பிள்ளாய் எழுந்திராய்
ஆண்டாள் உள்ளே உறக்கிக்கொண்டிருக்கும் தோழியை வாசலில் நின்று எழுப்புகிறாள். முதல் தோழி, இவள் சற்று குழந்தைத் தனம் கொண்டவள் போலும், பிள்ளாய் எழுந்திராய்! என்று எழுப்புகிறாள். கண்ணனைக் குழந்தையாக இரசிப்பதில் மகிழ்பவள் அதனால் தான் அவளிடம் பூதகியைப்பற்றியும் கள்ளத்தனத்துடன் வந்த சகடனைப் பற்றியும் பேசுகிறாள். குழந்தை கண்ணனுக்கு மீண்டும் சங்கடம் வந்துவிட்டதோ என உடனே எழுவாளாம் அவள்.
வீட்டில் சிறுவர்களை எழுப்பும் போது, முதலில் நிதானமாக எழுந்திரு என்போம். சற்று நேரம் கழித்து நேரமாகி விட்டதே, இன்னும் எழவில்லையா என கேட்போம். அப்பொழுதும் எழவில்லை என்றால் இதோ ஆசிரியர் வந்துவிட்டார் என்றோ அப்பா வந்துவிட்டார் என்றோ, அப்பிள்ளையை சற்று பயமுறுத்துவோம் அல்லது அக்குழந்தைக்கு பிடித்த ஒன்றை சொல்லி எழுப்புவோம் அல்லவா.
இந்த முறையைத் தான் ஆண்டாள் கையாளுகிறாள். பிள்ளாய் எழுந்திராய் என்று கூப்பிட்டும் அவளிடமிருந்து பதில் இல்லை. பறவைகள் ஒலிக்கின்றன, சங்கோசை கேட்கிறதே இன்னும் எழவில்லையா ஏன கேட்கிறாள். பதில் இல்லை. பேய் முலை நஞ்சுண்டு, கள்ள சகடனை காலால் அழித்து, வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்தில் கொண்ட முனிவரும் யோகிகளும் ஹரி எங்கிறார்களே! அவ்வோசை உள்ளத்தில் புகுந்து குளிர்விக்க வில்லையா எங்கிறாள். கண்ணன் லிலைகளைக் கேட்டதும், உள்ளத்தில் அவனை கொண்டவளாதலால் அவன் நாமம் கேட்க உடனே எழுந்து விடுகிறாள்.
இங்கு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி என்பது சகடாசுரனை அழித்ததை மட்டுமல்லாமல் புணரபி ஜனனம் புணரபி மரணம் என்னும் நமது பிறவி சக்கரத்தை தனது திருவடி நிழல் தந்து இல்லாதாக்குவான் என்பதையும் குறிப்பதாக உள்ளது.
அடுத்தப் பாடலில் தோழியை பேய்ப் பெண்ணே என்றழைக்கிறாள். பேய்த் தனம் என்று நாம் எதைச் சொல்லுவோம். ஏதாவது ஒரு விஷயத்தில் மிகவும் தீவிரமாக இருந்தால், உனக்கென்ன பேயா பிடிச்சிருக்கு இப்படி நடந்து கொள்கிறாயே என்போம். அதீதமான நிலையது. இந்த தோழி, இறை பக்தியில் பேய்த்தனம் கொண்டவள். கண்ணனைப் பற்றி பேசுவதிலே அதீதமான ஈடுபாடு கொண்டவள் என்பதால் பேய்ப்பெண்ணே என்கிறாள். முனிவரும் யோகியரும் பேசுவதை நினைவு படுத்தினாலே எழுந்துவிடுவாள் என்பது ஆண்டாளுக்கு தெரியுமல்லவா?
அதுமட்டுமல்ல பொழுது புலர்ந்து விட்டது, ஆயர்பெண்கள் தமது அன்றாட வேலைகளை துவங்கி விட்டனர். இனி அவள் தூங்க இயலாது. தூக்கம் கலைந்தும் இன்னும் அவள் படுக்கையில் கிடக்கிறாள். அதனால் தான் நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ என்கிறாள்
இப்பெண்ணை ஆண்டாள் இன்னும் இரண்டு விதமாக அழைக்கிறாள். நாயக பெண்பிள்ளாய், தேசமுடையாய். இவள் தலைமை ஏற்கும் பண்புள்ளவள். இவள் பக்தியில் சிறந்தவள். வழிகாட்ட நல்லதுணை என்பதால் நாயக பெண்பிள்ளாய் என்று கூறுகிறாள். அதுமட்டுமல்ல அவள் ஞானத்திலே சிறந்தவள். ஞான ஒளி அவள் உள்ளத்தில் வீசுவதால் அவள் தேசமுடையாள் என்கிறாள்.
