Sunday, 12 March 2023

பாவை’ பாடலில் ஓசை நயம்

பாவை’ பாடலில் ஓசை நயம்


கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

இப்பொழுது சற்று புலர்ந்து விடுகிறது. இருள் சற்று பழகிவிடுகிறது. அதனால் வெளியில் இருப்பவர்களுக்கு. ஆனைசாத்தன் தான் பேசுகிறது என்று தெரிந்து விட்டது பறவைகள் ஒலி எழுப்பும். பேசுமா? அதுவும் ஒன்றுடன் ஒன்று கலந்து பேசுமா? பேசுகின்றன. கீசு கீசு என்று பேசுகின்றன.

இங்கு பறவைகள் என்பது முன்பாடலில் சொன்ன முனிவர்களையும் யோகிகளையும் குறிப்பதாக வைத்துக் கொள்ளலாம். இவர்கள் வேதங்களும், மந்திரங்களும் சொல்லும் விஷயங்களையெல்லாம் தங்களுக்குள் கலந்து பேசி ஐயங்களை தீர்த்துக் கொள்வதும் அனுபவிப்பதுமாக இருக்கிறார்கள். இதுவே இங்கு பறவைகள் கலந்து பேசுவதாக இருக்கிறது.

கண்ணனைப் பற்றி அவர்கள் பேசுவதை கேட்பதே நமக்கு மிகுந்த இன்பம் தரக்கூடியதல்லவா? இந்த பேச்சுக்கூடவா உனக்கு கேட்க வில்லை பேய்ப் பெண்ணே! என்றழைக்கிறாள்.

இன்னும் பதிலில்லை. மற்றொரு நிகழ்வையும் அவளுக்கு உரைத்து எழுந்திருக்க மாட்டாளா என பார்க்கிறாள் ஆண்டாள்.

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

காசு, பிறப்பு என்பன ஆயர்குல மகளிர் அணியும் அணிகலன். காசு என்பது வட்டமாக இருப்பது. காசு மாலை என்பதில்லையா. வட்டமான தகடுகளை இணைத்து செய்யும் அணிகலன் இன்றும் பழக்கத்திலுள்ளது. பிறப்பு என்பது மணி போல் இருக்கும் தாலி. அதன் துளை வழியே இணைத்து கட்டிக் கொள்வார்கள். இவை ஒன்றுடன் ஒன்று உராய்ந்து கலகலவென ஓசை எழுப்புகின்றன. ஏன் தெரியுமா? அப்பெண்கள் தங்கள் கைகளை அசைத்து அசைத்து கடைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆயர்பாடியில் வெண்ணை கடையும் பானை மிகப் பெரியது. வள்ளல் பெரும் பசுக்கள் குடங்கள் நிறைய கொடுத்திருக்கின்றன அல்லவா? அதனால் பெரிய பானைகளில் தயிர் கடைவார்கள். மத்தும் சிறியதாக இருக்குமா. பெரியது, அதனால் ஒரு பெண்ணால் கடைய இயலாது. அதனால் குடத்தை நடுவில் வைத்து இருபெண்கள் இருபுறமும் நின்று கொண்டு மத்தில் கயிறுகளை பிணைத்து பிடித்துக் கொண்டு, முன்னும் பின்னுமாக கைகளை அசைத்து தயிர்கடைகிறார்கள். அதனால் அவர்கள் அணிந்துள்ள அணிகலங்கள் எல்லாம் கலகலக்கின்றன. அதனுடன் அம்மத்து முன்னும் பின்னும் உருள்வதால் எழுந்த மத்தின் ஓசையும் கேட்கிறது. அதுமட்டுமா அவர்கள் கடையும் தயிர் இருக்கிறதே, அதுவும் மிகவும் கெட்டியானது அதை மத்தால் உடைத்து சிலுப்ப தயிர் உடையும் ஓசையும் கேட்கிறது. இந்த ஒலிகளெல்லாம் நீ கேட்டிலையோ? என கேட்கிறாள் ஆண்டாள்

அதன் கூடவே, இப்படி கெட்டியான தயிரைக்கடையும் ஆய்ச்சியரின் கூந்தல் மணமும் வீடெங்கும் வீசுகிறது.

காலையில் எவ்வளவு எழுப்பினாலும் சினுங்கிக் கொண்டே தூங்கும் கணவன் கூட காபி வாசம் வந்ததும் எழுந்துவிடுவார் தெரியுமா? ஆழ்ந்த தூக்கத்தில் வாசம் தெரியாது. ஆனால் சற்று புலர்ந்தும் புலர்ந்த நேரத்தில், சுற்றி ஒலிகள் கேட்டாலும், கண்கள் திறக்காமல், தூங்கியும் தூங்காத நிலையில், நம்மால் வாசத்தை உணரமுடியுமல்லவா? அதனால் தான் ஆயர் பெண்களின் கூந்தல் மணம் பரவியிருக்கிறதே! உன்னை அது எழுப்பவில்லையா எனக் கேட்கிறாள்.

