Saturday, 15 April 2023

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி!

காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

சங்க இலக்கியங்களில் ஐந்து நில காட்சிகளும் மிக அழகாக பாடப்பட்டிருக்கும். அப்படியே இந்த பாடலில் ஒரு அழகான குறஞ்சி நிலக் காட்சி காட்டப்பட்டிருக்கிறது. ஆண்டாளோ மிகச் சிறுமி, ஸ்ரீவில்லிபுத்தூரைத் தாண்டி அறியாதவள். ஆயர் பெண்ணாகத் தன்னை எண்ணிக் கொண்டுதானே பாடல்களை பாடுகிறாள். என்றாலும் அவள் படைக்கும் இவ்வியற்கை காட்சி நம்மை வியக்க வைக்கும். இன்று கூட நம்மில் பலர் சிங்கத்தை அதன் கூட்டில் பார்த்திருப்போம், காட்டில் பார்த்திருப்போமா என்பது சந்தேகமே!

ஒரு நல்ல மழைக்காலத்தில் ஆண் சிங்கம் ஒன்று தன் பெண்சிங்கத்துடன் கூட்டில் உறங்கிக் கிடக்கிறது. அது தீ போன்ற தன் கண்களை விழித்து, தன் பிடறிமயிர் சிலிர்க்க முறித்துக் கொண்டு வீரமாக கர்ஜித்து எழுந்து வருவது போல, காயாம்பூ போன்று நீல நிறங்கொண்ட கண்ணா உன் இடம் விட்டு நீயும் எழுந்து வந்து சிங்காசனத்தில் எழுந்தருளி நாங்கள் வந்த காரியத்தை ஆராய்ந்து அருள் என வேண்டுகிறாள்.

இப்பாடல் நமக்கு நரசிம்ம அவதாரத்தை நினைவூட்டுகிறதல்லவா! பிரகலாதனைக் காக்க, இரண்யனை அழிக்க ‘வேரி மயிர்பொங்க, மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு’ தூணிலிருந்து வெளிப்பட்டு வந்தானல்லவா! பிரகலாதனுக்காக இறங்கியதைப் போல் எங்களுக்காகவும் இறங்கி நாங்கள் வந்த காரியத்தை ஆராய்ந்து அருள்.

இவர்கள் வந்த காரியம் என்ன? என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான், இன்றுயாம் வந்தோம் என்று அடுத்த பாடலில் அதையும் சொல்லுகிறாள். உன் சேவகத்தையே பறையாக வேண்டி வந்தோம். எமக்கிறங்கி அருள் என்று வேண்டிய ஆண்டாளின் குரல் கண்ணனுக்கு கேட்டு விடுகிறது. இதோ அவன் எழுந்து வந்துவிட்டான். அவன் அடி போற்றி ஆண்டாள் பாடும் பாடலை அடுத்து காண்போம்.

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி!

கண்ணா உன் இருப்பிடம் விட்டு எழுந்து எங்கள் மன சிம்மாசனத்தில் வந்து அமர். அமர்ந்து, நாங்கள் வந்த காரியம் கேட்டு ஆராய்ந்து அருள் என்று அழைக்கிறாள் ஆண்டாள். கண்ணனும் அவள் குரல் கேட்டு எழுந்து வருகிறான். அவன் அடிமேல் அடி வைத்து நடந்து வருகிறான். அவன் நடையழகை காண்கிறாள் ஆண்டாள்.

ஈரடியால் மூவுலகையும் அளந்த கால்களல்லவா அவை. அன்று மகாபலி சக்ரவர்த்தியின் ஆணவத்தை அழிக்க வாமனனாக வந்தவன் திருவிக்கிரமனாக உயர்ந்து உலகளந்து நின்றான். அதி பலசாலியான மகாபலி சக்கரவர்த்தியும் அபிமான பங்கனாய் நின்றான்! அப்படி அவனை கர்வபங்கம் செய்த அடிகளல்லவா இவை. சரணாகதி என்று அச்சேவடிக்குத்தானே சேவகம் செய்ய வேண்டப்போகிறாள் அவள். அதனால் அவன் அடியைப் போற்றுகிறாள். 
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி!

ஆண்டாள் கண்ணனின் அவதார பெருமைகளையெல்லாம் பேச ஆரம்பிக்கிறாள் அடுத்ததாக

சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி!

வாமன அவதாரத்தில் மூன்றாம் அடி வைக்க இடமில்லாமல் போனதால் அன்று நிறைவு செய்யாது விட்டதை நிறைவு செய்யும் விதமாக இராமனாக 14 வருடங்கள் காட்டில் நடந்தானல்லவா.

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே

என்று சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் காட்டப்பட்டிருக்கிறது. ஆண்டாளும் அதையே எண்ணினாள் போலும், அதனால்தான் முதல் அடியில் உலகளந்த கால்களைப் பாடியவள் அடுத்த அடியில் தென்னிலங்கைக்குச் சென்று இராவணனை அழித்த அவன் வெற்றியைப் பேசுகிறாள்.

