தமிழ் இலக்கியத்தில் 6 ஆம் நூற்றண்டு முதல்
9 ஆம் நூற்றாண்டு வரையான காலத்தை பக்தி இலக்கிய காலம் என்பர். இக்காலத்தில் ஆழ்வார்களும்
நாயன்மார்களும் இறைவன் மேல் பல பாடல்கள் பாடி, சமயத்தோடு தமிழையும் வளர்த்தனர்.
ஆழ்வார்கள் பன்னிருவரில் பெரியாழ்வார் என்று
போற்றப்பட்ட விஷ்ணுசித்தர் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர், இவர் திருப்பல்லாண்டு, பெரியாழ்வார்
திருமொழி போன்ற அற்புதமான இலக்கியங்களை படைத்துள்ளார். இவர் கண்ணன் மேல் கொண்ட பக்தியால்
தன்னை தாயாக எண்ணிக்கொண்டு தாலாட்டு முதல் நீராட்டு வரை பல நிலைகளில் கண்ணனை நெக்குருகி
பாடியுள்ளார்.
விஷ்ணுசித்தர் மிகுந்த பக்தியோடு ஸ்ரீவில்லிபுத்தூரில்
வடபத்ரசாயி பெருமாளுக்கு கோவில் கட்டி, அங்கே நந்தவனம் அமைத்து, இறைவனுக்கு பூமாலை
அணிவிக்கும் சேவையை செய்து வருகிறார். இவர் ஒருநாள், நந்தவனத்தில் துளசி மாடத்தின்
அருகே ஒரு பெண் குழந்தையை கண்டெடுக்கிறார். பூமாலையையே தொட்டுப் பழகிய அவரது கைகளுக்கு
அக்குழந்தையும் ஒரு பூமாலைப் போலவே இருக்கிறது. எனவே கோதா என்று பெயரிட்டு தன் பெண்ணாக
வளர்க்கிறார். தமிழையும் கிருஷ்ண பக்தியையும் ஊட்டியே கோதையை வளர்க்கிறார் பெரியாழ்வார்.
கண்ணனின் திருநாமத்தையும் அவனது லீலைகளையும்
கேட்டு கேட்டு வளர்ந்த அவள் அவனையே அடையவேண்டும் என்று பக்தியின் உச்ச நிலையை அடைகிறாள்.
விஷ்ணுசித்தராக இருந்தவர், தனது உயர்ந்த பக்தியின்
காரணமாகவே பெரியாழ்வார் என்று போற்றப் பட்டார். அவர் வளர்த்த பெண்ணல்லவா இவள்! உலக
மனிதரை மணக்க விழையாமல் கண்ணனையே அடைய எண்ணுகின்றாள்.
பெரியாழ்வார் தொடுத்த பூமாலைகளெல்லாம் எவ்வாறு
கண்ணனை அடைந்தனவோ அவ்வாறே அவர் வளர்த்த கோதையாகிய தானும் அவனையே அடையவேண்டும் என்று
அவள் விரும்பினாளோ!!
கண்ணனையே தனது மணாளனாக வரித்துக் கொண்ட அவள்
வடபத்ர சாயிக்கு அணிவிக்கத் தொடுத்த பூமாலைகளையெல்லாம் தான் அணிந்து கொடுத்து சூடிக்
கொடுத்த சுடர்கொடியாகிறாள்.
பூமாலை மட்டுமா சூடிக் கொடுத்தாள்? அற்புதமான
இப்பாமாலையை நாமனைவரும் உய்யுமாறு பாடியும் கொடுத்தாளல்லவா?
திருப்பாவையை இயற்றும் பொழுது ஆண்டாள் ஒரு சின்னஞ்
சிறு சிறுமி. ஆனால் அவளது மொழி அறிவை நம்மால் வியக்காமலிருக்க முடியாது. திருப்பாவை
கடினமான பா வகையான கொச்சகக் கலிப்பா வகையைச் சார்ந்தது. ‘திரு’ப்பாவை என்று சொல்வதாலேயே
மேலான ஒன்றை அடைவதற்கான பாவைப் பாடல் என்பது புலனாகும். மேலும் திருப்பாவையில் ஆழ்ந்த
வைணவ சரணாகதி தத்துவம் கூறப்பட்டிருக்கிறது. அதனால்தான் திருப்பாவையை கோதோபநிஷத் என்றும் வேதமனைத்திற்கும்
வித்து என்றும் பெரியோர் வழங்கினர்.
No comments:
Post a Comment