ஆண்டாள் கண்ணனை அடைய விரும்புகிறாள். எப்படி அடைவது. இதற்கு
முன் யாரெல்லாம் கிருஷ்ணானுபவத்தை அடைந்தவர்கள். அவர்கள் எப்படி அவனை அடைந்தார்கள்
என்று எண்ணுகிறாள். அற்புதமான கிருஷ்ணானுபவத்தை அவன் நாமம் சொல்லியே மிக எளிதாக அடைந்தவர்கள்
ஆயர்பாடியைச் சேர்ந்த ஆய்ச்சியர் என்பதை அறிகிறாள். அவ்வாறே தானும் கண்ணனை அடைய எண்ணுகிறாள்.
ஆண்டாளோ கலியுகத்தைச் சேர்ந்தவள், கண்ணன் பிறந்ததும், ஆய்ச்சியர்
அவனை அடைந்ததும் துவாபர யுகத்தில். என்றாலும் கண்ணனின் லீலைகளையும், ஆய்ச்சியர் அனுபவத்தையும்
கேட்டு கேட்டு வளர்ந்த ஆண்டாள், கண்ணன் மேல் கொண்ட காதலால் தன்னை பாவை நோன்பிருந்து
கண்ணனை அடைய எண்ணும் ஒரு ஆய்குல பெண்ணாகவே வரித்துக் கொள்ளுகிறாள்.
அவள் மொழி ஆய்ச்சியர் மொழியாக மாறுகிறது, அவள் நடை உடையெல்லாம்
ஆச்சியர் போலாகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரே ஆயர்பாடி ஆகிறது, வடபத்ர சுவாமியே கண்ணனாகிறார்.
தம் தோழியரெல்லாம் ஆய்குல பெண்களாகின்றனர். இதோ அவர்களை யெல்லாம் எழுப்பிக் கொண்டு
கண்ணனை அடைய பாடுகிறாள் ‘பாவை’.
அவளது இந்த கிருஷ்ணானுபவமே, அவளது உள்ளத்தின் கண்ணன் நினைவுகளே
மொழிவழியாக வார்த்தைகளாகி, மிகச் சிறந்த பாசுரங்களாக, திருப்பாவையாக நமக்கெல்லாம் வழிகாட்டுகிறது.
இங்கு நம் நினைவிற்கு வரக்கூடியது இராமாயணத்தில் ஒரு அற்புதமான
காட்சி, இராமன் காட்டுக்குச் செல்கிறான். உடன் சீதையும் இலக்குவணனும் புறப்படுகின்றனர்.
இலக்குவணன் புறப்படும் முன் தன் தாய் சுமித்திரையிடம் விடைபெற்றுக் கொள்கிறான் சுமித்திரை
“இலக்குவனா இனி இராமன் இருக்கும் வனமே உனக்கு அயோத்தி, இராமனே உனது தந்தை, சீதையே உன்
தாய். இனி இராமனின் சேவகனாக உடன் செல். என்கிறாள்.
இங்கும் ஒன்றை மற்றொன்றாக பாவித்தல் சொல்லப்பட்டிருக்கிறது. என்றாலும் இலக்குவணனின் பாவனைக்கும் ஆண்டாளின் பாவனைக்கும்
வித்தியாசம் உண்டு. ஆண்டாள் கண்ணனுடன் ஆயர்பாடியில் வளர்ந்த ஆய் குல பெண்ணாகவே தன்னை
வரித்துக் கொண்டு பாவைப் பாடலை பாடியிருப்பாள். முதல் 29 பாடல்களிலும் அவள் பெரியாழ்வார்
வளர்த்த பெண் என்பதை அறியவே முடியாது. முப்பதாவது பாடலில் மட்டும் தன்னை பட்டர்பிரானின்
கோதையாக வெளிப்படுத்திக் கொள்கிறாள்.
No comments:
Post a Comment