Monday, 27 February 2023

நெய்யுண்ணோம் பாலுண்ணோம்

நெய்யுண்ணோம் பாலுண்ணோம்


வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

எந்த ஒரு காரியத்தைச் செய்வதானாலும் கடைபிடிக்க வேண்டியது, தவிர்க்க வேண்டியது என இரண்டு வழிமுறைகள் உண்டு. சமீபத்தில் நம்மை பயமுறுத்தி வரும் கொரோனாவின் பிடியிலிருந்து தப்பிக்க கைக்கழுவுதல், முகக்கவசம் அணிதல் ஆகியவற்றைச் செய்தோம். பொது இடங்களுக்குச் சொல்லுதல், கூட்டத்தில் ஒருவர் மேல் ஒருவர் இடித்துக் கொண்டு நிற்றல் ஆகியவற்றை தவிர்த்தோமல்லவா? அவ்வாறே இந்நோன்பினுக்கு செய்யக்கூடியவை தவிர்க்க வேண்டியவை என சில சொல்லப்பட்டிருக்கிறது.

ஆயர்பாடியிலே பால் தயிர், வெண்னை, நெய் என்பன மிகுந்து இருக்குமல்லவா? இப்பெண்கள் பால் தயிர் கொண்டுதான் தங்கள் அன்றாட பணியை செய்யவேண்டியவர்களாய் இருப்பர். என்றாலும் நெய்யுண்ணோம் பாலுண்ணோம் எங்கிறார்கள்.

இப்படி தமக்கு பிடித்தமானதை விட்டுக்கொடுக்கும் பயிற்சி இருந்தால் நமக்கு வைராக்கியம் வளர்கிறது. இவ்வைராக்கியமே அனைத்து காரியங்களிலும் வெற்றிக்கு அடிப்படையாக அமைகிறது. இறை அனுபவத்திற்கும் அதுவே அடிப்படை. இதில் நம்மைச் சுற்றியுள்ள சிற்றின்பமாகிய உலக விஷயங்களில் ஈடுபாடு கொள்ளாமல் பேரின்பமாகிய இறைவனை நாட வேண்டும் என்பதே கருத்து.

அதுமட்டுமல்ல மையிடெழுதோம், மலரிட்டு நாம் முடியோம், அதாவது எங்களை அலங்கரித்துக் கொள்ள மாட்டோம். செய்யாதனச் செய்யோம்’ முன்னோர்கள் செய்யக்கூடாது என்று தடுத்தவைகளைச் செய்யோம். அனுபவத்தின் காரணமாக செய்யத்தகுந்தவையல்ல என சிலவற்றை காலம் காலமாகச் சொல்லிவருவார்கள். அதன் உண்மைப் பொருளை அறிய முற்படுதல் தவறல்ல. ஆனால் அதை உணராது தவிர்த்தல் தவறு. முன்னோர் சொல்லின் முக்கியத்துவத்தை நாம் இன்று கொரோனாவின் பிடியில் அறிந்தோமல்லவா?

அடுத்ததாக தீக்குரளை சென்றோதோம். இன்று இந்த புறஞ்சொல்லுதல் எவ்வளவு மலிவாகிவிட்டது. இப்படி கோபம், பொறாமை போன்ற உணர்வைத் தூண்டக் கூடியவற்றை செய்யோம்.

சரி, செய்யக் கூடியது என்ன? நாட்காலே நீராடி, விடியற் காலையில் நீராட வேண்டும். நோயின்றி இருக்க இது முக்கியமல்லவா?

அடுத்து பையத் துயின்ற பரமன் அடி பாடி, நாம் அடுத்தநாள் ஒரு இரயிலையோ, விமானத்தையோ பிடிக்கவேண்டும் என்றால் முழுமையாக அமைதியாகத் தூங்க முடியுமா? அதுவே நாளை ஞாயிறுக்கிழமை என்றால் எப்படி நிம்மதியாகத் தூங்குவோம். அப்படி எந்த பரபரப்பும் இல்லாமல் இறைவன் பாற்கடலில் பையத் துயில்கிறான். என்றாலும் உலக இயக்கத்திதை நடத்திக் கொண்டே இருப்பவனாக, பரமனாக, ஒப்பற்றவனாகவே விளங்குகிறான். அவன் புகழைப் பாடினாலே நாம் அவன் அருள் பெற முடியும் என்பதையே ஆண்டாள் இப்பாடலில் காட்டுகிறாள்.

‘ஐயமும் பிச்சையும் ஆந்துணையும் கைக்காட்டி’ இங்கு ஐயம் என்பது துறவியர் போன்றோர் நம்மை அணுகும் போது நாம் இடுவது. ஐயமிட்டு உண் என்று சொல்லவில்லையா?

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.


என்பது குறள். பிச்சை என்பது அவர் கேட்காமலே அவரது நிலைக்கண்டு நாம் கொடுப்பது. இப்படி ஐயமும் பிச்சையையும் செருக்கு இல்லாமல், நம்மால் இயன்றவரை கொடுக்க வேண்டும். இதுவே நாமுய்யும் வழி என்று பாடுகிறாள் ஆண்டாள்.

கொரோனாவில் பீடிக்கப்பட்டிருக்கும் இன்றைய நிலையை எண்ணிப் பாருங்கள். வைராக்கியம் எவ்வளவு முக்கியம். செய்யக் கூடாததை தவிர்க்கவும் செய்யவேண்டியதைச் செய்யவும் அடிப்படைத் தேவை இவ்வைராக்கியம். முடிந்தவரை தருமம் செய்யுங்கள். இறைவன் அருள்வான் என்ற நம்பிக்கையோடு காத்திருங்கள் என்பதை அன்றே ஆண்டாள் சொல்லிவைத்ததை எண்ணுங்கள்.

