Saturday, 25 February 2023

சீர்மல்கும் ஆய்பாடி செல்வ சிறுமீர்காள்

சீர்மல்கும் ஆய்பாடி செல்வ சிறுமீர்காள்

திருப்பாவையில் சிறப்பான மார்கழி மாதத்தின் பௌர்ணமி நாளில் நோன்பை துவங்குகிறார்கள். யாரையெல்லாம் அழைக்கிறாள் ஆண்டாள். செழிப்பான ஆயர்பாடியில் உள்ள செல்வச் சிறுமிகளை அழைக்கிறாள்.

பழங்காலத்தில் செல்வம் என்பது பொருட்களைக் கொண்டே அறியப்பட்டது. குறிப்பாக ஆநிரைகள் ஒருநாட்டின் முக்கியமான செல்வமாக கருதப்பட்டன. தமிழில் புறத்திணையில் திணைப் பாகுபாடுகள் ஆநிரை கவர்தல், மீட்டல் என்பதன் அடிப்படையில் அமைந்திருப்பதை நாமறிவோம்.

பசுக்கள் நிறைந்த ஆயர்பாடி மிகுந்த செழிப்பானது. அங்கிருக்கும் சிறுமிகள் நேர்த்தியான அணிகலங்களை அணிந்தவர்கள், மிகுந்த செல்வ வளம் கொண்டவர்கள். அதனால் தான்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேல் ஓர் எம்பாவாய்



என்று ஆயர்பாடி சிறுமிகளை நோக்கி, நந்த கோபனின் குமரனும், யசோதையின் இளஞ்சிங்கமுமான, கரிய நிறமும் சிவந்த கண்களும் உடைய, ஒரே நேரத்தில் குளிர்ச்சியும் வெப்பத்தையும் தரக்கூடியவனான நாராயணனாக விளங்கும் கண்ணன் நாம் விரும்புவதைத் தருவான், அவனை வணங்குவோம் வாருங்கள் என்று அழைக்கிறாள்.

கூர்வேல் கொடுந் தொழிலன் நந்த கோபன் என்று நந்த கோபரை சொல்லியிருப்பாள். கோவலர்களின் தலைவனாகிய நந்தகோபன் ஏன் வேல் வைத்துக் கொண்டுள்ளான். அதுவும் கொடுந்தொழில் செய்யும் வேல். அந்த காலத்தில் ஆநிரைகளை காக்கும் போது, விலங்குகள் மந்தையை அழிக்காவண்ணம் அவற்றை தூரத்திலிருந்தே வேல் எறிந்து விலக்குவர். அதனால் கோவலர்கள் வேல் வைத்துக் கொள்ளுதல் வழக்கம். அதுமட்டுமல்ல கம்சன், கண்ணனை அழிக்க பல அசுரர்களை அனுப்புகிறான். அவர்களிடமிருந்து கண்ணனைக் காப்பாற்ற கூர்மையான கொல்லும் வேலை நந்தகோபன் கொண்டுள்ளான்.

இங்கு நந்தகோபர் என்று குறிப்பது ஆச்சாரியர்களை. இறைவன் ஆச்சாரியர்களுக்கு அடங்கியவன். குருவானவர் நமது மற்ற கோபம், வருத்தம், துன்பம் போன்ற அசுரர்களையெல்லாம் அழித்து இறையருள் பெற நமக்கு உதவுபவர் என்பதால் நந்தகோபர், கூர்வேல் கொடுந்தொழிலனாக இருக்கிறார்.

ஏரார்ந்த கண்ணி யசோதை என்பது அழகிய மலர் போன்ற கண்களை உடைய யசோதையைக் குறிக்கும். மேலும், தமிழில் கண்ணி என்பது இரண்டு வரிகளைக் கொண்ட பாடல். எனவே கண்ணி என்பது இங்கு ‘த்வையம்’ எனப்படும் இரண்டு வரிகள் கொண்ட சரணாகதி மந்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் இலக்குமியைக் குறிப்பதாகவும் கொள்ளப்படும்.

