திருப்பாவையில் கண்ணன் நாமாவளி
மகாபாரதத்தின் ஒரு அத்தியாகமாக அமைந்து இருப்பது தான் விஷ்ணு சகஸ்ரநாமம். சகஸ்ரம் என்றால் ஆயிரம். நாமம் என்றால் பெயர் விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைச் சொல்லும் பகுதிதான் விஷ்ணு சகஸ்ரநாமம். இன்று எல்லோராலும் முக்கியமான இறைவணக்கமாக பாடப்படும் பகுதி இது. இறைவனின் கல்யாண குணங்கள் என்று சொல்லப்படுகின்ற அவனது பண்புகளின் அடிப்படையில் அமைந்ததுதான் இப்பெயர்கள். வேதத்தின் விளக்கமாக விளங்குபவை இந்நாமங்கள்.
விஷ்ணு சகஸ்ரநாமத்திற்கு இணையாக திருப்பாவையிலும் கண்ணனின் பல அவதாரங்களையும், லீலைகளையும், அவன் குணங்களையும் சொல்லும் பல பெயர்களை மிக எளிமையாக ஆண்டாள் பாடியிருக்கிறாள். திருப்பாவை தமிழில் ஒரு நாமாவளி என்றால் அது மிகையல்ல.
இறைவன் ஐந்துநிலைகளில் உணரப்படுகிறார்.
முதல் நிலை பரத்துவம், பரமபதத்தில் நாராயணனாக இருக்கும் நிலை. இதைக் குறிக்கும் விதமாகவே முதல் பாடலில் “நாராயணனே நமக்கே பறை தருவான்” என்று ‘நாராயணன்’ என்ற நாமம் குறிக்கப்படுகிறது.
வைணவத்தில் ‘நாராயணா’ என்ற நாமம் சரணாகதி தத்துவத்தை குறிப்பது. திருப்பாவை சரணாகதி தத்துவத்தை எளிதாக விளக்குகிறது.
எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் கண்ணனே உபாயம் அவனே சரணாகதிக்கு வழி காட்டுபவன், சரணாகதி செய்து நாம் அடைய வேண்டியதும் அவனையே. அவனே காரணம் அவனே காரியமுமாகிறான்.
பறையும் அவனே, பறை தருபவனும் அவனாகவே இருக்கிறான். நாராயணனே பறை, நாராயணனே தருவான் என்பதை குறிக்கும் விதமாகவே ‘ஏ’ காரம் இட்டுச் சொல்கிறாள். நமக்கே என்பது ‘கண்ணனையே சரணாகதி என்று நினைந்து வருவோருக்கே’ என பொருள் கொள்ள வேண்டும்.
திருப்பாவையில் 24 ஆம் பாடலில், என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான், இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்’ என்று ஆண்டாள் பறையாக அடைய விரும்பியது கண்ணனையே என்பதைச் சொல்லுகிறாள். 28 ஆம் பாடலில், ‘இறைவா நீ தாராய் பறையேலோர் என்பாவாய்’ என்று பறை தருபவன் கண்ணனே, அவனே இறைவன் என்றும் காட்டுகிறாள்.
இங்கு ‘அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி ‘என்ற திருவாசக வாசகம் ஒப்பு நோக்கத்தக்கது. இப்படி திருப்பாவை முழுவதும் இத்தத்துவம் பேசப்படுகிறது.
ஆனால் ஆண்டாள் தன்னை ஆய்குல பெண்ணாக வரித்துக் கொண்டுதானே இப்பாடல்களைப் பாடுகிறாள். ஆயர் குல பெண்களுக்கு வேதம் தெரியாது, தத்துவம் தெரியாது. அவர்கள் எளிமையானவர்கள். ஆனால் வேத்தின் உட்பொருளாய் விளங்கும் கண்ணனைத் தெரிந்தவர்கள். எனவேதான் பாவை நோன்பு என்ற இவ்வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வைணவத்தின் சரணாகதி தத்துவத்தை மிக எளிமையாக தந்திருக்கிறாள் கோதை.
இரண்டாவது நிலை பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் வியூக நிலை. எனவே ‘பையத்துயின்ற பரமனை’ இரண்டாவது பாடலில் பாடுகிறாள்.
மூன்றாவது நிலை, விபவம், அவதார நிலை. வேதங்களில் இறைவன் பூமியிலுள்ள அனைத்து பொருளாகவும் வானிலுள்ள அனைத்தாகவும் இவற்றிற்கு இடைப்பட்ட இடத்தில் இருப்பவையாகவும் இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டவனாகவும், அறிவால் அறியப்பட முடியாதவனாகவும் இருக்கிறான் எனச் சொல்லப்பட்டிருக்கும். இத் தன்மையை விளக்குவதே திருவிக்கிரம அவதாரம். இதே கருத்து திருவெம்பாவையில் ஐந்தாம் பாடலில் ஞாலமே, விண்னே பிறவே அறிவரியான், அறிவிற்கு அரிதானவன் என்பதாக இறைவனின் தன்மை சொல்லப்பட்டிருக்கும்.
திருப்பாவையில் திருவிக்கிரம அவதாரத்தை குறிக்கும் வகையில் ஓங்கி உலகளந்த உத்தமன் (பாடல் 3) என்றும் ‘அன்றிவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி’ (பாடல் 24) என்றும் பாடிக்களிக்கிறாள் ஆண்டாள்.