Saturday, 25 February 2023

சீர்மல்கும் ஆய்பாடி செல்வ சிறுமீர்காள்

சீர்மல்கும் ஆய்பாடி செல்வ சிறுமீர்காள்

திருப்பாவையில் சிறப்பான மார்கழி மாதத்தின் பௌர்ணமி நாளில் நோன்பை துவங்குகிறார்கள். யாரையெல்லாம் அழைக்கிறாள் ஆண்டாள். செழிப்பான ஆயர்பாடியில் உள்ள செல்வச் சிறுமிகளை அழைக்கிறாள்.

பழங்காலத்தில் செல்வம் என்பது பொருட்களைக் கொண்டே அறியப்பட்டது. குறிப்பாக ஆநிரைகள் ஒருநாட்டின் முக்கியமான செல்வமாக கருதப்பட்டன. தமிழில் புறத்திணையில் திணைப் பாகுபாடுகள் ஆநிரை கவர்தல், மீட்டல் என்பதன் அடிப்படையில் அமைந்திருப்பதை நாமறிவோம்.

பசுக்கள் நிறைந்த ஆயர்பாடி மிகுந்த செழிப்பானது. அங்கிருக்கும் சிறுமிகள் நேர்த்தியான அணிகலங்களை அணிந்தவர்கள், மிகுந்த செல்வ வளம் கொண்டவர்கள். அதனால் தான்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேல் ஓர் எம்பாவாய்



என்று ஆயர்பாடி சிறுமிகளை நோக்கி, நந்த கோபனின் குமரனும், யசோதையின் இளஞ்சிங்கமுமான, கரிய நிறமும் சிவந்த கண்களும் உடைய, ஒரே நேரத்தில் குளிர்ச்சியும் வெப்பத்தையும் தரக்கூடியவனான நாராயணனாக விளங்கும் கண்ணன் நாம் விரும்புவதைத் தருவான், அவனை வணங்குவோம் வாருங்கள் என்று அழைக்கிறாள்.

கூர்வேல் கொடுந் தொழிலன் நந்த கோபன் என்று நந்த கோபரை சொல்லியிருப்பாள். கோவலர்களின் தலைவனாகிய நந்தகோபன் ஏன் வேல் வைத்துக் கொண்டுள்ளான். அதுவும் கொடுந்தொழில் செய்யும் வேல். அந்த காலத்தில் ஆநிரைகளை காக்கும் போது, விலங்குகள் மந்தையை அழிக்காவண்ணம் அவற்றை தூரத்திலிருந்தே வேல் எறிந்து விலக்குவர். அதனால் கோவலர்கள் வேல் வைத்துக் கொள்ளுதல் வழக்கம். அதுமட்டுமல்ல கம்சன், கண்ணனை அழிக்க பல அசுரர்களை அனுப்புகிறான். அவர்களிடமிருந்து கண்ணனைக் காப்பாற்ற கூர்மையான கொல்லும் வேலை நந்தகோபன் கொண்டுள்ளான்.

இங்கு நந்தகோபர் என்று குறிப்பது ஆச்சாரியர்களை. இறைவன் ஆச்சாரியர்களுக்கு அடங்கியவன். குருவானவர் நமது மற்ற கோபம், வருத்தம், துன்பம் போன்ற அசுரர்களையெல்லாம் அழித்து இறையருள் பெற நமக்கு உதவுபவர் என்பதால் நந்தகோபர், கூர்வேல் கொடுந்தொழிலனாக இருக்கிறார்.

ஏரார்ந்த கண்ணி யசோதை என்பது அழகிய மலர் போன்ற கண்களை உடைய யசோதையைக் குறிக்கும். மேலும், தமிழில் கண்ணி என்பது இரண்டு வரிகளைக் கொண்ட பாடல். எனவே கண்ணி என்பது இங்கு ‘த்வையம்’ எனப்படும் இரண்டு வரிகள் கொண்ட சரணாகதி மந்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் இலக்குமியைக் குறிப்பதாகவும் கொள்ளப்படும்.

கண்ணனை, கார்மேனி செங்கண், கதிர் மதியம் போல் முகத்தானாகிய நாராயணன் என்று காட்டுகிறாள் ஆண்டாள். கார் மேகம் மிகுந்த உயரத்தில் இருக்கும் ஆனால் நமக்காக இறங்கி பூமியில் பொழியும், பரமபதத்தில் இருக்கக்கூடிய நாராயணனும் மிகப் பெரியவன் ஆனால் பக்தருக்காக கண்ணனாக இறங்கி அருள்புரிபவன். மழை, மேடு பள்ளம் பார்க்காமல் பொழியும், இறைவனும் பாரபட்சமற்றவன். யாதவ அரச குலத்தில் பிறந்தாலும் இடையர் குலத்தில் தானே வளர்ந்து பெருமை சேர்த்தான்.

அவனது கண்கள் கருணையால் சிவந்தவை. சூரிய கதிரில் உயிர்களுக்குத் தேவையான ஒளியும் வெப்பமும் உண்டு, நிலவில் தண்ணளி உண்டு. இறைவனோ வெப்பத்தையும் குளிச்சியையும் ஒருங்கே தருபவன். என்வே தான் அவன் கதிர் மதியம் போல் முகத்தான் என்றாள்.

கண்ணனை ‘கார்மேனி, செங்கண் என்று ஆண்டாள் கூறியிருப்பது 'செங்கணும், கரிய கோல மேனியும், தேரும் ஆகி, எங்கணும் தோன்றுகின்றான் என்ற கம்பராமாயண வரிகளை நமக்கு நினைவூட்டுகிறதல்லவா.