அடுத்தப்பாடலில் கோதுகலமுடைய பெண்ணே! என்றழைக்கிறாள். கோதுகலம் என்பதைத்தான் குதூகலம் என்று இப்பொழுது சொல்கிறோம். அப்படி மிகுந்த உற்சாகத்துடன் இருப்பவள் இவள். முந்தைய பாசுரத்தில் கண்ணனைப் பற்றி பேசினாலே உற்சாகம் கொண்டவளாய் எழுந்தாளல்லவா ஒரு தோழி. இவள் அவளையும் மிஞ்சி குதூகலமுடையவளாகிறாள்.
அன்பு கொண்டவர்கள் பற்றிய நினைப்பே உற்சாகம் தரும். அப்படி இருக்கையில் அவர்களை நேரில் காணப்போகிறோம் என்றால் மிகுந்த உற்சாகமாயிருக்குமல்லவா. அதுதான் குதூகலம். இவள் மிகுந்த பக்தியின் காரணமாக கிருஷ்ணானுபவத்தில் திளைப்பவள். கண்ணனும் இவளிடத்தில் அன்பை பொழிகிறான் என்பதால் இவள் குதூகலத்தில் இருக்கிறாள் எனலாம். அப்படிப்பட்டவளை அழைத்துக் கொண்டு சென்றால் கண்ணன் நமக்கும் அருள்வானல்லவா!
எனவே, கோதுகலமுடைய பெண்ணே! உன்னை அழைத்துக் கொண்டுச் செல்ல வேண்டும் என்பதாற்காக, பாவை களத்திற்கு செல்கின்ற மற்ற பெண்களையும் போகாமல் நிறுத்தி உன்னை வந்து அழைக்து நிற்கிறோம். எழுந்திரு.
அடுத்த பாடல்களில் தோழிகள் எல்லோரும் வந்து உன் முற்றத்தில் நின்று முகில் வண்ணன் பேரை பாடவும் நீ அசையாமலும் பேசாமலும் இருக்கிறாயே. இப்படியுமா உறங்க முடியும். பனி எம் தலையில் பெய்தாலும் பொருட்படுத்தாமல் உன் வாசலில் வந்து நிற்கிறோம். நம் மனத்திற்கினியானை பாட நீ வாயைக்கூட திறக்க மாட்டேன் என்கிறாயே. இனிமேலும் பொறுக்க மாட்டோம், எழுந்துவிடு. அப்படி என்ன அவ்வளவு பெருந்தூக்கம். அனைத்து இல்லத்தவரும் எழுந்து விட்டனர். இனியாவது எழுந்திரு என அழைக்கிறாள்.
இவ்வளவுக் கூறியும் எழவில்லை என்றால் அது துயில் அல்ல. அது பொய்த் தூக்கம், படுக்கையில் கிடக்கிறாள். துயிலவில்லை. எனவே உன் கள்ளத்தை தவிர்த்து எழு, எங்களை முன்னம் எழுப்புவதாய் வாய்மட்டும் பேசுபவளே, வெட்கமில்லாதவளே எழு என்று சொல்கிறாள்.
பிள்ளாய் எழுந்திராய் என்று துவங்கியவள் நாணாதவளே, வெறும் வாய்ப்பேச்சு பேசுபவளே, உன் கள்ள தூக்கத்தை ஒழித்து எழு என்று கடிந்தவாறு எழுப்புகிறாள். இது இயல்பு தானே!
இருந்தாலும் இப்பெண் இறை பக்தியில் சிறந்தவள். அதனால்தான் அருங்கலமே என்றழைக்கிறாள். நல்ல பாத்திரமாக இருந்தால் தானே பாலை பெற முடியும். இவள் மிகச் சிறந்த பக்தியுடையவள், இறையருள் பெற உகந்தவள் என்பதே ஆண்டாள் இங்கு காட்டுவது.
