போற்றியாம் வந்தோம்
அடுத்த இரண்டு பாடல்களிலும் உன்னையே கதி என்று நாங்கள் சரணடைந்தோம். உன் கருணை பார்வையால் எங்கள் பாவங்களையெல்லாம் போக்கி அருள் என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து — ஏலோர் எம்பாவாய்.
இவ்வள்ளல் பெரும் பசுக்களை நாம் முன்பே பார்த்தோம் அல்லவா? ஒரு கலத்தில் பாலை ஊற்றினால் அது மிகுந்து வழியும். ஆனால் இப்பசுக்கள் பாலை சொரியும் வேகத்தில். மிகுதியாக பால் இருப்பின் வேகமாக சொரியும் அல்லவா! அந்த வேகத்தில் பால் எதிர் திசையில் மேலேறி பொங்குகிறதாம்.
ஆயர்பாடியில் வள்ளல் பெரும் பசுக்கள் மிகுந்து இருப்பது போல் வைணவ சமயத்தில் ஆச்சாரியர்கள் மிகுந்த ஞானம் உடையவர்களாக இருப்பர். மடை திறந்த வெள்ளமாய் ஞானத்தை அருளக்கூடியவர்கள். அவர்களை அடைந்த பக்குவப்பட்ட சீடர்கள் ஆச்சாரியருக்கு ஏற்ற கலங்களாய் ஞானத்தைப் பெற்று எதிர் பொங்கி மீதளிப்பவராய் இருப்பர்.
இப்படி மிகுந்த பால் பொழியும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அதிகமான எண்ணிக்கையில் கொண்ட நந்தகோபனின் மகனாக எங்களுக்காக இறங்கி வந்து அருள்பவனே! நீ கண்மலர்வாய். நீ பரம் பொருள். இவ்வுலகின் தோற்றத்திற்கு காரணமான சுடர், நீ வலிமையுடையவன், பெரியவன் என்றாலும் எங்களுக்காக கண்ணனாக இறங்கி அருள்பவன்.
பகைவர்கள் தம் வலிமை இழந்து சரண் என்று உன் வாசற் படியில் வந்து நிற்பதைப்போல் நாங்கள் உன் வாசல் வந்து நிற்கின்றோம். வலிமை தொலைத்த பகைவர் போல் உன்னை சரணடைந்தோம் என்றாலும் அவர்கள் ஆற்றாது வந்து நின்றார்கள். நாங்களோ நீயே சரணடைய வேண்டியவன் என்பதை உணர்ந்து உன்னைப் போற்றி வந்தோம் என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.
அடுத்தப் பாடலில்
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
இங்கு அங்கண் என்ற சொல் இரு இடத்தில் பயின்று வந்து அழகிய இடமாகிய பரந்த உலகம் என்ற பொருளும் அழகிய கண் என்ற பொருளும் தருவது அறிய தக்கது.
வலிமை தொலைந்த பகைவர் மட்டுமல்ல, அழகிய பரந்த உலகின் வலிமைமிக்க அரசர்களும் கூட நீயே உயர்ந்தவன் என்பதை உணர்ந்து தமது அபிமானம், கர்வம் பங்கப்பட்டுப் போக உன்னைச் சரணடைந்ததைப் போல் நாங்களும் ‘நான்’ என்ற எங்கள் அகங்காரம் அற்று போக, எல்லாவற்றையும் துறந்து, நீயே சரண் என்று வந்துள்ளோம்.
மகாபாரதத்தில் துர்யோதனனும் அர்ஜுனனும் கண்ணனைக் காண வருகிறார்கள். அவன் துணை நாடி வருகிறார்கள். துர்யோதனன் தலை பக்கமும் அர்ஜுனன் பவ்யனாக திருவடி நிழலிலும் நிற்கிறார்கள். கண் மலர்ந்த கண்ணன் அர்ஜுனனைத்தானே முதலில் பார்த்தான். அர்ஜுனனுக்கு தன்னையும் துர்யோதனனுக்கு தன் படையையும் அளித்தானல்லவா! இப்படி திருவடி அடைபவருக்குத் தன்னையே தருபவனல்லவா!!
அவ்வாறே உன் பாதங்களைச் சரணடைந்த எங்களை, கிங்கிணி வாய்போல் சிறிதாக திறந்திருக்கும் உன் தாமரை கண்களால் காணமாட்டாயோ! சூரியனும் சந்திரனும் ஒன்றாக எழுந்ததைப் போல் ஒருகண்ணில் உலகை காக்க வெப்பமும் மறுகண்ணில் தண்ணளியும் கொண்டு உன்னிரு அழகிய கண்களால் எங்களை நோக்கினால் எங்கள் சாபங்கள் எல்லாம் தீர்ந்து அழியும் அல்லவா!
நம்மால் நடக்கக் கூடியது எதுவுமில்லை என்று காரியங்களின் பலனில் கருத்தை வைக்காமல், அனைத்தும் அவனுக்காகவே என்று எண்ணி அவனை சரணடைந்தால், பகவான் உன் பாவங்களை எல்லாம் போக்கி மோட்சத்தை அருள்வான் என்பது சரம மந்திரத்தின் கருத்து.
இப்படி மிக அற்புதமாக சரம ஸ்லோகத்தில் சொன்னது போல் சரணடைவதைத்தானே இவ்விருப்பாடல்களும் நமக்கு எளிதாக காட்டுகின்றன. இப்பாடல்களைப் பாடினாலே, இப்பாடல்களில் உள்ள அவன் நாமங்களைச் சொன்னாலே உண்மையான மெய் அறிவை நாம் பெறுவோமல்லவா!!
No comments:
Post a Comment