கண்ணனை, கார்மேனி செங்கண், கதிர் மதியம் போல் முகத்தானாகிய நாராயணன் என்று காட்டுகிறாள் ஆண்டாள். கார் மேகம் மிகுந்த உயரத்தில் இருக்கும் ஆனால் நமக்காக இறங்கி பூமியில் பொழியும், பரமபதத்தில் இருக்கக்கூடிய நாராயணனும் மிகப் பெரியவன் ஆனால் பக்தருக்காக கண்ணனாக இறங்கி அருள்புரிபவன். மழை, மேடு பள்ளம் பார்க்காமல் பொழியும், இறைவனும் பாரபட்சமற்றவன். யாதவ அரச குலத்தில் பிறந்தாலும் இடையர் குலத்தில் தானே வளர்ந்து பெருமை சேர்த்தான்.

அவனது கண்கள் கருணையால் சிவந்தவை. சூரிய கதிரில் உயிர்களுக்குத் தேவையான ஒளியும் வெப்பமும் உண்டு, நிலவில் தண்ணளி உண்டு. இறைவனோ வெப்பத்தையும் குளிச்சியையும் ஒருங்கே தருபவன். என்வே தான் அவன் கதிர் மதியம் போல் முகத்தான் என்றாள்.

கண்ணனை ‘கார்மேனி, செங்கண் என்று ஆண்டாள் கூறியிருப்பது 'செங்கணும், கரிய கோல மேனியும், தேரும் ஆகி, எங்கணும் தோன்றுகின்றான் என்ற கம்பராமாயண வரிகளை நமக்கு நினைவூட்டுகிறதல்லவா.

இப்பாடலில் சொல்லப்பட்டுள்ள ஆழ்ந்த இறை கருத்துக்களை பார்ப்போம்.

பசு என்பது ஜீவாத்மாவைக் குறிக்கும். இவ்வையகமே ஜீவர்களாகிய பசுக்கள் வாழும் ஒரு ஆயர்பாடிதான். அதனால் தான் அடுத்தப் பாடலில் ‘வையத்து வாழ்வீர்காள்’ என்று அழைக்கிறாள். மேலும் மனித பிறவி என்பது மிகவும் அற்புதமானது.

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனிததம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!


என்று திருநாவுக்கரசர் கூறவில்லையா? இறையருள் இருந்தால் மட்டுமே இவ்வையத்தில் மனிதராய் பிறந்து இறைவனை நினைக்க இயலும். இங்கு செல்வம் எனக் குறிப்பிடப்படுவது இறையருளை.

ஆயர் சிறுமியர் ஆபரணமாக அணிந்தது நற்பண்பு என்னும் அரிய அணிகலங்களை. மூழ்கி நீராடுதல் என்பது தன்னுள்ளே மூழ்கி தன்னை அறிந்து அதன் மூலம் இறைவனை அறியும் மெய்ஞானம் பெறுதலாகும்.

இறைவன் ஒருவனே அடைய கூடிய புருஷன். அனைத்து ஜீவாத்மாக்களும் அவனை அடைய விரும்பும் பெண்களே என்பது வைணவ தத்துவம். இப்பெண்களும் மெய்ஞானம் பெறுவதில், பக்தியில் முதல் படியிலேயே இருப்பதால் ‘சிறுமிகாள்’ எனவும் விளிக்கிறாள்.

எனவே இப்பாடலில் ஜீவர்களாகிய மனிதர்களுக்கெல்லாம், வாழ்வின் உண்மைப் பொருளை உணர்ந்து, ஆச்சாரியர்கள் அல்லது குருவின் துணைக் கொண்டு இறைவனாகிய பரம்பொருளை அடைய வழிகாட்டுகிறாள் ஆண்டாள்.

No comments:

Post a Comment