இப்பாடலில் சொல்லப்பட்டுள்ள ஆழ்ந்த இறை கருத்துக்களை பார்ப்போம்.

பசு என்பது ஜீவாத்மாவைக் குறிக்கும். இவ்வையகமே ஜீவர்களாகிய பசுக்கள் வாழும் ஒரு ஆயர்பாடிதான். அதனால் தான் அடுத்தப் பாடலில் ‘வையத்து வாழ்வீர்காள்’ என்று அழைக்கிறாள். மேலும் மனித பிறவி என்பது மிகவும் அற்புதமானது.

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனிததம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!


என்று திருநாவுக்கரசர் கூறவில்லையா? இறையருள் இருந்தால் மட்டுமே இவ்வையத்தில் மனிதராய் பிறந்து இறைவனை நினைக்க இயலும். இங்கு செல்வம் எனக் குறிப்பிடப்படுவது இறையருளை.

ஆயர் சிறுமியர் ஆபரணமாக அணிந்தது நற்பண்பு என்னும் அரிய அணிகலங்களை. மூழ்கி நீராடுதல் என்பது தன்னுள்ளே மூழ்கி தன்னை அறிந்து அதன் மூலம் இறைவனை அறியும் மெய்ஞானம் பெறுதலாகும்.

இறைவன் ஒருவனே அடைய கூடிய புருஷன். அனைத்து ஜீவாத்மாக்களும் அவனை அடைய விரும்பும் பெண்களே என்பது வைணவ தத்துவம். இப்பெண்களும் மெய்ஞானம் பெறுவதில், பக்தியில் முதல் படியிலேயே இருப்பதால் ‘சிறுமிகாள்’ எனவும் விளிக்கிறாள்.

எனவே இப்பாடலில் ஜீவர்களாகிய மனிதர்களுக்கெல்லாம், வாழ்வின் உண்மைப் பொருளை உணர்ந்து, ஆச்சாரியர்கள் அல்லது குருவின் துணைக் கொண்டு இறைவனாகிய பரம்பொருளை அடைய வழிகாட்டுகிறாள் ஆண்டாள்.

Thursday, 23 February 2023

திருப்பாவையில் கண்ணன் நாமாவளி

திருப்பாவையில் கண்ணன் நாமாவளி

மகாபாரதத்தின் ஒரு அத்தியாகமாக அமைந்து இருப்பது தான் விஷ்ணு சகஸ்ரநாமம். சகஸ்ரம் என்றால் ஆயிரம். நாமம் என்றால் பெயர் விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைச் சொல்லும் பகுதிதான் விஷ்ணு சகஸ்ரநாமம். இன்று எல்லோராலும் முக்கியமான இறைவணக்கமாக பாடப்படும் பகுதி இது. இறைவனின் கல்யாண குணங்கள் என்று சொல்லப்படுகின்ற அவனது பண்புகளின் அடிப்படையில் அமைந்ததுதான் இப்பெயர்கள். வேதத்தின் விளக்கமாக விளங்குபவை இந்நாமங்கள்.

விஷ்ணு சகஸ்ரநாமத்திற்கு இணையாக திருப்பாவையிலும் கண்ணனின் பல அவதாரங்களையும், லீலைகளையும், அவன் குணங்களையும் சொல்லும் பல பெயர்களை மிக எளிமையாக ஆண்டாள் பாடியிருக்கிறாள். திருப்பாவை தமிழில் ஒரு நாமாவளி என்றால் அது மிகையல்ல.

இறைவன் ஐந்துநிலைகளில் உணரப்படுகிறார்.

முதல் நிலை பரத்துவம், பரமபதத்தில் நாராயணனாக இருக்கும் நிலை. இதைக் குறிக்கும் விதமாகவே முதல் பாடலில் “நாராயணனே நமக்கே பறை தருவான்” என்று ‘நாராயணன்’ என்ற நாமம் குறிக்கப்படுகிறது.

வைணவத்தில் ‘நாராயணா’ என்ற நாமம் சரணாகதி தத்துவத்தை குறிப்பது. திருப்பாவை சரணாகதி தத்துவத்தை எளிதாக விளக்குகிறது.

எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் கண்ணனே உபாயம் அவனே சரணாகதிக்கு வழி காட்டுபவன், சரணாகதி செய்து நாம் அடைய வேண்டியதும் அவனையே. அவனே காரணம் அவனே காரியமுமாகிறான்.

பறையும் அவனே, பறை தருபவனும் அவனாகவே இருக்கிறான். நாராயணனே பறை, நாராயணனே தருவான் என்பதை குறிக்கும் விதமாகவே ‘ஏ’ காரம் இட்டுச் சொல்கிறாள். நமக்கே என்பது ‘கண்ணனையே சரணாகதி என்று நினைந்து வருவோருக்கே’ என பொருள் கொள்ள வேண்டும்.

திருப்பாவையில் 24 ஆம் பாடலில், என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான், இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்’ என்று ஆண்டாள் பறையாக அடைய விரும்பியது கண்ணனையே என்பதைச் சொல்லுகிறாள். 28 ஆம் பாடலில், ‘இறைவா நீ தாராய் பறையேலோர் என்பாவாய்’ என்று பறை தருபவன் கண்ணனே, அவனே இறைவன் என்றும் காட்டுகிறாள்.

இங்கு ‘அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி ‘என்ற திருவாசக வாசகம் ஒப்பு நோக்கத்தக்கது. இப்படி திருப்பாவை முழுவதும் இத்தத்துவம் பேசப்படுகிறது.

