Saturday, 18 March 2023

மாமன் மகளே! மாமீர்

மாமன் மகளே! மாமீர்

ஆயர் பாடி அவளது சொந்த ஊர் என காட்ட எண்ணிய ஆண்டாள் மாமன் மகள் என்றும் மாமீர் என்றும் அழைத்தாளல்லவா!! அவள் எழவில்லை.

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

கிழக்கு வெளுத்து சிறிது வெளிச்சம் தெரிகிறது! அதுமட்டுமல்ல அத் தோழியின் மாடத்தில் சுற்றும் விளக்கெரிகிறது. அவ்விளக்கு தனக்குத் தானே சுற்றிக் கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டதாக தோன்றுகிறது. மாடத்தைச் சுற்றி விளக்கெரிவதாகக் கொண்டால் பல விளக்குகள் என்று தானே இருக்கவேண்டும். தூங்கும் போது பலவிளக்குகள் ஏற்றியிருக்காதல்லவா? இங்கும் ‘விளக்கெரிய’ என்று தானே வருகிறது. அதனால் இன்று உள்ளது போல் பலவித விளக்குகள் அன்றும் இருந்திருக்கலாம் என வைத்துக் கொள்ளலாம். இரவில் சிறிய விளக்கேற்றி வைப்பது பண்டைய பண்பாடு. இன்றும் சிலரிடம் இப்பழக்கம் இருக்கிறது.

விளக்கு வெளிச்சத்தில் அவள் படுத்திருப்பது இவர்களுக்குத் தெரிகிறது. அம்மாடம் நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட மாடம். இருள் அகலா காலையில் அம்மாணிக்கங்கள் ஒளிவீசுகின்றன. மாடத்தின் கதவுகளும் மணிகள் பதிக்கப்பட்டுள்ளது. இவளும் மிகுந்த செல்வச் சிறுமியாய் இருக்கிறாள் என்பது தெரிகிறது. இப்படி இருள் அகல காத்திருக்கும் அதிகாலை பொழுதை கண்முன் காட்டுகிறாள் ஆண்டாள்.

இவள் இன்னும் எழுந்திருக்கவில்லை. ஆனால் இவள் தாய் எழுந்து விட்டாள் போலும். மாமீர் உம்மகளை எழுப்பீரோ? என்று கேட்கிறாள் ஆண்டாள். மாமீர் உம்மகள் என்ன ஊமையோ, பதிலிருக்காமலிருக்கிறாளே! அல்லது நம் வார்த்தைகள் அவள் காதில் விழவில்லையோ, அவள் செவிடோ! மயக்கத்தில் இருக்கிறாளோ அல்லது மந்திரத்தால் பெருந்தூக்கத்தில் கட்டுண்டாளோ! மாமீர் அவளை எழுப்பீரோ எங்கிறாள்.

நாமும் நமக்கு நல்வழி காட்டும் ஆச்சார்யர்களின் சிந்தனைகளை செவி மடுக்காது, அவர்கள் காட்டும் வழி செல்லாது, உலக இன்பத்தில் கட்டுண்டு கிடக்கிறோம். என்பதே இங்கு காட்டப்படுகிறது.

இப்பாடல்களில் பொழுது புலர்வதின் அடையாளமாக பறவைகள் ஒலிக்கின்றன. அடர்ந்த இருள் மெல்ல மெல்ல விலக வெளிச்சம் பரவுகிறது. இருள் இன்னும் முழுமையாக அகல வில்லை என்றாலும் ஒளி பரவ துவங்குகிறதாக காட்டுகிறாள். நம் மனத்தில் அறியாமை இருள் படர்ந்து இருக்கிறது. ஆச்சாரியர்களின் உபதேசத்தை நாம் கேட்கத் துவங்க, பொழுது புலர்வதைப்போல் மனம் தெளிவடையத் துவங்குகிறது. ஹரி நாமம் சொல்லி, அன்றாட கடமைகளைச் செய்து வந்தாலே அவ்விருள் முழுமையாய் விலகும் படி நம்முள் ஞான வெளிச்சம் பரவும் என்பதே இங்கு சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment