Sunday, 26 March 2023

செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்

செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்

இன்னும் இத் துயிலெடைப் பாடல்களில் மிக அற்புதமான சில இயற்கை நிகழ்வுகளை ஆண்டாள் பதிவு செய்திருக்கிறாள். வெள்ளி (வீனஸ்) கிரகமும் வியாழம் (ஜீபிடர்) கிரகமும் ஒன்றாக தெரிவது குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழக்கூடிய ஒரு வானியல் நிகழ்வு. இது சற்று அடிக்கடி நிகழக்கூடியது. ஆனால் வெள்ளி அதிகாலையில் கிழக்கில் எழும் போது வியாழன் மேற்கில் மறைவது பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை நிகழக்கூடியது, இது மார்கழி மாதத்தில் விடியலுக்கு முன்பாக துல்லியமாக நடைபெறும் என்று அறிவியல் கூறுகிறது, இந்நிகழ்வு 8 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்ததாக வரலாறு உண்டு. இதனைக் கொண்டே ஆண்டாளின் காலமும் வயதும் கணக்கிடப்பட்டுள்ளது.

வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளுஞ் சிலம்பினகாண்

என்று இவ்வரிய நிகழ்வைத் தன் பாடலில் வைத்துள்ள ஆண்டாளின் ஞானம் வியக்கத்தக்கது. இன்று, சமகாலத்தில் நிகழும் பல அரிய நிகழ்வுகளில் தம் கவனத்தைச் செலுத்துவோரும் அதை அருமையாக படைப்புகளில் படைப்போரும் மிக அரிதே.

மேலும் பாவை தன் பாடலில்

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

இதுவும் விடியலுக்கு முன் தோன்றும் ஒரு அற்புத காட்சி. செங்கழுநீர் மலர் வைகறையில் மலரும். ஆம்பல் குவியத் துவங்கும். பகலில் ஆம்பல் குவிந்திருக்கும். இரண்டும் நீர்நிலை பூக்கள்.

இதே போன்ற காட்சியை மாலையில் கம்பன் காட்டுகிறான். மிதிலையில் இராமன் நடந்து வருகையில் அண்ணலும் நோக்குகின்றான் அவளும் நோக்குகின்றாள். இருவரும் மாறிபுக்கு இதயம் எய்தினர். அன்று மாலை வருகின்றது. இதை

விரை செய் கமலப் பெரும் போது
விரும்பிப் புகுந்த திருவினொடும்,
குரை செய் வண்டின் குழாம் இரியக்
கூம்பிச் சாம்பிக் குவிந்துளதால்,
உரை செய் திகிரி தனை உருட்டி
ஒரு கோல் ஓச்சி உலகு ஆண்ட
அரசன் ஒதுங்கத் தலை எடுத்த
குறும்பு போன்றது அரக்கு ஆம்பல்.

என்று காட்டுகிறான் கம்பன். மாலையில் சந்திரன் தோன்றுகிறது. தன்னிடம் குடியிருந்த இலக்குமியும் ஒலிக்கும் வண்டுகளின் கூட்டமும் தன்னிடமிருந்து நீங்கியதால் தாமரை, வாடி குவிந்ததாம். வலிமையோடு அரசாண்ட ஒரு மன்னன் வீழ்ந்துவிட ஒரு குறுநில மன்னன் தலையெடுத்ததைப் போல் சந்திரன் மேலெழும்பியதாம். அதுபோல் ஆம்பல் மலர்ந்ததாம்.

ஆமாம், சீதைக்கு இம்மாலை துன்பத்தையல்லவா தந்தது! சீதையின் தாமரை முகம் சூரிய குல திலகனாம் இராமனை காணமுடியாததால் வாடியதல்லவா!

கம்பன், சீதையின் மனநிலையை எடுத்துக் கூற இந்த இயற்கை நிகழ்வை உவமையோடு எடுத்தாண்டிருக்கும் அழகும், இதே இயற்கை நிகழ்வை, காலை மலர்வதை குறிக்க ஆண்டாள் காட்சி படுத்தியிருக்கும் அழகும் அறிந்து மகிழத் தக்கது.

இன்னும் நாம் முன்பே காண்டோம், கோவில்களில் கோவில் நடை திறந்துவிட்டதை அறிவிப்பதற்காக சங்கு முழங்கப்படும் என்று. இப்பொழுது பல கோவில்கள் திறந்துவிட்டன. அப்படி சங்கு முழங்க, காவி உடை அணிந்த துறவியர் அவரவர் கோவிலுக்குச் செல்கின்றனர்.

செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

இத் துறவிகள் காவி நிற உடையை அரையில் அணிந்திருப்பர், ஆனால் அவர் பற்கள் வெண்மை நிறத்தினவாய் இருக்கும். அவர்கள் அனைத்தும் துறந்தவர். எனவே இல்லதிலிருப்போர் பயன் படுத்தும் வெற்றிலை போன்ற பொருட்களை உபயோகபடுத்த மாட்டார்கள். அதனால் அவர் பற்கள் வெண்ணிறத்தனவாய் இருக்கும். ஆயின் இல்லத்திலிருப்போர் வெற்றிலைப் பாக்கு பயன் படுத்துவதால் அவர் தம் பற்கள் காவி நிறத்திலும், அவர் உடை வெண்ணிறத்திலும் இருப்பதைக் காண முடியும். இப்படி மிகத் துல்லியமாக பல நிகழ்வுகளை தன் பாடலில் பதித்து அதிகாலை வேளையை நம் கண்முன்னே காட்டும் அழகு அறிந்து இன்புறதக்கது.

இப்படி பங்கைய கண்ணானை, தன் மனத்திற்கினியானைப் பாட தோழிகளை எல்லாம் துயிலெழுப்புகிறாள் ஆண்டாள். எல்லே, இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ? எனக் கேட்க, இதோ அவள் முதன் முறையாக மறு மொழி கூறுகிறாள். இவர்களிடையேயான அழகிய உரையாடலை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

No comments:

Post a Comment