இங்கு எழுப்பப்படுவது நமது மனம். இறைவன்பால் அதைக் கொண்டு செல்லவேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. மனதில் உறுதி வேண்டும், வைராக்கியம் வேண்டும். மனம் உலக இன்பங்களில் கட்டுண்டு எழ மறுக்கும். அதை எள்ளி நகையாடித் தான் மாற்ற வேண்டும். இதைத்தான் இப்பாடல்கள் உணர்த்துகின்றன. இறைவனை அடைவதே வாழ்வின் பயன் என்பதை அறியா சிறு பிள்ளையாய் இருக்கிறாயே, பிள்ளாய் எழுந்திராய், உண்மையை உணர்ந்தாலும் சாக்கு போக்கு சொல்லி காலம் தாழ்த்துகிறாயே உன் கள்ளத்தனம் விடுத்து எழு என்பதாக அமைகிறது பாடல்.
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.
இங்கு குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே! என்றழைக்கிறாள். அரிது அரிது மானிடராதல் அரிதல்லவா? அப்படி மானிடராய் பிறந்து, குற்றங்கள் இல்லா மனத்தினராய் இறைவனை நினைத்தல் சிறப்பானது.
புன மயிலே! இவ்வார்த்தையை கம்பனும் எடுத்தாளுகிறான். ஆரண்ய காண்டத்தில் இராவணன் சீதையைக் காணும் காட்சியில் சீதை வனத்தில் உலவும் மயிலைப் போல் இருந்தாள் என்கிறார்.
அஃதாவது வனம் தான் மயிலுக்கு இயற்கையான வாழ்விடம். அங்கு தான் மிகுந்த அழகுடன் அது மிளிரும். ஆனால் கானகம் சீதையின் இடமல்ல என்றாலும் இராமனுடன் இருந்தாளல்லவா! இராமன் இருக்கும் இடம் அவளுக்கு அயோத்தியல்லவா, அதனால் இயல்பாக, வன மயிலின் சாயலுடன் அழகாக இருந்தாள்.
கண்ணனின் ஆயர்பாடியில் வாழும் இப்பெண்ணும் தனது உண்மையான தேஜஸுடன் விளங்குகிறாள். அதனால் தான் புன மயிலே என்கிறாள். இப்படி ஆண்டாள் தன் தோழிகளை அழைக்கும் விதம் அறிந்துணரத்தக்கது.
இப்பெண்கள் ஆச்சாரியர்களைக் குறிக்கிறனர். ஞானத்தில் திளைப்பவராகிய ஆச்சாரியர் துணையுடன் அவனை அடைதல் வேண்டும் என்பதே கருத்து.
அதுமட்டுமல்ல துயிலெடையின் முதல் பாடல் ஆண்டாளின் ஆச்சாரியரான பெரியாழ்வாரைக் குறிப்பதாக சொல்வதுவும் உண்டு. அவர் மிகுந்த குழந்தை உள்ளம் கொண்டவர். பிள்ளைத்தமிழ் என்ற இலக்கியம் வடிவு பெறாத அக்காலத்தில் இறைவன் மேல் கொண்ட பக்தியின் மிகுதியால் அவனுக்கு கண்ணேறு கழித்தவர் இவர். அவனை தாலாட்டி சீராட்டி, விளையாட்டி, நீராட்டி பாடல்கள் இயற்றியவர். இதனால் இப்பாடல் அவரை அணுகி வழிகாட்ட வேண்டுவதாய் அமைந்திருப்பதாகவும் சொல்வர்.
பாவையின் ஏழாம் பாடல் பேய்யாழ்வார் மற்றும் குலசேகராழ்வாரைக் குறிப்பதாகச் சொல்வர். பாடலின் சொற்களைக் கொண்டே அப்பாடல் எந்த ஆழ்வாரைக் குறிக்கிறது என்பதைக் காட்டுவார்கள். இப்படி பத்து துயிலெடை பாடல்களும் எந்த எந்த ஆழ்வார்களை குறிக்கிறது என்பதில் பல கருத்துகள் உண்டு என்றாலும் ஒவ்வொன்றும் திருப்பாவையின் சொல், பொருள் நயத்தை நமக்கு காட்டுவதாகவே உள்ளது.
No comments:
Post a Comment