கும்பகர்ண தூக்கம்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
பொழுது புலர ஆரம்பித்து விட்டது. ஆயர் பெண்களும் ஆண்களும் தத்தம் கடமையைச் செய்யத் துவங்கிவிட்டனர். பாவை நோன்பிற்காக செல்வோரின் தலையில் பனி பெய்து கொண்டிருக்கிறது. அதை பொருட்படுத்தாமல் தோழியின் முற்றத்தில் நின்று எழுப்புகிறார்கள். இதற்கு பிறகும் உறங்கிக்கொண்டே இருக்கும் பெண்களிடம் ஆண்டாள் சற்று கேலியாக பேசத் துவங்குகிறாள்
எங்களுக்கெல்லாம் நோன்பிருந்து வழிகாட்டுவதாக கூறிய நீ இன்னும் எழுந்திருக்காமல் உறங்குகிறாயே? கதவைத் திறக்கவில்லை என்றாலும், மறுமொழியாவது பேசக்கூடாதா! முன்பு இராமனால் வதைக்கப்பட்ட கும்பகர்ணன் தன் பெருந்துயிலை உன்னிடம் தந்துவிட்டுச் சென்றானோ என கேட்கிறாள். அதுவும் கும்பகர்ணன் போட்டியில் இவளிடம் தோற்று தன் பெருந்துயிலை இவளுக்குத் தந்துவிட்டானாம். தூக்கத்தில் கும்பகர்ணனையே வென்றவள் என்று கேலி பேசுகிறாள். அதிக நேரம் தூங்குபவர்களை கும்பகர்ணன் என்று இன்றும் சொல்கிறோம் அல்லவா? இந்த கேலி பேச்சை ஆண்டாள் அன்றே கூறியிருக்கிறாள்.
கும்பகர்ணன் தனது தவ வலிமையால் நித்தியத்துவம், மரணமில்லாவாழ்வை பெற விரும்புகிறான். ஆனால் சரஸ்வதி அவன் நாவை பிரளச் செய்ய நித்திரைத்துவத்தை, நீண்ட தூக்கத்தை வரமாக பெறுகிறான். அதனால் அவன் ஆறு மாதம் தூங்குவான் ஆறு மாதம் விழித்திருப்பான். அதனால் அவனது உறக்கம் பெருந்துயில்.
மனிதராகிய நாமும் கிட்டத்தட்ட வாழ்நாளில் பாதியை தூக்கத்தில் தானே கழிக்கிறோம். அதனால் தானே தொண்டரடி பொடியாழ்வாரும்
"வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்
பாதியு முறங்கிப் போகும் ……..."
எனவே எனக்கு மனிதப்பிறவி வேண்டாம் என்கிறார். என்றாலும் நமது உறக்கம் என்பது பெருந்துயில் அல்லவே! இவள் வெகுநேரம் உறங்குகிறாள். எனவே இவளது பேருறக்கம் கும்பகர்ணன் தந்துச் சென்றதுதானோ!
இப்பாடலில் கண்ணனை, நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியன் என்கிறாள். பெருமாளுடைய கிரீடம் மிகுந்த மதிப்பு வாய்ந்தது. நவரத்தினங்களும் அரிய மணிகளும் பதிக்கப்பட்டு இருக்கும். என்றாலும் எளிமையான வாசனை மிக்க துளசியை தன் தலையில் சூடிக் கொள்ளவதைத்தான் விரும்புவானாம் கண்ணன். இறைவன் எளிமையானவன். அவன் நாமம் சொல்லி போற்றினாலே நமக்கருளும் புண்ணியன் அவன்.
No comments:
Post a Comment