பாவை இலக்கியம்
பாவை இலக்கியம் என்பது பிள்ளைத்தமிழ் இலக்கியம் போன்று
தமிழுக்கே உரிய ஒரு சிற்றிலக்கிய வகை. இது பாவை நோன்பு மேற்கொள்ளும் பெண்கள் தம் தோழியரை
அழைத்துக் கொண்டு பொய்கையில் நீராடி நோன்பு துவங்கும் நிகழ்வினைச் சொல்தாக அமையும்.
பாவை நோன்பு பற்றி சங்க இலக்கியங்களில் கூட குறிப்புகள்
இருக்கின்றன. இது தை நீராடல் என்றும் அம்பா
நீராடல் என்றும் ஐங்குறுநூறு, கலித் தொகை ஆகிய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிபாடலில் பாவை நோன்பினைப்பற்றி விளக்கமாகவே குறிக்கப்பட்டுள்ளது.
நாடு செழிக்கவும் நல்ல கணவரை அடையவும், மார்கழி மாத பௌர்ணமியும்
திருவாதிரையும் கூடிய நாளில் பெண்கள் இந்நோன்பினை கடைபிடிப்பர். இதில் பெண்கள் தம்
தோழியரையும் அழைத்துக் கொண்டு அதிகாலையில் ஆற்றங்கரையில் நீராடி, ஈரமான ஆற்று மணலில்
ஒர் உருவம் செய்து சக்தியாக அதனை பாவித்து நோன்பிருப்பர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டாளும், மாணிக்கவாசகரும் இவ்வழக்கத்தை புதுப்பித்தனர்
என்றே கூறலாம். பாவை நோன்பு என்ற பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் இலக்கியத்தில்
சமய கருத்துக்களை விளக்கும் விதமாக இப்பாவைப் பாடல்கள் இருக்கின்றன. இதில் ஒன்று திருவெம்பாவை,
மற்றது திருப்பாவை. மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் தன்னை பெண்ணாக எண்ணிக் கொண்டு சிவபெருமானின்
அருள் வேண்டி பாடுகிறார். ஆண்டாள் திருப்பாவையில் தான் விரும்பிய கண்ணனுக்காக இப்பாவை
நோன்பினை நோற்கிறாள்.
இப்பாவை பாடலின் சொல், பொருள் நயத்தை, அருந்தமிழின் அழகை,
கூறப்பட்டுள்ள தத்துவத்தை அறிந்து படிப்பது இன்பம் பயப்பதாகும்.
No comments:
Post a Comment