ஆனால் ஆண்டாள் தன்னை ஆய்குல பெண்ணாக வரித்துக் கொண்டுதானே இப்பாடல்களைப் பாடுகிறாள். ஆயர் குல பெண்களுக்கு வேதம் தெரியாது, தத்துவம் தெரியாது. அவர்கள் எளிமையானவர்கள். ஆனால் வேத்தின் உட்பொருளாய் விளங்கும் கண்ணனைத் தெரிந்தவர்கள். எனவேதான் பாவை நோன்பு என்ற இவ்வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வைணவத்தின் சரணாகதி தத்துவத்தை மிக எளிமையாக தந்திருக்கிறாள் கோதை.

இரண்டாவது நிலை பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் வியூக நிலை. எனவே ‘பையத்துயின்ற பரமனை’ இரண்டாவது பாடலில் பாடுகிறாள்.

மூன்றாவது நிலை, விபவம், அவதார நிலை. வேதங்களில் இறைவன் பூமியிலுள்ள அனைத்து பொருளாகவும் வானிலுள்ள அனைத்தாகவும் இவற்றிற்கு இடைப்பட்ட இடத்தில் இருப்பவையாகவும் இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டவனாகவும், அறிவால் அறியப்பட முடியாதவனாகவும் இருக்கிறான் எனச் சொல்லப்பட்டிருக்கும். இத் தன்மையை விளக்குவதே திருவிக்கிரம அவதாரம். இதே கருத்து திருவெம்பாவையில் ஐந்தாம் பாடலில் ஞாலமே, விண்னே பிறவே அறிவரியான், அறிவிற்கு அரிதானவன் என்பதாக இறைவனின் தன்மை சொல்லப்பட்டிருக்கும்.

திருப்பாவையில் திருவிக்கிரம அவதாரத்தை குறிக்கும் வகையில் ஓங்கி உலகளந்த உத்தமன் (பாடல் 3) என்றும் ‘அன்றிவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி’ (பாடல் 24) என்றும் பாடிக்களிக்கிறாள் ஆண்டாள்.

நாங்காவது நிலை அந்தர்யாமித்துவம், எல்லாவற்றிலும் இறைவன் உள்ளுறையும் நிலை. ஊழிகாலத்தில் இறைவன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியவனாகவும் மீண்டும் எல்லாவாற்றையும் படைப்பவனாகவும் எங்கும் வியாபித்திருப்பவனாகவும் விளங்குவான் இதனால் தான் அருமையாக ‘ஊழி முதல்வன்’ என்றும் ‘பத்ம நாபன்’ என்றும் நான்காவது பாடலில் பாடுகிறாள்.

ஐந்தாவது நிலை அர்ச்சை, வழிபடும் நிலை. அதனால் தான் ஐந்தாம் பாடலில் ஆண்டாள் இந்த நாமங்களைச் சொல்லி, மனம் மொழி மெய்களால் வழிபடுவதால் நாமடையும் நன்மையையும் சொல்லியிருக்கிறாள்.

தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடிமனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்…

இறையருளே வேண்டி, வேறு பயன் கருதாது தூய மனத்துடன், மலர்தூவி விழுந்து வணங்கி மெய்யாலும், வாயால் பாடி மொழியாலும், தியானித்து மனத்தாலும் வழிபட நமது பாவங்கள் எல்லாம் தீயிட்ட தூசாக அழிந்து போகும் என்பது ஆண்டாள் வாக்கு. அதனால் தான் 16 ஆவது பாடலில் ‘தூயோமாய் வந்தோம்’ என்றும் சொல்கிறாள்.

விஷ்ணுவின் நாமங்களில் முக்கியமானதாக 12 நாமங்களைச் சொல்லுவர். கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன்.

கேசவன் எங்கிற நாமத்தை இரு இடங்களில் காணலாம். 7ஆம் பாடலில் ‘கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ’ என்றும், 30 ஆவது பாடலில் ‘வங்கக் கடல் கடைந்த மாதவனை, கேசவனை என்றும் பாடியிருப்பாள்.

அதே போல் ருஷீகேசன் என்ற நாமத்தினை குறிக்கும் விதமாக ‘கதிர் மதியம் போல் முகத்தான்’ (பாடல் 1), திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல், அங்கணிரண்டுங் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்’ (பாடல் 22) என்றும் பாடியிருக்கிறாள்.

ஆண்டாள் 27, 28, 29 ஆகிய மூன்று பாடல்களிலும் கோவிந்த நாமத்தைச் சொல்கிறாள். கோ என்றால் பூமி, வராஹ அவதாரத்தில் பூமியை தேடிச் சென்று காத்தார் என்பதால் ‘கோவிந்தன்’, கோ என்றால் பசு கோவலர்களைக் காத்தவன் என்பதால் ‘கோவிந்தன்’, பசு என்பது ஐந்து இந்திரியங்களைக் குறிக்கும், இந்திரியங்களை அடக்கி ஆள்பவன் என்பதால் ‘கோவிந்தன்’ என பல வாறு பொருள் கொள்ளலாம். இன்றும் கோவிந்த நாம சங்கீர்த்தனம் மிகப் பெரிய அளவில் பக்தர்களால் வழங்கப் படுவதை நாமறிவோம். மேலும் ‘கோவிந்தா’,‘கோவிந்தா’, ‘கோ..விந்தா’, என்று மூன்று முறை நாமம் சொல்லி அழைப்பதும் வழக்கம். இதை குறிப்பதாகவே தொடர்ந்து மூன்று பாடல்களில் ‘கோவிந்த நாமத்தை சொல்லியிருக்கும் அழகு அறிந்து மகிழத்தக்கது.

