Wednesday, 19 April 2023

வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே!

வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே!

கண்ணா! ஒருத்தி மகனாய் பிறந்தாய், ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்தாய்! தேவகியின் மகனாக அவதறித்த நிமிடமே மாயம் செய்து ஓரிரவில் யமுனா நதிதீரத்தில் யசோதையின் மகனாக ஒளித்து வளர்ந்தானல்லவா!

அப்படி நீ வளர்வதை தாங்கிக் கொள்ள முடியாத கம்சன் உனக்கு தீங்கு நினைக்க, சிறுவனான நீயோ அவன் நோக்கத்தை, கருத்தை பிழையாக்கி அவன் வயிற்றில் நெருப்பிட்டாற்போல் மரண பயத்தால் கலங்கச் செய்து உயர்ந்தவனாய் நின்றாய். உன்னைப் போற்றி நாங்கள் வந்தோம். எங்களை ஏற்று கொண்டு கருணை செய்வாயானால், திருமகளின் செல்வமாகிய உன்னையும் உன் கைங்கர்யத்தையும் பெற்று எங்கள் வருத்தமெல்லாம் தீர்ந்த்து மகிழ்வோம் என்று கண்ணனிடம் தம் விருப்பத்தை வேண்டுகிறாள் ஆண்டாள்.

கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே!
இந்த வயிற்றில் நெருப்பு என்பது என்ன?

‘பிள்ளைகளை வெளியில் அனுப்பிவிட்டு வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டது போல் உள்ளது’ என்று பெரும்பாலும் பெண் குழந்தைகளின் பெற்றோர் கூறுவதைப் பல நேரங்களில் நாம் கேட்டிருப்போம்.

இப்படி கூறும் வழக்கம் சில குளிர் பிரதேசங்களில் காணப்படும் ஒரு வழக்கத்தை ஒட்டி ஏற்பட்டது. காஷ்மீர் போன்ற குளிர் பிரதேசங்களில் இன்று கூட ஒரு சட்டியில் நெருப்பை வைத்து அதை தங்கள் கழுத்திலிருந்து வயிறு வரை கட்டித் தொங்க விட்டுக்கொண்டு அதை கம்பளி போர்வையால் மூடியவாறு தங்கள் அன்றாட காரியங்களைச் செய்வர். வயிற்றுப் பகுதிவரைத் தொங்கவிட்டால் தான் குளிர் நெஞ்சைத் தாக்காது. இதமாக இருக்கும். இது அந்த கடுங்குளிரைத் தாங்க அவர்கள் செய்யும் வழக்கம். ஆனால் அப்படி நெருப்பைக் கட்டிக் கொண்டு நடக்கும் போது சர்வ ஜாக்கிரதையாக நடக்கவேண்டும். இல்லையென்றால் விபரீதமாகிவிடும். எனவே அவர்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பர்.

இப்படி கவனம் சிதறாமல் பயத்துடன் இருக்கச் செய்வதைத் தான் வயிற்றில் நெருப்பக் கட்டிக் கொள்ளல் என்பர். கம்சனுக்கு மரண பயத்தை உண்டாக்கிக் கொண்டே இருந்ததால் கண்ணன் அவன் வயிற்றில் நெருப்பாகி நின்றானாம்.

அதுமட்டுமல்ல பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பு ஆக்கவும் செய்வது அழிக்கவும் வல்லது. ஐம்பூதங்களால் ஆன நம் உடலில் நெருப்பின் முக்கியத்துவம் மிகவும் அதிகமானது. நமது உடல் மனம் புத்தி அல்லது ஆளுமை ஆகிய அனைத்திற்கும் அடிப்படையானது நம்முடலில் இருக்கும் நெருப்பு. உடலில் சூடிருந்தால் தானே நாம் வாழ்கிறோம் என்பது நிச்சயமாகிறது. இந்த நெருப்புகள் சரியாக பயன் படுத்தப்படும் போது நம் வாழ்விற்கு காரணமாகின்றன. தவறாக பயன்படுத்தப்படும் போது மரணத்திற்கும் வழிவகுக்கின்றன. கம்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற கண்ணனை எதிரியாக நினைத்ததால் அவனுக்கு மரண பயத்தை உண்டாக்கி அவனை அழித்தான் கண்ணன்.

இவ்விருப்பாடல்களிலும் கண்ணனைக் இறைவனாகக் கண்டு அவன் அவதாரங்களைப் போற்றி பாடி மகிழ்ந்த ஆண்டாள், மீண்டும் ஆயர் சிறுமியாக தங்கள் நோன்பிற்கு வேண்டுவனவாற்றை பட்டியலிடுகிறாள். அவள் வேண்டுவன என்னவாயிருக்கும் எல்லாம் கண்ணனுடன் தொடர்புடையதாகத்தானே இருக்கும். பார்ப்போம்.

No comments:

Post a Comment