Thursday, 16 March 2023

கீழ்வானம் வெள்ளென்று

கீழ்வானம் வெள்ளென்று

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

‘மா’வாய் பிளந்தான், குதிரை வடிவில் வந்த அசுரனை அவன் வாயைப்பிளந்து அழித்தான் அதனால் ‘மா’ வாய் பிளந்தான்.

கிருஷ்ண அவதாரமே கம்சனை அழிக்கத் தானே! என்றாலும்

வஸுதேவ ஸுதம் தேவம்-
கம்ச சாணூர மர்த்தனம்-
தேவகி பரமானந்தம்
க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.

என்று சாணூரன் என்ற மல்லனை அழித்ததையுமல்லவா சேர்த்து சொகிறார்கள். அவ்வளவு வலிமை வாய்ந்தவர்கள் சாணூரன் மற்றும் முஷ்டிகன் என்ற மல்லர்கள். இவர்கள் கம்சனின் தனி பாதுகாவலர்கள். இன்றைய கருப்பு பூனை, சிறப்பு பாதுகாப்பு படை என்றெல்லம் சொல்கிறோமே! அப்படிப் பட்டவர்கள். ஆனால் குழந்தை கண்ணனும் பலராமனும் இவர்களை மல்யுத்தத்தில் அழிக்கிறார்கள். அதனால் அவன் மல்லரை மாட்டிய தேவாதி தேவன். அவன் அறிவால் அறிய இயலாத மாயன். அவனை மாமாயன், மாதவன், வைகுந்தன் என்று நாமங்களைச் சொல்லி வணங்குவோம், நமக்கு வேண்டியதை அவனே ஆராய்ந்து தருவான் என்றழைக்கிறாள்.

இறைவனிடம் நாம் கேட்போமேயானால் நமக்குத் தெரிந்ததைத் தான் கேட்போம். ஆனால் அவனாக அருள்வானேயாகில் அது சிறந்ததாக இருக்குமல்லவா!

அடுத்து

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்

இங்கு புள்ளின் வாய் கீண்டான். கொக்கு வடிவத்தில் வந்த அசுரனை அவன் வாயைப்பிளந்து கொன்றான். அதனால் புள்ளின் வாய் கீண்டான்.

இங்கு பொல்லா அரக்கன் என்பது யாரை குறிக்கிறது. கம்சனையா? இல்லை. கம்சனை கிள்ளிக் களைய வில்லை கண்ணன். பின் யாரைக் குறிக்கிறது? பொல்லா அரக்கன் யார்? நல்ல அரக்கர்கள் இருக்கிறார்களா?

இங்கு இராமாவதாரம் பேசப்படுகிறது. இந்த பொல்லா அரக்கன் இராவணனே! ஏன்னென்றால் கம்சனோ அல்லது இரண்யனோ ‘தான்’ என்ற அகங்காரம் கொண்டவர்கள். அதனால் அழிந்தவர்கள். ஆனால் இராவணனோ பிறன் மனை கவர்ந்தவன். என்வே அவன் பொல்லா அரக்கனானான். கிள்ளி களைதல் என்பது, ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டால், உயிர் பிழைக்கச்செய்ய பாதிக்கப்பட்ட உறுப்பை களைவதில்லையா? ஒரு செடியில் அழுகிய இலையை கிள்ளி எறிந்து அச்செடியை காப்பதில்லையா? அவ்வாறே அறம் காக்க கிள்ளிக் களையப்படவேண்டியவன் இராவணன் என்பதால் அவன் பத்துத் தலைகளையும் களைந்து அழித்தான் இராமன்.

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்

அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை என்று வள்ளுவரும் கூறவில்லையா? எனவே இங்கு இராவண்னே குறிக்கப்படுகின்றான் என கொள்ளலாம்.

பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தவனின் கீர்த்திகளை பாடி மற்றப் பிள்ளைகள் எல்லாரும் பாவை களம் சென்றுவிட்டனர் என்கிறாள் ஆண்டாள். மீண்டும் மீண்டும் திருப்பாவையின் அடி நாதமான நாமார்ச்சனை இங்கு வலியுறுத்தப்படுகிறது.

முந்தைய பாடல்களில் பறவைகள் ஒலிக்க, முனிவரும் யோகியரும் ‘ஹரி’ நாமம் சொல்ல, பெண்கள் தம் அணிகுலுங்க தயிர் கடைய ஆயர்பாடியில் அழகான காலைப் பொழுது புலர்வதைப் பார்த்தோம். இப்பொழுது அங்கு கீழ் வானம் சற்று வெளுத்து விட்டது.

சாதாரணமாக உதய காலத்தில் வானம் ‘செவ்வாடை’ அல்லவா கட்டிக் கொள்ளும்? ஆனால் கதிரவன் தன் கரம் நீட்டாத காலைப் பொழுது இது. விடியலுக்கு முன் கீழ் வானம் வெளுத்திருக்கும் நேரமிது.

அப்படி மெல்லிய வெளிச்சம் பரவியதால் அடர்ந்த இருள் சற்று நீர்த்துப் போனது போல் இருக்கிறது. செடியோடும் மரத்தோடும் இருள் இணைந்திருக்க பரந்த வெளியில் வெளிச்சம் பரவியிருக்கிறது.

பனிப்பெய்யும் சில்லென்ற அக்காலைப் பொழுதில், சிறுவீடு மேய எருமைகளை அவிழ்த்து விடுகிறார்கள் ஆயர்கள். அவை புல்வெளி எங்கும் பரந்து நின்று அங்கொன்றும் இங்கொன்றுமாக பசும்புல் மேய்கின்றன.

