இறைவா நீ தாராய் பறை
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
கறவை மாடுகளை மேய்த்துச் சென்று, மேச்சல் காட்டில் விட்டப்பின், நாங்கள் சேர்ந்திருந்து உண்போம். எங்களுக்குத் தெரிந்தது அது ஒன்றே! என்றாலும் அறிவற்றவர்களாகிய எங்கள் குலத்தில், நீ பிறந்ததனால் புண்ணியம் செய்தவர்களானோம்.
நாங்கள் அறிவற்றவர்கள். மாடு மேய்ப்பதைக்கூட சரியாகச் செய்யாதவர்கள். காட்டில் விட்டதும் நாங்கள் உண்போமேத் தவிர அம்மாடுகள் பிரிந்து போய்விடாமல் தக்கதை மேய்ந்தனவா? என்பதைக்கூட காணத் தெரியாது. என்றாலும், மிக எளிமையானவர்களாகிய எங்கள் குலத்தில் நீ பிறந்ததால் நாங்கள் உய்யும் வழியை அடைந்தோம்.
குறையொன்றுமில்லாதவனாகிய கோவிந்தனே! உன்னோடு நாங்கள் கொண்ட இவ்வுறவு ஒழிக்க ஒழியாது. அறியாமையினால் நாங்கள் உன்னை ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபம் கொள்ளாமல்! இறைவா! நீ எங்களுக்கு வேண்டியதை அருள்வாய்!
இப்பாடலில் கண்ணனை இறைவனாகக் காட்டுகிறாள் ஆண்டாள். இறைவா! என்றே அழைத்து எம் விருப்பத்தை தருவாயாக! என்று வேண்டுகிறாள். நாங்கள் அறிவில்லாதவர்கள் என்று தம் சிறுமையை உணர்ந்தும், இறைவன் குறையொன்றுமில்லாத கோவிந்தன் என்ற மிகப்பெரிய உண்மையைத் தெளிந்தும் ஆண்டாள் இப்பாடலில் அவன் பாதாரவிந்தத்தில் சரணாகதியை வேண்டுகிறாள்.
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்
என்று முன்பே சொன்னாளல்லவா! அவ்விருப்பத்தை எமக்கருள்வாய் என்று வேண்டுகிறாள்.
முன் பாசுரத்தில் இறைவனின் பெருமையயும் அதே நேரத்தில், பக்தர்களுக்கு இறங்கி அருளும் அவன் கருணையையும் உணர்ந்தவர்கள், இப்பாடலில் அவன் பெருமையின் முன் தம் சிறுமையை எண்ணுகிறார்கள். நாமோ சிறிதும் அறிவில்லாதவர். உண்மை ஞானம் இல்லாதவர்கள். ஞானமில்லாததால் உன்னை சிறுபேர் அழைத்தோம். நாங்கள் எப்படி அழைத்தாலும் அது உன் முழு பெருமையைக்காட்டாது. அதனால் கோபம் கொள்ளாதே! நீ குறையொன்றுமில்லாத கோவிந்தன். பசுக்களாகிய இவ்வுலக மக்களைக் காக்கும் கோவிந்தன். உன்னுடனான எங்கள் உறவு அழியாதது. ஜீவர்களாகிய நாங்கள் பரமனாக இருக்கும் உன்னை அடைவதே உய்யும் வழி. அதனால் உன்னைச் சரணடைந்தோம் உனக்கு கைங்கர்யம் செய்யும் பேற்றினை எமக்கருள்வாய் என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.
சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
அதுமட்டுமல்ல, இந்த வைகறைப் பொழுதில் வந்து உன் பொறாமரையடியை சேவித்து போற்றுவதன் காரணத்தை கேள். இடைகுலத்தில் பிறந்த நீ இடையர்களாகிய எங்களின் சேவையை ஏற்காமல் தள்ளக்கூடாது. மனித குலம் நன்மையுற தர்மத்தை போதித்தவனே! எங்களுக்காக இராமனாக இவ்வுலகில் பிறந்து அறம் காத்து நின்றவனே!
பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் என்று சொன்னவனல்லவோ கண்ணன். அப்படி மனித குலத்தில் பிறந்து வழிகாட்டிய நீ எங்கள் சேவகத்தை ஏற்காமல் தள்ளக்கூடாது.
இன்று மட்டுமல்ல கண்ணா! ஏழேழ் பிறவியிலும் உனக்கு உற்றவர்களாகவே இருக்க வேண்டும். எவ்வளவு பிறவி கர்மத்தின் காரணமாக நாங்கள் எடுக்க விளைந்தாலும், உனக்கே நாம் பணிசெய்யவேண்டும், மற்ற உலக இன்பங்களில் எங்கள் விருப்பத்தை மாற்றி, எம்மனம் எப்போதும் உன்னடியையேச் சேர அருள்வாய்! என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே.
என்று இவ்வையகத்தில் வணங்கி சரணடைந்தவருக்கு இறங்கி அருள்செய்யக்கூடிய திருப்பதிரிப்புலியூர் சிவனே! நான் புழுவாகப் பிறவி எடுக்க நேர்ந்தாலும் உன்னடி என்மனத்திலிருந்து வழுவாதிருக்க வரம் தரவேண்டும்! என்று தானே திருநாவுக்கரசரும் வேண்டுகிறார்.
இப்படி மனிதருக்காக இறங்கி கண்ணனாக பிறந்து அருள் செய்த இறைவனை, அவன் அவதார காலத்தில் அவனுடன் ஆடிப் பாடிய ஆயர் சிறுமியாகவே தன்னை நினைத்துக் கொண்டு மனத்தால் ஆயர் பெண்ணாகவே வாழ்ந்து உருகியிருக்கிறாள் ஆண்டாள். பல நூற்றாண்டுகளாய் இறையருளைப் பெற தம்முன்னோர் காட்டிய நெறியாம் சரணாகதியை எளியவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் அருமையான தீந்தமிழால் பாமாலை சாற்றியிருக்கிறாள்.
No comments:
Post a Comment