புள்ளும் சிலம்பின
துயிலெடைப் பாடல்களான அடுத்த பத்து பாடல்களில் ஆண்டாள் மிக அற்புதமாக அதிகாலை நிகழ்வுகள் மற்றும் ஓசைகளை பதிவு செய்கிறாள் மையிருட்டு வானம் மெல்ல மெல்ல புலர்ந்து கிழக்கு வெளுப்பதை இந்த பத்து பாடல்களில் நாம் உணரமுடியும். பறவைகளும், விலங்குகளும் மனிதரும் எழுந்து தத்தம் கடமையைச் செய்ய, அழகாக ஒரு நாள் மலர்வதை எழுத்தோவியமாய் தீட்டியிருப்பாள் ஆண்டாள்.
திருப்பாவையின் ஆறாவது பாடல், துயிலெடையில் முதல் பாடல். இதில் மூன்று விதமான ஓசைகளை காட்டுகிறாள் ஆண்டாள்.
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
முதலில் புட்கள் சிலம்புகின்றன. சிலம்புதல் என்றால் ஒலி எழுப்புதல். பறவைகள் ஒலி எழுப்புகின்றன. இது அதிகாலை நேரம். அடர்ந்த மையிருட்டு என்பதால் எந்த பறவை என அடையாளம் தெரியவில்லை. அவ்வொலி கூட எங்கிருந்தோ வருகிறது. இருள் அகலா காலை நேரம் என்பதை மிக அழகாக காட்டுகிறாள்.
அடுத்ததாக புள்ளரையன் கோவிலில் வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்கிறது. புள்ளரையன் என்றால் புட்களுக்கெல்லாம் அரசன், கருடன் என்றும் கொள்ளலாம். அல்லது புள் கருடனை குறிப்பது என்பதால் கருடனின் தலைவனான பெருமாளைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
காலை ஆலயம் திறந்துவிட்டது, பக்தர்கள் வரலாம் என அறிவிக்க பெருமாள் கோவில்களில், குறிப்பாக கருடார்வாழ் சன்னதியின் அருகில் இருந்து சங்கு ஒலிப்பார்கள். அடர்ந்த இருள் கொண்ட அதிகாலை நேரத்தில் அவ்வெள்ளையான சங்கு பளிச்சென்று தெரியும். இதன் ஒலி வெகுதூரம் கேட்கும். இவள் கோவிலின் அருகில் இருக்கிறாள். எனவே அது பேரரவமாக கேட்கிறது. வேறு எந்த சத்தமும் இல்லாத அந்நேரம் இச்சங்கின் சத்தம் அதிகமாகக் கேட்பது இயல்புதானே! இது அனைவரையும் அழைப்பதால் விளிச்சங்கு எங்கிறாள்.
மூன்றாவதாக வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்தில் கொணடவர்களான முனிவர்களும் யோகிகளும் கூறும் ‘ஹரி’ எங்கிற ஒலி. பேரரவம் கேட்கிறது. இதை பேர் சொல்லும் அரவம் அல்லது பேரரவம் என்று இரண்டு விதமாகவும் கொள்ள முடியும்.
முனிவர்கள் முற்றும் துறந்தவர்கள், யோகிகள், இல்லறத்தில் இருந்தாலும் அதில் பற்றற்றவர்கள். இவர்கள் உள்ளத்தில் எப்பொழுதும் இறைவனை எண்ணி இருப்பவர்கள். இல்லறத்தில் இருக்கும் சாமான்ய மனிதரைக்காட்டிலும் முதலில் எழுபவர்கள். இவர்கள் மெள்ள எழுந்து ஹரி நாமத்தைச் சொல்கிறார்கள். அந்நாமத்தில் ஒலி கேட்கிறது. மீண்டும் இங்கு நாமம் சொல்வதை வலியுருத்துகிறாள் ஆண்டாள். அதுமட்டுமல்ல இவர்கள் மெள்ள எழுந்துதான் ஹரி என்று சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் பலராக இருப்பதால் பலரின் ஓசை ஒன்றாக பேரரவமாகக் கேட்கிறது.
இம்மூன்று ஓசையுமே இருள் விலகாத அதிகாலை நேரத்தைக் குறிக்கின்றன. இக்காலை நேரத்தில் பாவை நோன்பிருக்க நீராட வேண்டும் பெண்ணே எழுந்திராய் எனத் தன் தோழியை எழுப்புகிறாள்.
அடுத்த பாடலில் இந்த ஓசைகளின் நயம் இன்னும் அழகாக சொல்லப்பட்டிருக்கும்.
No comments:
Post a Comment