கண்ணன் கண்ணழகும், கன்னியர் கண்ணழகும்
புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
போதரிக் கண்ணினாய், போது என்றால் மொட்டு மலரும் போது காணப்படும் சற்றே விரிந்த நிலை. அரி என்றால் வண்டு இவள் விழிகள் சற்றே திறந்திருக்கின்றன. மலரில் கரிய வண்டிருப்பது போல் இவள் விழியில் கரிய கண்மணிகள் தெரிகின்றன. அதனால் தான் போதரி கண்ணினாய் எங்கிறாள். பெண்ணே உன் கண் சொல்கிறது நீ தூங்க வில்லை. கட்டிலில் படுத்துக் கிடக்கிறாய். உன் கள்ளம் தவிர்த்து எழுந்திராய் எங்கிறாள். மலர்களின் வெவ்வேறு நிலைக்கான பெயர்கள் அறிந்து உணரத்தக்கவை.
அரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை
நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை
முகை - நனை முத்தாகும் நிலை
மொக்குள்-"முகை மொக்குள் உள்ளது நாற்றம்"-திருக்குறள்
(நாற்றத்தின் உள்ளடக்க நிலை)
முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்
போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
மலர் - மலரும் பூ
பூ - பூத்த மலர்
வீ - உதிரும் பூ
பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்
செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை
இதேபோன்று கண்ணழகை இன்னும் ஒரு இடத்திலும் ஆண்டாள் காட்டுகிறாள். இது கண்ணனின் கண்ணழகு. கண்ணன் பையத் துயின்ற பரமன் அல்லவா! இது இப்பெண் போல் பொய் தூக்கமன்று. நப்பின்னையுடன் கட்டிலில் உறங்கும் அமைதியான உறக்கம். கண்ணனை எழுப்பி ஆண்டாள் பறை கொள்ள வேண்டும், இதோ பாடுகிறாள்.
22ஆம் பாடலில்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ?
சதங்கை, கொலுசு போன்ற ஆபரணங்களில் ஒலி எழுப்பும் கிங்கிணி சற்று விரிந்திருக்கும். அப்பொழுதுதான் ஒலி மென்மையாய் ஒலிக்கும். அப்படி கிங்கிணிப் போல் கொஞ்சமாய் விரிந்த நிலையில் தாமரைப்பூ இருக்கிறதாம். அத்தாமரை மலரைப்போல் கண்ணனின் கண்கள் இருக்கிறதாம். அடடா என்ன அழகு! எண்ண, எண்ண, அழகு இந்த உவமை நயம். செயற்கையான கிங்கிணியின் அழகும் இயற்கையான தாமரையின் அழகும் இணைந்து, எல்லாமுமான கண்ணனின் கண்ணழகில் தெரிந்தது பொருத்தம் தானே!
கண்ணனின் கண்கள் தாமரைப் போல் சிவந்த நிறங்கொண்டவை, முதல் பாடலிலேயே கார்மேனி, செங்கண் என்றாளல்லவா? அவையும் சிறியதாக விரிந்திருக்கின்றன. சிலர் உறங்கும் போது கண்கள் முழுமையாக மூடிக் கொள்ளாமல் இமைகள் பிரிந்த நிலையில் இருக்கும் அல்லவா. அப்படித்தான் கண்ணன் உறங்குகிறான். ஆண்டாள் கண்ணனின் கண்களைக் காண்கிறாள். சற்றே இமைகள் பிரிந்த நிலையில் கண்மணிகள் தெரிவது கிங்கிணி போன்று தெரிகிறது. அவன் கண்களோ சிவந்த நிறமானவை. விரிந்த நிலையில் கிங்கிணி போலிருந்தாலும் நிறத்திலும் பண்பிலும் வடிவிலும் அவை தாமரையை ஒத்திருக்கின்றன. அதனால் கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல’ விளங்கும் உன் சிவந்த கண்களால் எம்மேல் மெல்ல விழியாவோ! என்று மென்மையாய் எழுப்புகிறாள். கண்ணன் மெல்ல எழுவானா? நம்மை நோக்குவானா? என்று அவன் கண்ணழகில் நம்மனமும் ஒன்றிவிடுகிறதல்லவா?
இன்னும் இப்பாடலை படிக்கும் போது
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
என்ற வரிகள் நமது செவியில் பின்னனி இசையாக ஓலிப்பதை நாம் கேட்கலாம். யாரால் மறக்க இயலும் இவ்வழகிய பாடலை. ஆண்டாள் எழுத்தோவியமாக வடித்த இந்த விடிந்தும் விடியாத காலைப் பொழுதும், மலர்ந்தும் மலராத பாதி மலர்போல கண்வளரும் அழகும் கண்ணதாசன் போன்ற ஒரு பெரும் கவியரசனை பாதிப்பது இயல்பு தானே! அதன் பயனாய் நம் புலங்களுக்கு இனிய விருந்தாய் பல பாடல்கள் கிடைத்திருப்பது நமது பாக்கியம் அல்லவா!!
இதோடு முடியவில்லை அவன் கண்ணழகை இன்னமும் வியக்கிறாள் ஆண்டாள். கிங்கிணியும் தாமரையும் நம்கைகளில் ஏந்தி பார்க்கக்கூடியவை. குட்டி குதூகலம் அவை. ஆனால் கண்ணனின் கண்பார்வை நம்மேல் பட்டாலோ நம் பாபங்களெல்லாம் போகும் அல்லவா! அவ்வளவு பெருமைவாய்ந்தவை அல்லவா அவன் கண்கள். அக்கண்களின் பெருமையை நினைக்கும் போது ஆண்டாளுக்கு மிகப்பெரிய விஷயங்களான சூரியனும் சந்திரனும் நினைவிற்கு வருகின்றன, ஒருகண் திங்களைப் போல் தண்ணளி தரும் அதேநேரத்தில் மறுகண் சூரியனைப் போல் உயிர்களைக் காக்கும் வெப்பத்தையும் அல்லவா தருகின்றது! அதனால் தான்
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
என்று பாடுகிறாள். செயற்கையானதோ இயற்கையானதோ, சிறியதோ பெரியதோ, அனைத்திலும் அவனையேக் காண்பது தானே ஆண்டாளின் அன்பு. அந்த அன்பால் நம்மையுமல்லவா கண்ணனிடம் கொண்டு சேர்க்கிறாள் ஆண்டாள்.
No comments:
Post a Comment