இன்னும் வைகுந்தன், மாமாயன், மாதவன், தாமோதரன், முகில் வண்ணன், என்று பல நாமங்களையும் பாவைப் பாடலில் காணலாம்.

இப்படி கண்ணனை ஆண்டாள் பலவிதமாக அழைத்து பாடியிருப்பது திருப்பாவை முழுவதும் விரவி இருக்கும். இறைவனின் நாமங்களுக்கு சக்தி உண்டு. அவனது நாமங்கள் எல்லாம் மந்திரங்கள்.

திருப்பாவையின் முக்கிய கருத்தே நாமங்களைப் பாடுவதே. இதை ஆண்டாள் பல இடங்களில் கூறியிருக்கிறாள். “கேசவனைப் பாட” “பாடிப் பறை கொண்டு”, கீர்த்திமை பாடிப்போய்”, “முகில்வண்ணன்பேர் பாட”,” பங்கயக்கண்ணானைப் பாட” ‘’வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாட’ என பல இடங்களில் அவன் நாமம் பாடவேண்டும் என்பதை காட்டுகிறாள். எளிமையாக அவன் அருளைப் பெற ஆண்டாள் காட்டும் வழி அவன் நாமங்களை பாடுவதே.

கண்ணனை மட்டுமா, நப்பின்னை பிராட்டியையும், நந்த கோபாலன் மருமகளே, நப்பின்னாய், கந்தம் கமழும் குழலி, பந்தார் விரலி, கொத்தலர் பூங்குழல் நப்பின்னை, மைத்தடங்கண்ணினாய், செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை, திருவே என்று பலவாறாக அழைத்து மகிழ்கிறாள் கோதை.

திருப்பாவையை பாடப் பாட நாராயணன் அருளும், அவன் மார்பிலுறை திருமகள் அருளும் நமக்கு கிடைப்பது உறுதி என்பதை சொல்லவும் வேண்டுமோ!!

Sunday, 19 February 2023

பாடல் அமைப்பு

பாடல் அமைப்பு

திருப்பாவையில் முதல் 5 பாடல்கள் முன்னுரை போன்று நேன்பின் காலம், செய்ய வேண்டியது, தள்ள வேண்டியது, நோன்பின் பயன் என்பன சொல்லப் பட்டு பாயிரமாக அமைந்திருக்கும்.

ஆறாம் பாடல் முதல் 15ஆம் பாடல் வரையான அடுத்த பத்துப் பாடல்கள் துயிலெடை. அதாவது துயிலெழுப்புதல். முன்பு பா இலக்கணத்தில் ஒரு துறையாக, உட்பிரிவாக இருந்த துயிலெடை இன்று தமிழில் உள்ள 96 சிற்றிலக்கியங்களில் ஒன்றாக ‘பள்ளி எழுச்சி’ என்று தனி இலக்கியமாகப் பாடப்படுகிறது. முன்பு மன்னர்களை எழுப்புவதாகப் பாடப்பட்டது, பக்தி இலக்கிய காலம் தொட்டு இறைவனின் பள்ளி எழுச்சியாகப் பாடப்படுகிறது.

‘கதிரவன் குணதிசை சிகரம் வந்தடைந்தான்’ என்று துவங்கும் தொண்டரடிப் பொடியாழ்வாரின் அரங்கத்தம்மான் பள்ளி எழுச்சியும், ‘போற்றி என் வாழ்முதலாகியப் பொருளே’ என்ற மாணிக்கவாசகர் சிவபெருமான்மேல் பாடிய பள்ளி எழுச்சியும் படித்தறிந்து மகிழத்தக்கது. இவ்விரு இலக்கியத்திற்கும் உள்ள ஒற்றுமைகளையும் வாசகர் வாசித்து மகிழ வேண்டும்.

பாவை பாடல்கள் அனைத்திலும் துயிலெடை இலக்கணமாக பயின்று வரும். அதுமட்டுமல்லாமல் இத் துயிலெடைப் பாடல்களில் இருவர் பேசிக்கொள்வது போன்று உரையாடலாக அமைந்திருப்பதும் மிகவும் சுவாரஸ்யமான ஒன்று.

திருப்பாவையில் தம் தோழியரை எழுப்புவதாக அமைந்துள்ள இந்த பத்துப் பாடல்களும், உலக இன்பமாகிய தூக்கத்திலிருக்கும் ஜீவாத்மாகளை பேரின்பமாகிய இறைவனை அடையும் பொருட்டு எழுப்புவதாக அமைந்திருக்கும் பாடல்களாகும். மேலும் இப்பாடல்களில் 10 ஆழ்வார்களை எழுப்பி இறைவனை அடைய வழிகாட்ட வேண்டுவதாக பொருள் கொள்வதுவும் உண்டு.

அடுத்த 16,17 ஆகிய இரண்டு பாடல்களில் கண்ணனின் மாளிகையைச் சேர்ந்தவர்களையெல்லாம் எழுப்புவதாக அமைந்திருக்கும். சரணாகதி தத்துவத்தின் படி இறைவனை அடைய குருவின்/ஆச்சார்யர்களின் துணை தேவை. ஆழ்வார்கள் இறைவனையே ஆச்சாரியனாக பெற்றவர்கள். ஆழ்வார்களை ஆச்சாரியராக கொண்டு இறை தொண்டு செய்தவர்கள் குரு பரம்பரை எனப்படுகிறார்கள். குருவின் வழிகாட்டுதலோடுதான் இறைவனை அடைய வேண்டும் என்பதை காட்டும் விதமாக அமைந்தவை இப்பாடல்கள். வாயில் காப்பான் முதல் நப்பின்னை வரை எழுப்புவது நமக்கு பல நிலைகளில் குருவாக இருப்பவர்களின் துணை வேண்டுவதாகும்.

