ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்
கண்ணன் சிங்காதனத்தில அமர்ந்திருக்கிறான். இவ்வளவு நாட்கள் நோன்பிருந்ததின் நோக்கமே அவன் பாதம் பற்றுவதுதானே! பரவசமாகிற ஆண்டாள் அவன் திருப்பாதமலர்களை, அவன் அவதாரப் பெருமைகளை தமிழ் மணக்கப் போற்றி பாடுகிறாள்.
அவள் தமிழில் உறுகிவிட்டான் போலும் கண்ணன். என்ன வேண்டும் கேள்? எனக் கேட்டானோ! அவளும் கண்ணனை உணர்ச்சி பெருக்கோடு, மாலே! மணிவண்ணா! ஆலினிலையாய்! என்றழைத்து அவனிடம் பாவை நோன்பிருந்து தாங்கள் வேண்டுவதாய் சிலவற்றை பட்டியலிடுகின்றாள்
மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!
மால் என்றால் கருமை என்று ஒரு பொருள். மாலே! கருமையானவனே! மணிவண்ணா! கருநீல மணியினைப் போன்ற கருமைநிறத்தோனே!
மால் என்றால் பெருமை என்ற பொருளும் உண்டு. மிகுந்த பெருமை உடையவன். அவனது பெருமை உயர்வற உயர் நலங்கொண்டது. மிகப்பெரியவன் அப்படி பரம்பொருளாய் இருக்கக்கூடியவன், பக்தர்கள் அழைத்தால் இறங்கி வந்து அருளக்கூடியவன். கண்ணனாய், மணிவண்ணனாய் இறங்கி வந்து அருள்கின்றானல்லவா!
இவ்வாறு இறைவனின் பெருமையும் அவனது எளிமைமையும் குறிப்பதாக அமைகிறது இவ்வரிகள்.
அதுமட்டுமல்ல, ஊழிகாலத்தில் இறைவன் கருமை நிறத்தானாய் ஆலிலைமேல் பிரளயத்தில் மிதந்துக் கொண்டிருப்பாராம். ஆண்டாளும் முன் பாசுரத்தில் ஊழிமுதல்வன் உருவம் போல் மெய் கருத்து என்று தானே பாடியிருக்கிறாள். அதனால் தான் ஆலிலையும் இறைவனை என்றும் பிரியாத ஆதிஷேஷன் வடிவமாக பார்க்கப்படுகிறது.
இப்படி கருமை நிறத்தவனே! ஆலினிலையாய்! என்றழைப்பது அவன் ஊழி முதல்வனாய் நிற்பதைக்காட்டுகிறது. மணிவண்ணா! நாங்கள் அழைத்ததும் வரக்கூடியவனாக எளிமையானவனாய் இருக்கும் நீயே ஊழிமுதல்வனாகவும் இருக்கிறாய். உன்னிடம் இல்லாதது எதுவும் உண்டோ! எங்களுக்கு அருள்வாய் என்கிறாள். இறைவனின் பெருமையையும் நமது சிறுமையையும் உணர்வது சரணாகதியில் ஒரு முக்கியப் படி.
ஊழி முதல்வனாய் அழித்தும் மீண்டும் படைத்தும் நிற்கக்கூடிய இறைவனை வேண்டி, மாயையில் விளைந்த சில பொருட்களையா கேட்பாள் ஆண்டாள். அவள் கேட்கும் ‘பொருள்’ என்ன என்பதைப் பார்ப்போம்.
முதலிலேயே, மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்! என்று எம் முன்னோர்கள் வழிவழியாக செய்தார்கள். அவ்வாறே நாங்களும் பாவை நோன்பிருப்பதற்கு எங்களுக்கு வேண்டியதைக் கேட்கிறோம். நீ அருள்வாயாக எனக் கேட்கிறாள்.
முன்னோர்கள் செய்ததை கடைபிடிப்பது என்பது வைணவ தத்துவத்தின் மிக முக்கிய நெறி. முன் பாசுரத்திலும் ‘செய்யாதன செய்யோம்’ என்றாளல்லவா! முன்னவர் காட்டிய நெறி வழுவாமல் அவர்களைப் பற்றி நடக்கவேண்டும் என்பதையும் குறிப்பதாய் அமைகிறது பாடல். முன்னவர் என்பது ஆண்டாளுக்கு முன்னவராகிய ஆழ்வார்களைக் குறிப்பதாக கொள்வர். அவர்கள் காட்டிய நெறியில் சரணாகதி அடைவதே ஆண்டாள் நமக்குக் காட்டும் வழி.
