றி நாடெல்லாம் மாதம் மும்மாரி பெய்ய வேண்டுகிறாள் ஆண்டாள்.
அப்படி ஆயர்பாடியில் மாதம் மும்மாரி பெய்ததனால் அங்கு நீர்வளம் மிகுந்து வயல்களில் நெற்பயிரானது ஓங்கி வளர்ந்திருந்தது.
இங்கு ஓங்கி என்ற சொல் உலகளந்த பெருமாளுக்கும் செந்நெற் பயிறுக்கும் அடையாக வருவது அறிந்து மகிழத்தக்கது.
திருவிக்கிரம அவதாரத்தில் மிகவும் குள்ளமான உருவம் கொண்ட வாமனன், மகாபலி இட்ட நீர் பட்டதும் மிக மிக உயர்ந்து விஸ்வரூபமெடுத்து உலகளந்த பெருமானாக திருவிக்கிரமனாக உயர்ந்து நின்றார். ஆயர்பாடியிலும் நீர் வளம் மிகுந்து இருந்ததால் நெற்பயிர்கள் எல்லாம் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருக்கின்றன. ஆளுயர கதிர்களல்ல அவை அதையும் தாண்டி வான் தொட உயர்ந்து நிற்கின்றன திருவிக்கிரமனைப் போல. ஒருவேளை ஓங்கி வளர்ந்த உத்தமனின் பாதர விந்தங்களை காண்பதற்காக தானும் ஓங்கி உயர்ந்து வளர்ந்தனவோ இந்நெற்பயிர்கள்!!
அப்படி உயர்ந்து வளர்ந்த நெற்பயிரின் ஊடாக, கயல் உகள. ஊடு, உகள என்பன அழகான தமிழ் வார்த்தைகள். இன்று வழக்கொழிந்து போயின. ஊடு என்றால் இடையே என்பது பொருள். ஊடுபயிர் கேள்வி பட்டிருப்போமில்லையா? முதன்மையாக விளைவிக்கக்கூடிய பயிருக்கு இடையில் வேறு பயிர்களை வளர்த்தல். இது விவசாய முறை. அதுபோல் உகள என்றால் துள்ளிச் செல்லுதல், நழுவிச் செல்லுதல். இந்த நெற் பயிகளிடையே மீன்கள் துள்ளி விளையாடுகின்றன.
இப்படி வயல்களில் மீன்கள் இருப்பது சங்க இலக்கியத்தில் நிறைய இடங்களில் காண முடியும்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர! (நற்றினை 210)
விதைப்புக்காக விதை கொண்டு சென்ற வட்டிலில் மீன் எடுத்துக் கொண்டு திரும்புவர் எங்கிறது நற்றினை.
நெடுநீர் பொய்கை பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர் கூட்டுமுதல் பிறழும் – (புறம் 287)
என்ற புறப்பாடலும்
கீழ்நீரால் மீன்வழங்குந்து
மீநீரான் கண்ணன்ன மலர்பூக் குந்து
கழிசுற்றிய விளை கழனி – புறம் 396
அதாவது வயலில், நீரின் அடியில் மீன், மேலே குவளை மலர், இவற்றுக்கிடையே நெற் பயிர் என்று மற்றொரு புறப்பாடலும் வயலில் மீன்கள் வாழும் நீர் வளச்சிறப்பை எடுத்துரைக்கின்றன.
அப்படியே ஆயர்பாடியிலும் வயற்பரப்பில் நெற்பயிர்கள் ஓங்கி வளர்ந்திருக்கின்றன. வயலில் உள்ள நீரில் மீன்கள் துள்ளித் திரிகின்றன. அங்கே மலர்ந்திருக்கும் குவளைப்பூக்களில் தேனுண்ட வண்டுகள் துயில்கின்றன. ‘கண்படுப்ப’ என்ற அழகான தமிழ் சொல்லை இங்கு பயன்படுத்தியிருப்பாள் ஆண்டாள். ‘கண்படுப்ப’ என்றால் துயில் கொள்ள என்று பொருள். தேனின் மிகுதியால் மயங்கிய வண்டுகள் மலர்களை மொய்க்கின்றன. மீன்கள் துள்ளித் திரிவதால் அம்மலர்கள் ஆடுகின்றன. அந்த ஆட்டமே தாலாட்டாக இவ்வண்டுகள் அம்மலரிலேயே தூங்கிவிடுகினறன.