தொடர்ந்து 18 முதல் 23 வரையான 5 பாடல்களில் நப்பின்னையை எழுப்பி அவள் துணையுடன், கண்ணனை எழுப்புகிறார்கள். பகைவர்கள் உன்னை சரணடைவதைப் போல் நாங்கள் வந்தோம். நீ துயிலெழுந்து எம்மை நோக்கி யாம் வந்த காரியம் ஆரய்ந்து அருள்வாய்! திருவாகிய நப்பின்னையே அவனை துயிலெழுப்பி எமக்கருள்வாய்! என நப்பின்னைத் துணையுடன் கண்ணனை எழுப்புவதாக அமைந்தவை இப்பாடல்கள். வைணவத்தில் ஸ்ரீதேவியுடன் இருக்கும் திருமாலின் பாதாரவிந்தங்களைச் சரணடைவதுதான் சரணாகதி தத்துவம்.

கண்ணன் துயில் களைந்தான் போலும், அடுத்த 24 முதல் 29 ஆம் பாடல் வரை அவனது அவதார பெருமைகளையெல்லம் பாடி அவனைப் போற்றி ‘உன்னை அடைந்து உனக்கு தொண்டு செய்வதையே நாங்கள் எங்கள் பறையாகக் கேட்கிறோம், இறைவா பறை தருவாயாக என்று வேண்டுகிறார்கள்.

பறை என்பது விருப்பம், திருப்பாவையில், இறைவனை அடைந்து அவனுக்கு தொண்டு செய்யும் பாக்கியத்தையே தனது விருப்பமாக ஆண்டாள் கேட்பது உலகின் அனைத்து ஜீவாத்மாக்களும் உய்யும் வழி.

முடிவுரையாக முப்பதாவது பாடலில் பட்டர்பிரானின் மகளாகிய கோதை அருந்தமிழில் சொன்ன இம்முப்பது பாடல்களை உணர்ந்து படிப்பவர்கள் எங்கும், அவன் அருளாகிய செல்வம் பெற்று சிறப்புறுவர் என்று பலன் சொல்லி முடிகிறது.

திருப்பாவை பாடல்களின் பொருளை மூன்று விதமாக படிக்கவேண்டும். வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கும் பொருள் ஒன்று. அதன் உட்பொருளாக அமைந்திருக்கும் கருத்து ஒன்று. ஆழமாக விளக்கப்பட்டிருக்கும் தத்துவம் ஒன்று.

திருப்பாவையின் ஒவ்வொரு அடியும், சொல்லும் நம்மை சிந்திக்கச் செய்யும். தத்துவ அழகு மட்டுமா, சொல், பொருள் அழகும், மொழி அழகும் சிந்திப்போம்...

Saturday, 18 February 2023

ஆய்ச்சி பாவனை

ஆய்ச்சி பாவனை

ஆண்டாள் கண்ணனை அடைய விரும்புகிறாள். எப்படி அடைவது. இதற்கு முன் யாரெல்லாம் கிருஷ்ணானுபவத்தை அடைந்தவர்கள். அவர்கள் எப்படி அவனை அடைந்தார்கள் என்று எண்ணுகிறாள். அற்புதமான கிருஷ்ணானுபவத்தை அவன் நாமம் சொல்லியே மிக எளிதாக அடைந்தவர்கள் ஆயர்பாடியைச் சேர்ந்த ஆய்ச்சியர் என்பதை அறிகிறாள். அவ்வாறே தானும் கண்ணனை அடைய எண்ணுகிறாள்.

ஆண்டாளோ கலியுகத்தைச் சேர்ந்தவள், கண்ணன் பிறந்ததும், ஆய்ச்சியர் அவனை அடைந்ததும் துவாபர யுகத்தில். என்றாலும் கண்ணனின் லீலைகளையும், ஆய்ச்சியர் அனுபவத்தையும் கேட்டு கேட்டு வளர்ந்த ஆண்டாள், கண்ணன் மேல் கொண்ட காதலால் தன்னை பாவை நோன்பிருந்து கண்ணனை அடைய எண்ணும் ஒரு ஆய்குல பெண்ணாகவே வரித்துக் கொள்ளுகிறாள்.

அவள் மொழி ஆய்ச்சியர் மொழியாக மாறுகிறது, அவள் நடை உடையெல்லாம் ஆச்சியர் போலாகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரே ஆயர்பாடி ஆகிறது, வடபத்ர சுவாமியே கண்ணனாகிறார். தம் தோழியரெல்லாம் ஆய்குல பெண்களாகின்றனர். இதோ அவர்களை யெல்லாம் எழுப்பிக் கொண்டு கண்ணனை அடைய பாடுகிறாள் ‘பாவை.

அவளது இந்த கிருஷ்ணானுபவமே, அவளது உள்ளத்தின் கண்ணன் நினைவுகளே மொழிவழியாக வார்த்தைகளாகி, மிகச் சிறந்த பாசுரங்களாக, திருப்பாவையாக நமக்கெல்லாம் வழிகாட்டுகிறது.

இங்கு நம் நினைவிற்கு வரக்கூடியது இராமாயணத்தில் ஒரு அற்புதமான காட்சி, இராமன் காட்டுக்குச் செல்கிறான். உடன் சீதையும் இலக்குவணனும் புறப்படுகின்றனர். இலக்குவணன் புறப்படும் முன் தன் தாய் சுமித்திரையிடம் விடைபெற்றுக் கொள்கிறான் சுமித்திரை “இலக்குவனா இனி இராமன் இருக்கும் வனமே உனக்கு அயோத்தி, இராமனே உனது தந்தை, சீதையே உன் தாய். இனி இராமனின் சேவகனாக உடன் செல். என்கிறாள்.

