Saturday, 22 April 2023

பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ்மாலை

பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ்மாலை

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பாற்கடலைக் கடைந்தவனாகிய மாதவனும், கேசியை அழித்ததால் கேசவன் எனபோற்றப்பட்டவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகிய முகமுடைய, நேர்த்தியான அணிகலங்களணிந்த ஆயர்பாடி பெண்கள் சென்றுஅடைந்து வணங்கி, அருள் பெற்ற நெறியை, ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தவளும், தாமரை மலர்மாலையை அணிந்தவளும், பட்டர்பிரான் என்றழைக்கப்பட்ட பெரியாழ்வாரின் மகளுமான கோதை ஆண்டாள் தீந்தமிழால் செய்து தந்த இச்சங்கத் தமிழ் மாலையான இம்முப்பது பாடல்களையும் உணர்ந்து படிப்பவர்கள், சங்கு சக்கரதாரியாக நாங்கு தோள்களும், கருணையால் சிவந்த கண்கள் அமைந்த அழகிய முகமுடையவனும், செல்வத்திற்கதிபதியான ஸ்ரீதேவியை தன்நெஞ்சில் கொண்டவருமான திருமாலால் எங்கும், எப்பொழுதும், மூவுலகிலும், ஈரேழ் பிறவியிலும் உண்மைச் செல்வமாகிய அவன் திருவருள் பெற்று இன்புருவர் என்பது ஆண்டாள் வாக்கு. சங்கம் என்றால் கூட்டம் என்று ஒரு பொருள் உண்டு. இங்கு சங்கத் தமிழ் மாலை என்பது கூட்டமாக பலரும் சேர்ந்து துதித்து பாடதக்கதான முப்பது பாசுரங்ககளான திருப்பாவையை குறிக்கிறது.

அப்படியே திருப்பாவை பாடல்களை படிப்பவர்கள், கேட்பவர்கள் அனைவரும் கண்ணனின் கருணையையும் ஆண்டாளின் அருளையும் பெறுவர் என்பது திண்ணம்.

திருவாடிப் பூரத்து செகத்து உதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்து அளித்தாள் வாழியே
மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!


No comments:

Post a Comment