இராமாவதாரம் என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டி. பல நிலைகளிலும் மனிதர் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான நெறிகளைக் காட்டுகிறது இராம காதை. எனவே தான் எல்லாம் வல்லவனான பெருமாள் அவதார நிலைக்கு கட்டுப்பட்டு முறைதவறாது இலங்கைக்குச் சென்று இராவண வதத்தை முடித்தான் என்று சொல்வதுண்டு. அதனால் தான் ஆண்டாளும் சென்றங்கு செற்றாய் என்று அவன் வெற்றியைப் போற்றுகின்றாள்.

அடுத்த வரியில் ஆயர் சிறுவனாய், கண்ணன் அவதாரத்தையே பேசுகிறாள். கம்சன் அனுப்பிய அரக்கன் சக்கர வடிவில் வந்து காத்திருக்க, கண்ணன் தன் சின்ன பாதங்களால் உதைத்து அவனை வதைத்தானல்லவா! கண்ணன் நடந்து வரும் போது மிகப்பெரிய காரியம் செய்த அந்தச் சின்னஞ்சிறு பாதங்கள் ஆண்டாளுக்கு தெரிகின்றது.

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!

பொன்றுதல் என்றால் கண்ணுக்கேத் தெரியாமல் அழிந்துப் போதல். ஆம் அப்படித் தான் சக்கரமாய் வந்த அசுரன் அழிந்தான். அவன் மட்டுமா! இதோ நம் பிறவிச் சக்கரத்தையும் அவ்வாறே தூளாக்கி அழித்து காக்க வல்லது அவன் பாதங்களல்லவா! அவன் புகழ் பாட நம் பிறவி சக்கரம் அழியும் எனவே புகழ் போற்றி என்கிறாள்.

கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி!

கன்று வடிவிலும் விளாம்பழ மரமாகவும் இரு அரக்கர்கள் சின்னக் கண்ணனை அழிக்க கம்சனால் அனுப்பப்படுகிறார்கள். கண்ணன் சிறுவன் கன்றுகளுடன் மேய்ச்சல் காட்டில் விளையாடிக்கொண்டிருக்கிறான். என்றாலும் கன்றோடு கன்றாக வந்த அசுரனை அவனா அறியமாட்டான். கன்றை தூக்கி விளாம்பழ மரத்தினைப் பார்த்து எறிய இருவரும் அழிகிறார்கள். அப்படி அவர்களை வதம் செய்து விட்டு ஒன்றும் அறியாதவன் போல் குழலூதிக் கொண்டு தன் பசுக்கூட்டத்தில் ஒரு காலை மடக்கி புன்முறுவலோடு நின்றானாம் சிறுவன் கண்ணன்.

மாடு மேய்க்கும் கண்ணன் தன் குழலுடன் இருக்கும் அழகை இன்றும் கொண்டாடுகிறோம் அல்லவா. அதனால் தான் ஆண்டாளும் எறிந்த கைகளைப் பாடாமல் அழகாய் நின்ற திருவடிகளையே ‘கழல் போற்றி’ என்று பாடுகிறாள்.

திருவடி சேவகம் தானே இவள் வேண்டி வருவது. அவள் கருத்தெல்லாம் பாதமலர்களிலேயே இருப்பதில் ஆச்சரியமல்லவே!

அடுத்து கோவலர்களைக் காக்க கோவர்த்தனத்தை குடையாக பிடித்து கோவிந்தனாக நின்றானல்லவா!

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி!

ஆம்! நீயே கதி என்று நம்பிவந்த அக்கோவலரை காத்து நின்ற உன் குணம் போற்றி. கர்வம் தொலைந்து நின்ற இந்திரனை மன்னித்தருளிய உன் குணம் போற்றி! நீ குண சீலனல்லவா! எங்களுக்கும் நீ அருள வந்திருக்கிறாய். உன் குணம் போற்றி என்று பாடுகிறாள் ஆண்டாள்.

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி!

பசுக்கள் ஒரு நாட்டின் செல்வங்களாக கருதப்பட்டன. அவற்றை கவர பகைவர் நினைப்பது உண்டு. அப்படி பகை வரும் பொழுது, இருக்கும் இடத்திலிருந்தே வேல் கொண்டு தாக்கி பகையை விரட்டுவது கோவலர் செய்கை. அப்படி எங்களைக் காப்பதற்காக இருக்கும் நின்கையில் வேல் போற்றி! என்று அவன் ஆயுதத்தையும் பாடுகிறாள் ஆண்டாள்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு
அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

பெரியாழ்வார், கண்ணன் சேவடிக்கு திருக்காப்புச் சொல்லி பாஞ்ச சன்னியத்திற்கும், ஆழிச் சக்கரத்திற்குமல்லவா பல்லாண்டு சொல்கிறார். அவள் வளர்த்த பெண்ணல்லவா, கண்ணன் கை வேலையும் போற்றுகிறாள்.

வாயாற, மனதாற, தமிழாற பாடிப் போற்றியவள்

என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

என்று தமது நோக்கத்தையும் சொல்லுகிறாள். உனக்கு கைங்கர்யம் செய்வதுதான் நாங்கள் வேண்டும் பறை. நீ இரங்கி அருள்வாய் கண்ணா! என்று வேண்டுகிறாள்.

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றுஎன்றுஉன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்


இந்த போற்றிப் பாடலை தினம் தினம் பாட அவன் அருள் பெறலாம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

No comments:

Post a Comment