இங்கும் ஒன்றை மற்றொன்றாக பாவித்தல் சொல்லப்பட்டிருக்கிறது.  என்றாலும் இலக்குவணனின் பாவனைக்கும் ஆண்டாளின் பாவனைக்கும் வித்தியாசம் உண்டு. ஆண்டாள் கண்ணனுடன் ஆயர்பாடியில் வளர்ந்த ஆய் குல பெண்ணாகவே தன்னை வரித்துக் கொண்டு பாவைப் பாடலை பாடியிருப்பாள். முதல் 29 பாடல்களிலும் அவள் பெரியாழ்வார் வளர்த்த பெண் என்பதை அறியவே முடியாது. முப்பதாவது பாடலில் மட்டும் தன்னை பட்டர்பிரானின் கோதையாக வெளிப்படுத்திக் கொள்கிறாள்.

மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாள்

மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாள்

 

மார்கழி மாதத்திற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. மனிதருக்கு மார்கழி மாதம் என்பது தேவருக்கு பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் விடியலுக்கு முந்தைய பொழுது. அறிவியல் பார்வையிலும் மனிதரின் செயல்பாடுகள் பிரம்மமுகூர்த்த நேரத்தில் மிகச்சிறப்பாக அமையும் என கண்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

எனவே மார்கழி மாதம் முழுதும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் (காலை 4 மணி முதல் 5.30 வரை) எழுந்து இறைவனை துதித்தல் என்பது பழக்கத்தில் இருந்துவருகிறது

இன்றும் மார்கழி மாதத்தின் முதல் நாளிலிருந்து தினம் ஒரு பாடலாக மாதம் முழுவதும், திருப்பாவையின் 30 பாடல்களும் அதிகாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் பாடப்படுகிறது.  முக்கியமாக 18 ஆம் நாள் ஆகிய திருவாதிரை நட்சத்திரம் கூடிய நிறைமதி நாள் அன்று முதல் இறைவனுக்கு பள்ளி எழுச்சியும், அவன் நாமங்களைச் சொல்லி போற்றியும் பாடுவது வழக்கமாக இருக்கிறது.

பாவை இலக்கியம்

பாவை இலக்கியம்

பாவை இலக்கியம் என்பது பிள்ளைத்தமிழ் இலக்கியம் போன்று தமிழுக்கே உரிய ஒரு சிற்றிலக்கிய வகை. இது பாவை நோன்பு மேற்கொள்ளும் பெண்கள் தம் தோழியரை அழைத்துக் கொண்டு பொய்கையில் நீராடி நோன்பு துவங்கும் நிகழ்வினைச் சொல்தாக அமையும்.

பாவை நோன்பு பற்றி சங்க இலக்கியங்களில் கூட குறிப்புகள் இருக்கின்றன.  இது தை நீராடல் என்றும் அம்பா நீராடல் என்றும் ஐங்குறுநூறு, கலித் தொகை ஆகிய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரிபாடலில் பாவை நோன்பினைப்பற்றி விளக்கமாகவே குறிக்கப்பட்டுள்ளது.

நாடு செழிக்கவும் நல்ல கணவரை அடையவும், மார்கழி மாத பௌர்ணமியும் திருவாதிரையும் கூடிய நாளில் பெண்கள் இந்நோன்பினை கடைபிடிப்பர். இதில் பெண்கள் தம் தோழியரையும் அழைத்துக் கொண்டு அதிகாலையில் ஆற்றங்கரையில் நீராடி, ஈரமான ஆற்று மணலில் ஒர் உருவம் செய்து சக்தியாக அதனை பாவித்து நோன்பிருப்பர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டாளும், மாணிக்கவாசகரும் இவ்வழக்கத்தை புதுப்பித்தனர் என்றே கூறலாம். பாவை நோன்பு என்ற பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் இலக்கியத்தில் சமய கருத்துக்களை விளக்கும் விதமாக இப்பாவைப் பாடல்கள் இருக்கின்றன. இதில் ஒன்று திருவெம்பாவை, மற்றது திருப்பாவை. மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் தன்னை பெண்ணாக எண்ணிக் கொண்டு சிவபெருமானின் அருள் வேண்டி பாடுகிறார். ஆண்டாள் திருப்பாவையில் தான் விரும்பிய கண்ணனுக்காக இப்பாவை நோன்பினை நோற்கிறாள்.

இப்பாவை பாடலின் சொல், பொருள் நயத்தை, அருந்தமிழின் அழகை, கூறப்பட்டுள்ள தத்துவத்தை அறிந்து படிப்பது இன்பம் பயப்பதாகும்.

Thursday, 16 February 2023

தீந்தமிழ் திருப்பாவை

தீந்தமிழ் திருப்பாவை

தமிழ் இலக்கியத்தில் 6 ஆம் நூற்றண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரையான காலத்தை பக்தி இலக்கிய காலம் என்பர். இக்காலத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இறைவன் மேல் பல பாடல்கள் பாடி, சமயத்தோடு தமிழையும் வளர்த்தனர்.

ஆழ்வார்கள் பன்னிருவரில் பெரியாழ்வார் என்று போற்றப்பட்ட விஷ்ணுசித்தர் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர், இவர் திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி போன்ற அற்புதமான இலக்கியங்களை படைத்துள்ளார். இவர் கண்ணன் மேல் கொண்ட பக்தியால் தன்னை தாயாக எண்ணிக்கொண்டு தாலாட்டு முதல் நீராட்டு வரை பல நிலைகளில் கண்ணனை நெக்குருகி பாடியுள்ளார்.  