நாங்காவது நிலை அந்தர்யாமித்துவம், எல்லாவற்றிலும் இறைவன் உள்ளுறையும் நிலை. ஊழிகாலத்தில் இறைவன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியவனாகவும் மீண்டும் எல்லாவாற்றையும் படைப்பவனாகவும் எங்கும் வியாபித்திருப்பவனாகவும் விளங்குவான் இதனால் தான் அருமையாக ‘ஊழி முதல்வன்’ என்றும் ‘பத்ம நாபன்’ என்றும் நான்காவது பாடலில் பாடுகிறாள்.
ஐந்தாவது நிலை அர்ச்சை, வழிபடும் நிலை. அதனால் தான் ஐந்தாம் பாடலில் ஆண்டாள் இந்த நாமங்களைச் சொல்லி, மனம் மொழி மெய்களால் வழிபடுவதால் நாமடையும் நன்மையையும் சொல்லியிருக்கிறாள்.
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடிமனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்…
இறையருளே வேண்டி, வேறு பயன் கருதாது தூய மனத்துடன், மலர்தூவி விழுந்து வணங்கி மெய்யாலும், வாயால் பாடி மொழியாலும், தியானித்து மனத்தாலும் வழிபட நமது பாவங்கள் எல்லாம் தீயிட்ட தூசாக அழிந்து போகும் என்பது ஆண்டாள் வாக்கு. அதனால் தான் 16 ஆவது பாடலில் ‘தூயோமாய் வந்தோம்’ என்றும் சொல்கிறாள்.
விஷ்ணுவின் நாமங்களில் முக்கியமானதாக 12 நாமங்களைச் சொல்லுவர். கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன்.
கேசவன் எங்கிற நாமத்தை இரு இடங்களில் காணலாம். 7ஆம் பாடலில் ‘கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ’ என்றும், 30 ஆவது பாடலில் ‘வங்கக் கடல் கடைந்த மாதவனை, கேசவனை என்றும் பாடியிருப்பாள்.
அதே போல் ருஷீகேசன் என்ற நாமத்தினை குறிக்கும் விதமாக ‘கதிர் மதியம் போல் முகத்தான்’ (பாடல் 1), திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல், அங்கணிரண்டுங் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்’ (பாடல் 22) என்றும் பாடியிருக்கிறாள்.
ஆண்டாள் 27, 28, 29 ஆகிய மூன்று பாடல்களிலும் கோவிந்த நாமத்தைச் சொல்கிறாள். கோ என்றால் பூமி, வராஹ அவதாரத்தில் பூமியை தேடிச் சென்று காத்தார் என்பதால் ‘கோவிந்தன்’, கோ என்றால் பசு கோவலர்களைக் காத்தவன் என்பதால் ‘கோவிந்தன்’, பசு என்பது ஐந்து இந்திரியங்களைக் குறிக்கும், இந்திரியங்களை அடக்கி ஆள்பவன் என்பதால் ‘கோவிந்தன்’ என பல வாறு பொருள் கொள்ளலாம். இன்றும் கோவிந்த நாம சங்கீர்த்தனம் மிகப் பெரிய அளவில் பக்தர்களால் வழங்கப் படுவதை நாமறிவோம். மேலும் ‘கோவிந்தா’,‘கோவிந்தா’, ‘கோ..விந்தா’, என்று மூன்று முறை நாமம் சொல்லி அழைப்பதும் வழக்கம். இதை குறிப்பதாகவே தொடர்ந்து மூன்று பாடல்களில் ‘கோவிந்த நாமத்தை சொல்லியிருக்கும் அழகு அறிந்து மகிழத்தக்கது.
இன்னும் வைகுந்தன், மாமாயன், மாதவன், தாமோதரன், முகில் வண்ணன், என்று பல நாமங்களையும் பாவைப் பாடலில் காணலாம்.
இப்படி கண்ணனை ஆண்டாள் பலவிதமாக அழைத்து பாடியிருப்பது திருப்பாவை முழுவதும் விரவி இருக்கும். இறைவனின் நாமங்களுக்கு சக்தி உண்டு. அவனது நாமங்கள் எல்லாம் மந்திரங்கள்.
திருப்பாவையின் முக்கிய கருத்தே நாமங்களைப் பாடுவதே. இதை ஆண்டாள் பல இடங்களில் கூறியிருக்கிறாள். “கேசவனைப் பாட” “பாடிப் பறை கொண்டு”, கீர்த்திமை பாடிப்போய்”, “முகில்வண்ணன்பேர் பாட”,” பங்கயக்கண்ணானைப் பாட” ‘’வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாட’ என பல இடங்களில் அவன் நாமம் பாடவேண்டும் என்பதை காட்டுகிறாள். எளிமையாக அவன் அருளைப் பெற ஆண்டாள் காட்டும் வழி அவன் நாமங்களை பாடுவதே.
கண்ணனை மட்டுமா, நப்பின்னை பிராட்டியையும், நந்த கோபாலன் மருமகளே, நப்பின்னாய், கந்தம் கமழும் குழலி, பந்தார் விரலி, கொத்தலர் பூங்குழல் நப்பின்னை, மைத்தடங்கண்ணினாய், செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை, திருவே என்று பலவாறாக அழைத்து மகிழ்கிறாள் கோதை.
திருப்பாவையை பாடப் பாட நாராயணன் அருளும், அவன் மார்பிலுறை திருமகள் அருளும் நமக்கு கிடைப்பது உறுதி என்பதை சொல்லவும் வேண்டுமோ!!
No comments:
Post a Comment