தயிர் கடைந்து வெண்ணை எடுப்பதற்கு புலர்ந்தும் புலராத அதிகாலை நேரம் தான் உகந்தது. இவ்வளவு நேரம் வெளியில் கேட்ட ஒலிகளைச் சொல்லிவந்தவள் இப்பொழுது வீட்டினுள் கேட்கும் ஒலிகளைச் சொல்கிறாள்.

முதலில் எங்கோ பறவை சிலம்பியது. பின் அருகே ஆனைசாத்தன் பேசியது பிறகு பெண்களின் அணிகலன் ஓசை கலகலக்கிறது. இன்னும் சன்னமான ஒலியான மத்தோசையும் கேட்கிறது. அதற்கும் மேலாக மிகச் சன்னமான தயிரரவம் கேட்கிறது. இப்பெண்களின் கூந்தல் வாசம் வேறு வீசுகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக கேசவனை இவர்கள் பாடவும், அப்பாட்டோசையும் கேட்கிறதே. அதை கேட்டவாறே படுத்துக்கிடக்கிறாயோ! எனக் கேட்கிறாள். முன் பாசுரத்தில் ஹரி என்று சொல்லும் ஒலி கேட்டு உன் உள்ளம் குளிரவில்லையா? என்று கேட்டவள் இப்பாசுரத்தில் கேசவனை நாங்கள் பாடுகின்றோமே! அதைக் கேட்டும் நீ படுத்தேக் கிடக்கிறாயே! உன் பொய் தூக்கத்தை கலைத்து எழுந்திரு எங்கிறாள்.

திருவெம்பாவையிலும் இப்படித்தான் கோழியும் குருகும் சிலம்புகின்றன. வெண்சங்கும் இயம்புகிறது. கேழில் விழுப் பொருளை இவர்களும் பாடிக்களிக்கிறார்கள்.

கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?

என்னே ஒரு அழகு! இறைவனை நினைக்கின்ற பொழுது இயற்கை அழகு இவர்கள் முன்னே விரிவது எவ்வளவு பொருத்தம். அதிகாலைப் பொழுதின் அழகை நம்மையும் உணரவைத்து விடுகிறார்களல்லவா!

தமிழ் இலக்கியங்களின் தாக்கம் கண்ணதாசனிடம் மிகுந்து இருந்ததை அவரது திரைப் பாடல்களில் கூட நாம் அதிகம் கேட்டிருப்போம். இந்த ஓசை நயம் இருக்கிறதே, இது கண்ணதாசனை வெகுவாக ஈர்த்திருக்கிறது அவரது ‘தைப்பாவை’ என்ற இலக்கியத்தில் ஒரு அழகான பாடல்

காளை மணியோசை களத்துமணி நெல்லோசை
வாழை யிலையோசை வஞ்சியர்கை வளையோசை
தாழை மடலோசை தாயர்தயிர் மத்தோசை
கோழிக் குரலோசை குழவியர்வாய்த் தேனோசை
ஆழி யலையோசை அத்தனையும் மங்களமாய்
வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ!
தோழியர் கைதாங்கத் தூக்கியபொன் னடிநோக
மேழியர்தம் இல்லத்து மேலெழுவாய் தைப்பாவாய்

என்ன ஒரு சந்த நயம். பாவை பாடலுக்கு இணையாக மிகச் சிறந்த பாடலல்லவா இது. களத்து மணி நெல்லோசை, வாழை இலையோசை தாழை மடல் ஓசை இதையெல்லாம் நாம் செவியால் கேட்பதைவிட இயற்கையை இரசிக்கும் மனத்தால் கேட்டால் அதிகம் உணரமுடியும். காளையின் கழுத்தில் மெல்லிய மணி கட்டியிருப்பார்கள். ஒரே ஒரு காளையின் கழுத்தில் உள்ள சிறிய மணி மெல்லிய ஒலி எழுப்பும். வயற்காட்டில் ஓங்கி வளர்ந்த நெற்பயிற்கள் அசையும் போது சலசலவென்ற ஓசை எழுப்பும். வாழை இலை ஓசை. கண்டிப்பாக அடுத்த முறை காற்றடிக்கும் போது வாழைமரத்தினருகில் சென்று இதை கவனிக்க வேண்டும். கோழிக் குரல் நம்மை எழுப்பும். குழவியர் வாய் தேனோசை நம்மை மயக்கும். கண்ணதாசன் இவ்வோசையில் மயங்கி இருப்பதை நம்மால் உணரமுடிகிறதல்லவா. வீட்டிற்குள் குழவியரின் மழலை ஒலியில் மயங்கி இருந்தவர், அப்படியே பரந்த ஆழியின் அலையோசையை இரசிக்க சென்று விடுகிறார். அதிகாலை கடலலையின் ஓசையைக் கேட்டிருக்கிறீர்களா? காற்றோடு அலைபேசும் அந்த அற்புத ஓசை நம் மனத்தினை அமைதி படுத்தும் அதிசய ஓசை. தைப்பாவை என்ற இப்பாவைப் பாடலையும் முழுதும் படித்து அதன் இனிமையை சுவைக்க வேண்டும்.

No comments:

Post a Comment