Sunday, 19 February 2023

பாடல் அமைப்பு

பாடல் அமைப்பு

திருப்பாவையில் முதல் 5 பாடல்கள் முன்னுரை போன்று நேன்பின் காலம், செய்ய வேண்டியது, தள்ள வேண்டியது, நோன்பின் பயன் என்பன சொல்லப் பட்டு பாயிரமாக அமைந்திருக்கும்.

ஆறாம் பாடல் முதல் 15ஆம் பாடல் வரையான அடுத்த பத்துப் பாடல்கள் துயிலெடை. அதாவது துயிலெழுப்புதல். முன்பு பா இலக்கணத்தில் ஒரு துறையாக, உட்பிரிவாக இருந்த துயிலெடை இன்று தமிழில் உள்ள 96 சிற்றிலக்கியங்களில் ஒன்றாக ‘பள்ளி எழுச்சி’ என்று தனி இலக்கியமாகப் பாடப்படுகிறது. முன்பு மன்னர்களை எழுப்புவதாகப் பாடப்பட்டது, பக்தி இலக்கிய காலம் தொட்டு இறைவனின் பள்ளி எழுச்சியாகப் பாடப்படுகிறது.

‘கதிரவன் குணதிசை சிகரம் வந்தடைந்தான்’ என்று துவங்கும் தொண்டரடிப் பொடியாழ்வாரின் அரங்கத்தம்மான் பள்ளி எழுச்சியும், ‘போற்றி என் வாழ்முதலாகியப் பொருளே’ என்ற மாணிக்கவாசகர் சிவபெருமான்மேல் பாடிய பள்ளி எழுச்சியும் படித்தறிந்து மகிழத்தக்கது. இவ்விரு இலக்கியத்திற்கும் உள்ள ஒற்றுமைகளையும் வாசகர் வாசித்து மகிழ வேண்டும்.

பாவை பாடல்கள் அனைத்திலும் துயிலெடை இலக்கணமாக பயின்று வரும். அதுமட்டுமல்லாமல் இத் துயிலெடைப் பாடல்களில் இருவர் பேசிக்கொள்வது போன்று உரையாடலாக அமைந்திருப்பதும் மிகவும் சுவாரஸ்யமான ஒன்று.

திருப்பாவையில் தம் தோழியரை எழுப்புவதாக அமைந்துள்ள இந்த பத்துப் பாடல்களும், உலக இன்பமாகிய தூக்கத்திலிருக்கும் ஜீவாத்மாகளை பேரின்பமாகிய இறைவனை அடையும் பொருட்டு எழுப்புவதாக அமைந்திருக்கும் பாடல்களாகும். மேலும் இப்பாடல்களில் 10 ஆழ்வார்களை எழுப்பி இறைவனை அடைய வழிகாட்ட வேண்டுவதாக பொருள் கொள்வதுவும் உண்டு.

அடுத்த 16,17 ஆகிய இரண்டு பாடல்களில் கண்ணனின் மாளிகையைச் சேர்ந்தவர்களையெல்லாம் எழுப்புவதாக அமைந்திருக்கும். சரணாகதி தத்துவத்தின் படி இறைவனை அடைய குருவின்/ஆச்சார்யர்களின் துணை தேவை. ஆழ்வார்கள் இறைவனையே ஆச்சாரியனாக பெற்றவர்கள். ஆழ்வார்களை ஆச்சாரியராக கொண்டு இறை தொண்டு செய்தவர்கள் குரு பரம்பரை எனப்படுகிறார்கள். குருவின் வழிகாட்டுதலோடுதான் இறைவனை அடைய வேண்டும் என்பதை காட்டும் விதமாக அமைந்தவை இப்பாடல்கள். வாயில் காப்பான் முதல் நப்பின்னை வரை எழுப்புவது நமக்கு பல நிலைகளில் குருவாக இருப்பவர்களின் துணை வேண்டுவதாகும்.

தொடர்ந்து 18 முதல் 23 வரையான 5 பாடல்களில் நப்பின்னையை எழுப்பி அவள் துணையுடன், கண்ணனை எழுப்புகிறார்கள். பகைவர்கள் உன்னை சரணடைவதைப் போல் நாங்கள் வந்தோம். நீ துயிலெழுந்து எம்மை நோக்கி யாம் வந்த காரியம் ஆரய்ந்து அருள்வாய்! திருவாகிய நப்பின்னையே அவனை துயிலெழுப்பி எமக்கருள்வாய்! என நப்பின்னைத் துணையுடன் கண்ணனை எழுப்புவதாக அமைந்தவை இப்பாடல்கள். வைணவத்தில் ஸ்ரீதேவியுடன் இருக்கும் திருமாலின் பாதாரவிந்தங்களைச் சரணடைவதுதான் சரணாகதி தத்துவம்.

கண்ணன் துயில் களைந்தான் போலும், அடுத்த 24 முதல் 29 ஆம் பாடல் வரை அவனது அவதார பெருமைகளையெல்லம் பாடி அவனைப் போற்றி ‘உன்னை அடைந்து உனக்கு தொண்டு செய்வதையே நாங்கள் எங்கள் பறையாகக் கேட்கிறோம், இறைவா பறை தருவாயாக என்று வேண்டுகிறார்கள்.

பறை என்பது விருப்பம், திருப்பாவையில், இறைவனை அடைந்து அவனுக்கு தொண்டு செய்யும் பாக்கியத்தையே தனது விருப்பமாக ஆண்டாள் கேட்பது உலகின் அனைத்து ஜீவாத்மாக்களும் உய்யும் வழி.

முடிவுரையாக முப்பதாவது பாடலில் பட்டர்பிரானின் மகளாகிய கோதை அருந்தமிழில் சொன்ன இம்முப்பது பாடல்களை உணர்ந்து படிப்பவர்கள் எங்கும், அவன் அருளாகிய செல்வம் பெற்று சிறப்புறுவர் என்று பலன் சொல்லி முடிகிறது.

திருப்பாவை பாடல்களின் பொருளை மூன்று விதமாக படிக்கவேண்டும். வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கும் பொருள் ஒன்று. அதன் உட்பொருளாக அமைந்திருக்கும் கருத்து ஒன்று. ஆழமாக விளக்கப்பட்டிருக்கும் தத்துவம் ஒன்று.

திருப்பாவையின் ஒவ்வொரு அடியும், சொல்லும் நம்மை சிந்திக்கச் செய்யும். தத்துவ அழகு மட்டுமா, சொல், பொருள் அழகும், மொழி அழகும் சிந்திப்போம்...

No comments:

Post a Comment