விஷ்ணுசித்தர் மிகுந்த பக்தியோடு ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ரசாயி பெருமாளுக்கு கோவில் கட்டி, அங்கே நந்தவனம் அமைத்து, இறைவனுக்கு பூமாலை அணிவிக்கும் சேவையை செய்து வருகிறார். இவர் ஒருநாள், நந்தவனத்தில் துளசி மாடத்தின் அருகே ஒரு பெண் குழந்தையை கண்டெடுக்கிறார். பூமாலையையே தொட்டுப் பழகிய அவரது கைகளுக்கு அக்குழந்தையும் ஒரு பூமாலைப் போலவே இருக்கிறது. எனவே கோதா என்று பெயரிட்டு தன் பெண்ணாக வளர்க்கிறார். தமிழையும் கிருஷ்ண பக்தியையும் ஊட்டியே கோதையை வளர்க்கிறார் பெரியாழ்வார்.  

கண்ணனின் திருநாமத்தையும் அவனது லீலைகளையும் கேட்டு கேட்டு வளர்ந்த அவள் அவனையே அடையவேண்டும் என்று பக்தியின் உச்ச நிலையை அடைகிறாள்.

விஷ்ணுசித்தராக இருந்தவர், தனது உயர்ந்த பக்தியின் காரணமாகவே பெரியாழ்வார் என்று போற்றப் பட்டார். அவர் வளர்த்த பெண்ணல்லவா இவள்! உலக மனிதரை மணக்க விழையாமல் கண்ணனையே அடைய எண்ணுகின்றாள்.

பெரியாழ்வார் தொடுத்த பூமாலைகளெல்லாம் எவ்வாறு கண்ணனை அடைந்தனவோ அவ்வாறே அவர் வளர்த்த கோதையாகிய தானும் அவனையே அடையவேண்டும் என்று அவள் விரும்பினாளோ!!

கண்ணனையே தனது மணாளனாக வரித்துக் கொண்ட அவள் வடபத்ர சாயிக்கு அணிவிக்கத் தொடுத்த பூமாலைகளையெல்லாம் தான் அணிந்து கொடுத்து சூடிக் கொடுத்த சுடர்கொடியாகிறாள்.

பூமாலை மட்டுமா சூடிக் கொடுத்தாள்? அற்புதமான இப்பாமாலையை நாமனைவரும் உய்யுமாறு பாடியும் கொடுத்தாளல்லவா?

திருப்பாவையை இயற்றும் பொழுது ஆண்டாள் ஒரு சின்னஞ் சிறு சிறுமி. ஆனால் அவளது மொழி அறிவை நம்மால் வியக்காமலிருக்க முடியாது. திருப்பாவை கடினமான பா வகையான கொச்சகக் கலிப்பா வகையைச் சார்ந்தது. ‘திரு’ப்பாவை என்று சொல்வதாலேயே மேலான ஒன்றை அடைவதற்கான பாவைப் பாடல் என்பது புலனாகும். மேலும் திருப்பாவையில் ஆழ்ந்த வைணவ சரணாகதி தத்துவம் கூறப்பட்டிருக்கிறது.  அதனால்தான் திருப்பாவையை கோதோபநிஷத் என்றும் வேதமனைத்திற்கும் வித்து என்றும் பெரியோர் வழங்கினர்.

தீந்தமிழ் திருப்பாவை

முன்னுரை


ஆண்டாள் திருவடிகளே சரணம்

சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கி

என்று மாணிக்க வாசக பெருமான் அருளினாரல்லவா, அதன் படியே ஆண்டாளின் மிகுந்த அருளாலும், கண்ணனின் எல்லையில்லா கருணையினாலும், நோய் தொற்று பரவியிருந்த கால கட்டத்திலும், ஒரு நான்கு மாத காலமாக ‘திருப்பாவை’ யினை சிந்திக்கும் பேறு பெற்றேன்.

மொழிவளமும் பக்திச் சுவையும் இரண்டற கலந்திருக்கும் ‘திருப்பாவை’ பாசுரங்களை, பாடலுக்கு பொருள் விளக்கமாக அல்லாமல், தமிழோடும் பக்தியோடும் அணுகுவதே இப்பதிவின் நோக்கம். நான் படித்தும் கேட்டும் அறிந்த விஷயங்களே இப்புத்தகத்திற்கு வித்தானதால், சிந்தனைக்கு வித்திட்ட முன்னோர்கள் அனைவருக்கும் எந்தன் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

அருந்தமிழில் உள்ள ஒவ்வொரு இலக்கியமுமே கடல் போல் ஆழமானவை, அற்புதங்கள் நிறைந்தவை. ‘வேதமனைத்திற்கும் வித்து’ எனப்படும் கோதை ஆண்டாளின் ‘திருப்பாவை’ அதில் ஒன்று என்பதில் ஐயமில்லை.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும் – கோதைதமிழ்
ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.                                             வேதபிரான்பட்டர்

எனறார் போல் திருப்பாவையை அறியாத தமிழரே இல்லை என்றே சொல்லலாம். இந்த அற்புதக் கடலில் மூழ்கி திளைக்கும் யாரும் அவரவருக்கான முத்துக்களை அள்ளிக்கொள்ளலாம் என்பது சிறப்பு. ஐயைந்துமைந்துமாக முப்பதே பாடல்களில் இலக்கிய நயமும் ஆழ்ந்த சமய கருத்துக்களும் அமைந்துள்ள இப்பாடலில் தமிழையும் பக்தியையும் சேர்ந்தே சுவைப்போம்.