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள்
பாஞ்ச சன்னியம் என்னும் சங்கு இறைவனின் பஞ்ச ஆயுதங்களில் ஒன்று. கண்ணன் தன் குருவான சாந்தீபனி முனிவரின் சொல்லுக்கேற்ப பஞ்சகன் என்ற அசுரனைக் கொன்று அவனை சங்காக்கி தன்கையில் கொண்டாராம். அதனால் அச்சங்கம் ஒலிக்கும் பொழுது அனைவரையும் நடுங்கச் செய்யுமாம். பாஞ்ச சன்னியம் தீயவருக்கெல்லாம் நடுக்கத்தை உண்டாக்கும். சரணடைந்தவருக்கோ நற்கதியைக் காட்டும். உலகத்தையெல்லாம் நடுங்கச் செய்யும் பாஞ்சசன்னியம் போன்ற சங்குகள் நிறைய வேண்டுமாம் ஆண்டாளுக்கு. ஏன்?
முன்பாசுரத்தில் ‘வெள்ளை விளிச்சங்கை’ நாம் பார்த்தோம்! இறைவன் எழுந்தருளி இருக்கும் கோவில்கள் திறக்கப்பட்டதை அறிவித்து பக்தர்களை விளிப்பதால் விளிச் சங்கம் என்று பார்த்தோமல்லவா! அப்படி உலக ஜீவர்கள் அனைவரையும் நாங்கள் அழைக்க வேண்டும். அழைத்து உன் திருப்பாதங்களில் சரணடையும் வழி காட்ட வேண்டும் எனவே பல சங்குகள் வேண்டும். சங்கம் ஓம்கார நாதத்தைக் குறிப்பதாகவும் கூறுவர்.
உன் பெருமையை பறைசாற்ற எங்களுக்கு பெரிய பறைகள் மிகுதியாக வேண்டும். பல்லாண்டிசைப்பார்கள் பலர் வேண்டும் எனக் கேட்கிறாள். வைணவ சரணாகதியில் பாகவதர்கள் என்றழக்கப்படும் பக்தர்கள் அனைவருடன் சேர்ந்தே இறைவனை அடைய வேண்டும். இது தனிமனிதராக செய்யப்படுவதல்ல. ஞான யோகம் என்பது தனிமனிதர் கடைபிடித்து அடைய வேண்டியது. ஆண்டாள் காட்டும் பக்தியோகம் பலரோடும் இணைந்து செய்யவேண்டியது. அதனால் இறைவனுக்கு பல்லாடிசைப்போர் பலர் வேண்டும் எனக் கேட்கிறாள்.
கோல விளக்கு, நமது அறியாமை இருளகற்றி ஞான ஒளி காட்ட விளக்குகள். இங்கு விளக்குகள் என்பது ஆச்சாரியர்கள் அதிலும் முதன்மை ஆச்சாரியராக கருதப்படும் நப்பின்னை விளக்காக இருந்து எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்பது ஆண்டாளின் வேண்டுதல்.
கொடியே, விதானமே. கொடி என்பது அடையாளச் சின்னம். கோவில்களில் கொடி என்பது இறைவனின் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத் தொழிலையும் குறிப்பதாக அமைந்திருக்கும். அதனால் கொடிமரத்தை இறைவனாக பாவித்து வழிபடுவதுண்டு.
விதானம் என்பது மேற்கூரை. உலக இன்பத் துன்பங்களிலிருந்து எங்களைக் காக்க இறைவன் அருள் என்ற விதானம் வேண்டும்.
வைணவ தத்துவத்தின் படி, முன்னவர் காட்டிய வழியில் பாகவதர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரே எண்ணமாக இறைவனைச் சரணாகதி அடைய வேண்டும் என்பதாக இப்பாடல் அமைகிறது.
இப்படி இறையனுபவம் பெற்றதும் நாம் செய்யும் அன்றாட காரியங்கள் கூட இறைவனுக்கானதாகவே இருக்கும் என்பதை அடுத்தப்பாடல் அழகாக காட்டுகிறது.