மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து குளிர்வோம்!
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
கூடாதவரை வெல்லும், அழிக்கும் என்றல்ல வெல்லும் என்று காட்டியிருக்கிறாள் ஆண்டாள். பகை, மாற்று, அல்லது எதிர்மாறையான எண்ணம் கொண்டவரையும் அவர் எண்ணத்தை மாற்றி வெல்லக் கூடியவன். தானே பெரியவன் என்ற அகம்பாவத்துடன் இருந்த இந்திரனின் செருக்கை அழித்து அவனை ஆட்கொண்டு கோவிந்தனாக நின்றானல்லவா! அதனால் தான் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! என்றழைக்கிறாள் ஆண்டாள்.
இப்பாடல் முதல் அடுத்த மூன்று பாடல்களிலும் இந்த கோவிந்த நாம சங்கீர்தனம் அமைந்திருப்பது சிறப்பு. சாதாரணமாக கோவிந்த நாமம் சொல்லும் பொழுது மூன்று முறை கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!! என்றழைப்பது மரபு. இன்றும் இதை நாம் செவிமடுக்க இயலும்.
கோவிந்தன் என்றால் பசுக்களை காக்கக்கூடியவன் என்பது பொருள். பசு என்பது ஜீவாத்மாக்களைக் குறிக்கும். உலக உயிர்களாகிய பசுக்களைக் காக்கும் பரமாத்மா! கோவிந்தன் எனப்படுகிறான் இதனாலும் கோவிந்த நாமம் சொல்லுதல் முக்தி அளிக்கும் எனக் கருதப்படுகிறது.
நாங்கள் உன்னை பாடிப் பெரும் பரிசு, மிக அருமையானதாக உலகமே புகழக்கூடியதாக இருக்கும். சூடகம், கையில் அணியும் வளையல், தோள்வளையே தோள்களில் அணியும் வளைந்த அணிகலன். தோடு என்றாலும் செவிப்பூ என்றாலும் காதில் அணியக்கூடியது, பாடகம் என்பது காலில் அணியக்கூடியது இவ்வாறு பல அணிகலங்கள் நாங்கள் அணிவோம்.
முன்பு மையிட்டெழுதோம் மலரிட்டு நாமுடியோம் என்றவர்கள், இன்று பல அணிகலனும் அணிவோம் எங்கிறார்கள். இந்த அணிகலங்கள் என்பவை வைணவ சமயத்தின் சங்கு சக்கரம் போன்ற முத்திரைகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம். உனது அடியவர் என்பதை அடையாளங்காட்டும் முத்திரைகளை அணிவோம். முன்பு இறைவன் அருளைப் பெற வைராக்கியத்துடன் உலக இன்பங்களைத் துறந்தவர்கள், பின்பு அவன் அருள் கிட்டியதால் அவன் அடியவர் என்று அடையாளத்தை மகிழ்வோடு அணிகிறார்கள்.
இதை இன்னும் வேறு விதமாகவும் காணலாம். இறைவனை அறியும் முன்பு, மெய் ஞானம் பெறும் முன்பு உலக இன்பங்களையெல்லாம் தமக்கானதாக அனுபவிக்கும் பொழுது அதைத் துறந்தால் மட்டுமே, இறைவனை அடைய முடியும் என்று துறந்தார்கள். இறைவன் அருள் கிட்டி உண்மை உணர்ந்தவர்கள் அதே உலகியல் நடவடிக்கைகளை கூட அவன் அருளாலே அவனுக்கானதாக செய்யும் பொழுது அதிலும் அவனையேக்கண்டு இன்புறுவார்கள் என்பதாகக் காணலாம்.
ஆடை உடுப்போம் அதன் பின்னே பால்சோறு மூட நெய் பெய்து, அது முழங்கை வழிவார உண்போம் என்று கூறவில்லை, ஆனால் கூடியிருந்து குளிர்வோம் என்று கூறுகிறாள் ஆண்டாள். உணவு என்பது மற்றவர்களுக்கு ஈந்து மகிழக்கூடியது. உலகின் உயிகலெல்லாம் அவன் என்று கண்டால் ஒவ்வொரு உயிருக்கு செய்யும் கைங்கர்யமும் அவனுக்கானதாகிறதன்றோ! அவ்வாறு உலக உயிர்களில் உன்னைக்கண்டு உன்னுடன் கூடி இருந்து குளிர்வோம்!
நம்மை நாம் அறிந்து மெய் ஞானத்துடன் இறைவனை உணர்ந்து இவ்வுலகில் உள்ள அனைத்திலும் அவனையே கண்டுக் கொண்டால் பிற உயிர்களிடம் அன்பைத் தவிர வேறென்ன காட்ட இயலும்.
இப்படி மிக அருமையான இறை தத்துவத்தை மிக எளிதாக கடைபிடித்து நாமெல்லோரும் உய்ய அருள் காட்டுகிறாள் ஆண்டாள்.
No comments:
Post a Comment