எருமைகளும் இருள் நிறத்தின அல்லவா! அவை பரந்து அங்குகொன்றும் இங்கொன்றுமாக மேய்வது, அங்குமிங்குமாக இருள் குவியல் குவியலாக கவிழ்ந்து இருப்பதை ஒத்ததாக இருக்கிறது என்று எருமைகள் சிறுவீடு மேயப்புகும் அச்சிறுப் பொழுதை ஆண்டாள் தன் பாடலில் அழகாகக் காட்டியிருப்பாள்.

நகரில் வாழும் நாம் இவ்வழகை அனுபவிக்க முடிவதில்லை. இரவை பகலாக்கும் விளக்கு வெளிச்சம் இயற்கையை இருட்டடிப்பு செய்து விடுகிறது. ஆண்டள் பாடலில் அதை அனுபவிக்கலாம்.

சிறுவர்கள் படிக்கும் போது, நுனிப்புல் மேயாதே, ஆழ்ந்து படி என சொல்வது வழக்கமில்லையா. நுனிப்புல் மேய்வதுதான் சிறுவீடு மேய்தல். இரவு முழுதும் தொழுவத்தில் கட்டப்பட்ட மாடுகளை, பால் கறப்பதற்கு முன் வீட்டின் அருகிலுள்ள புல் வெளிகளில் மேய விடுவார்கள். அவை பனித்துளி படர்ந்த பசும் புற்களை மேயும். அதிக நேரம் விடமாட்டார்கள் இது அவ்வெருமை மாடுகளுக்கு சிற்றுண்டி போல். இப்படி சிறிய மேய்ச்சலுக்குப் பிறகு அவை அதிக பால் கொடுக்குமாம்.

பால் கறந்து கன்றுகளுக்கும் காட்டிய பிறகு மதிய நேரத்தில் தான் மேய்ச்சல் காட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். அங்கு கண்ணனின் குழலோசையுடன் அவை அதிக நேரம் மேயும். அது அவைகளுக்கு மதிய உணவு என்று வைத்துக் கொள்ளலாம்.

இங்கு எருமை மாடுகள் தான் சிறுவீடு மேய கிளம்பியிருக்கின்றன. பசுக்கள் மென்மையானவை. அக்காலைக் கடுங்குளிரை தாங்க இயலாதவை.

எருமைகள் சற்று கடினமான தோல் கொண்டவை. நமக்குத் தெரியாதா. எவ்வளவு முறை எருமைமாடு என்று திட்டியருப்போம் அல்லது திட்டு வாங்கியிருப்போம்.

ஆனால் இனி எருமை என்று திட்டுவாங்கினாலும் மிகவும் மகிழலாம். ஆண்டாள் வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் (பாடல் 3), மாற்றாதே பால் சொறியும் வள்ளற் பெரும் பசுக்கள் (பாடல் 21) என்று பசுக்களை செழிப்பான வள்ளல்களாக அடையாளம் காட்டினாளல்லவா? அதைவிட கூடுதலான சிறப்புடன் இவ்வெருமை மாடுகளை நமக்கு அடையாளம் காட்டுகிறாள். 12ஆவது பாடலில்

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும்

என்று காட்டுகிறாள். இவ்வெருமை மாடுகள் கன்றுகளை நினைத்த மாத்திரத்திலேயே அதன் முலைகளில் பால் வழியுமாம். அவ்வளவு தாய் பாசம் எருமைகளுக்கு.

சில வருடங்களுக்கு முன் கூட நம் நகரில் பசுக்களை இல்லத்திற்கு அழைத்து வந்து பால் கறந்து தருபவர் இருந்தனர். ஒரு வேளை அப்பசுவின் கன்று இறந்துவிட்டால் அவர் ஒரு வைக்கோல் அடைத்த கன்றை மாட்டின் முன் கட்டிவிட்டு பால் கறப்பார். பசுக்கள் கன்றை பார்த்தால் தான் கறக்கும். ஆண்டாள் கூட 11ஆம் பாடலில் ‘கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து’ என்று தானே சொல்கிறாள். ஆனால் எருமைகளோ கன்றை நினைத்த மாத்திரத்திலேயே பால் சொறியும். அதனால் தான் எருமைகளை ‘நினைத்து முலைவழியே நின்றுபால் சோர’ என்று காட்டியிருக்கிறாள்.

கம்பனும் பாலகாண்டத்தில் கோசல நாட்டின் அருமை கூறும் போது ‘மேதி கன்று உள்ளிக், கனைப்பச் சோர்ந்த பால்’ என்று கன்று என்று நினைத்த மாத்திரத்திலேயே பால் சுரந்ததாக எருமையைக் காட்டுகிறார். மேதி என்பது எருமையைக் குறிக்கும்.

பெரியாழ்வார் பெற்ற பெண்தானே இவள். இவ்வளவு நுனுக்கமாக பசுக்களையும் எருமைகளையும் அறிந்து வைத்திருக்கிறாளே! என்று ஆச்சரியப்படாதிருக்க முடியாது. இப்பாடல் திருப்பாவையில் ஆண்டாள் ஆய்குலப் பெண்ணாகவே வாழ்ந்தாள் என்பதற்கான அருமையான அடையாளம். அது மட்டுமல்ல அடுத்த பாடலில் மாமன் மகளே! மாமீர்! என்றழைத்து ஆயர்பாடியில் ஒரு சொந்தத்தை உண்டாக்கிக் கொள்கிறாள் ஆண்டாள்.

இதோ இம்மாமன் மகளுக்கு காலை எப்படி புலர்கிறது என்பதை காட்டுகிறாள் ஆண்டாள். பார்ப்போமே!

No comments:

Post a Comment