அனுபவித்துப் பாருங்கள் பெரிய வயல்கள், ஓங்கி வளர்ந்த நெற்கதிர்கள், நீரில் மீன்கள் துள்ள, குவளைப்பூக்களில் வண்டுகள் அமர்ந்திருக்க, செழுமையான இவ்வியற்கை காட்சி நம் கண்முன்னே விரிகிறதல்லவா? இப்படி நீர்வளமும் நிலவளமும் மிக்கதாக உள்ளது ஆயர்பாடி. மேலும் ஆயர்பாடியில் பசுக்கள் எல்லாம் வள்ளல்களாக இருந்தன.
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
தயங்காமல் முன்வந்து ‘சீர்த்த முலை பற்றி வாங்க’, பாலை கறக்கக் கூட வேண்டாம். முலையைத் தொட்டாலே தானே கறந்து குடம் நிறைக்குமாம் இப்பசுக்கள். ஆயர்பாடியில் பசுக்கள் ஏராளம். நந்தகோபாலன் வீட்டில் மட்டும் ஏழு இலட்சம் பசுக்கள் இருந்ததாம். இவ்வளவு பசுக்களை எப்படி கறப்பது. சோர்ந்து போக நேரும் தானே? கண்ணன் மேய்த்த மாடுகள் அல்லவா இவை! அவனது வேணு கானம் கேட்டுக்கேட்டு செழுமையாக வளர்ந்தவை அல்லவா இவைகள். அப்படி வளர்ந்த இம்மாடுகள் அவனுக்காக தானாக பாலை சுரந்தன. எனவே பாற்குடத்துடன் அருகே வந்து தொட்டாலே வள்ளல்களாகப் பொழியுமாம் இப்பசுக்கள். இப்படி வள்ளல் பெரும்பசுக்கள் என்று இரண்டு இடங்களில் ஆண்டாள் குறிப்பிடுகின்றாள். 21 ஆம் பாடலில்
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
என்று காட்டுகிறாள். சிறிது முயற்சியுடன் அவனை அடைய எண்ணினாலே அருள்வானல்லவா. இதோ நாங்கள் அடி பணிந்து வந்துள்ளோம், அருள் செய்ய எழுவாயாக என்பதாக அமைந்திருக்கும் அப்பாடல். இங்கு பொருள் வளம் மிக அற்புதமாக சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படி ஓங்கி உலகளந்த உத்தமனின் பேர் பாடி, அவனை நினைத்து நோன்பிபிருந்தால் செல்வம் பெருகும். அவன் புகழ் பாடக்கூட வேண்டாம், நாமம் சொன்னாலே நீங்காத செல்வம் நிறையும் என்பது ஆண்டாளின் வாக்கு.
இன்றும் இப்பாடலை ‘நீங்காத செல்வம் நிறைந்து வாழ்க’ என்று வாழ்த்தாக பெரியவர்கள் பாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இங்கு பசுக்கள் என்பன ஆச்சாரியர்கள் அல்லது குருவை குறிக்கும். அவர்கள் கண்ணனின் அருளால் என்றும் நீங்காத செல்வமாக இறையருளை அவனது திருவடி கமலத்தை பெற்றவர்கள். நாம் சிறு முயற்சி மட்டும் செய்து அவர்களை அடைந்தாலே போதும், வள்ளல்களாக அவர்கள் நமக்கு ஞானத்தை அருள்வார்கள்
மேலும், இறைவனின் அருளால் ஆச்சாரியர்களிடையே ஞானமாகிய பயிர் ஓங்கி வளர்ந்த்திருக்கிறது. அந்த ஆச்சாரியர்களை அடைந்த மீன்களாகிய சிஷ்யர்கள் ஞானம் தந்த இன்பத்தினால் மகிழ்ந்திருப்பர். மலர்ந்த மலரில் வண்டு உறங்குவது போல் இவர்கள் உள்ளத்தில் இறைவன் நீங்காது குடியிருப்பான் என்பதே இப்பாடலின் உட்கருத்தாய் அமைகிறது.
இவ்வாறாக இறைவனின் நாமம் சொன்னாலே தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்யும் என்று சொன்ன ஆண்டாள், ஆழி மழைக்கண்ணனை, ‘வாழ உலகினில் பெய்திடாய்’ என்று அழைக்கும் அழகை அடுத்த பாடலில் காண்போம்
No comments:
Post a Comment