Sunday, 9 April 2023

மலர்மார்பா! வாய் திறவாய்!! திருவே துயிலெழாய்!!

மலர்மார்பா! வாய் திறவாய்!! திருவே துயிலெழாய்!!

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

குத்து விளக்கெரிகிறது. அங்கிருக்கும் கட்டில் யானைத் தந்தங்களால் ஆனது. அதன் மேலிருக்கும் மெத்தையோ, அழகு, மணம், மென்மை, குளுமை, தூய்மை ஆகிய ஐந்து விதமான சிறப்புகள் கொண்டது. அதன் மேல் கொத்தாக அலர்ந்த பூவணிந்த கூந்தலை உடைய நப்பின்னை…

முதல் நான்கு வரிகளிலும் நப்பின்னையைப் பற்றிய வர்ணனைதான். என்றாலும் கண்ணனைத்தான் அழைக்கிறாள். அப்படிப்பட்ட நப்பின்னையை அணைத்ததனால் மலர்ந்த மார்பினை உடையவனே உன் வாய் திறவாய்!

நப்பின்னையை மணக்க கண்ணன் 7 ஏறுகளைத் தழுவி அடக்கினான் என்பது வரலாறு. அதனால் நப்பின்னை அவனது வீர மனைவியாகக் கருதப்படுகிறாள். எனவே அவளுக்கு யானைத் தந்ததினாலான கட்டில்.

அக்கட்டிலில் அன்னத்தின் சிறகு, இலவம் பஞ்சு, கோரைப்புல், மலர்கள், மயிலிறகு போன்ற ஐந்து வகைப் பொருட்களால் செய்யப்பட்ட ஐந்து வித சிறப்புகள் கொண்ட மெத்தை. அம்மெத்தையில் கொத்தலர் பூங்குழலியாக நப்பின்னை படுத்திருக்கிறாள்.

அவள் கூந்தலில் பூச்சூடி இருக்கிறாள். அப்பூக்களெல்லம் செடியில் இருக்கும் போது மலரவில்லையாம் அவள் கூந்தலில் தான் அலர்ந்தனவாம். அப்படி கொத்துக் கொத்தாக மலர்ந்த பூக்களை அணிந்திருக்கிறாள் அவள்.

இப்படிப்பட்ட நப்பின்னையை அணைத்துக் கிடந்ததால் மலர்ந்த மார்பினனாக இருந்தானாம் கண்ணன். ஒருவன் எப்பொழுது விரிந்த மார்பினனாக இருப்பான். ஒன்று வீரத்தில் மற்றொன்று காதலில். இவன் ஏழு எருதுகளை அடக்கிய வீரன், நப்பின்னையின் காதலில் கட்டுண்டவன். எனவே மலர்ந்த மார்பினனாக இருப்பது இயல்பு தானே!

அடுத்து மைத்தடங் கண்ணினாய் என்று நப்பின்னையின் கண்ணழகைக் காட்டுகிறாள் ஆண்டாள். மையிட்டதால் இவள் கண்களில் தடம் இருந்ததா? அல்லது மைநிற கண்ணனையே கண்டதால் அவன் நிறம் இவள் கண்களில் மைத்தடமாக படிந்து விட்டதா? எப்படியும் அவள் மைந்தடங்கண்ணினள்.

மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

நீ உன் மணாளனை எப்போதும் துயிலெழவே விட மாட்டாயோ! அவனை சிறு பொழுதும் பிரிய மாட்டாயோ! இச்செயல் உனது தன்மைக்கும், குணத்திற்கும் உகந்ததல்ல, உனது பெருமைக்கும் உகந்ததல்ல என்கிறாள். இங்கு தத்துவம் அல்ல என்பது கண்ணனுடன் கலந்து இருக்கக் கூடிய நப்பின்னையின் தன்மைக்கு அது உகந்ததல்ல என்கிறாள்.

அடுத்த பாடலில்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.

முப்பத்து மூன்று தேவர்களும் பரிவாரங்களும் அசுரர்களால் துன்பத்திற்காளாகும் போது அவர்களுக்காக அவதாரம் செய்து அவர்களைக் காப்பவன். இராமாவதாரத்தில் இராவணனை அழிக்க, தசரதன் மகனாக தானும், ஜனகர் மகளாக பிராட்டியும் தேவர்களெல்லாம் குரங்கு படைகளாகவும் பிறந்து அவர்களுக்கெல்லாம் முன் சென்று இராவணனை வதைத்து தேவர்களைக் காத்தானல்லவா! அப்படி அவர்களுக்கு முன் சென்று அவர்களின் நடுக்கத்தை தவிர்க்கச் செய்யும் வலிமைப் பொறுந்தியவன். வாமனனாக மகாபலியின் முன்நின்று தேவர்களை காத்தானல்லவா! அதனாலும் அவன் முன் சென்று நடுக்கத்தைப் போக்குபவன்.

அதுமட்டுமல்ல, இறைவனின் படைப்பான இவ்வுலகத்தை தேவர்கள் கடமைத் தவறாது காப்பர். வருணன் மழையாகவும் சூரியன் வெப்பமாகவும் கடமைதவறாது காப்பதில்லையா? இருந்தாலும் தன் அடியவருக்கு ஒரு துன்பமென்றால் அத் தேவர்களைக்காட்டிலும் முன்பாக விரைந்து வந்து, அவர்கள் நடுக்கத்தைப் போக்குபவன். இப்படியும் கொள்ளலாம்.

செப்பமுடையாய், யார் யாருக்கு எது எது வேண்டுமோ, எது தகுதியுடையதோ அதை ஆராய்ந்து சரியாக அருளும் நேர்மையுடையவன். ஆற்றலுடையவன். பகைவருக்கு பயத்தை உண்டாக்குபவன். இறை நெறிக்கு, அவன் அடியவருக்கு துன்பம் செய்பவரே இங்கு செற்றார் எனப்படுகிறார். அப்படி பட்டவர்களுக்கு வாழ்வில் பயத்தை உண்டாக்கக்கூடியவன்.

அப்படி பயத்தை உண்டாக்கினாலும் விமலனாக இருக்கிறார். மலம் என்றால் குற்றம் விமலன் என்பது குற்றமற்றவன் என்பதாகும்.

அடுத்து, மிகுந்த அழகும் பூரண குணங்களும் கொண்ட நப்பின்னையை, திருவே! என்றழைக்கிறாள்! திருமாலுக்கு திருவாக விளங்கக்கூடியவள் தாயார். மால் என்றால் பெருமை திருமால் என்பதால் திருவைக் கொண்டதால் பெருமைக்குறியவன் என்றாகிறது. இப்படி தாயாருடன் இருப்பதாலேயே பெருமைமிகுந்தவனான கண்ணனைத்தான் ஆண்டாள் வேண்டுகிறாள்.

திருவே உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மைநீராட்டு. இன்று கூட மார்கழி நாட்களிலும் நோன்பு நாட்களிலும் கண்ணாடி சீப்பு, விசிறி, முறம் போன்றவை வைத்துக் கொடுக்கும் வழக்கம் உண்டு. விசிறி போல், நமக்காக செய்யும் காரியம் ஆனாலும் சிறிதாவது பிறருக்கும் உதவவேண்டும். அது மட்டுமல்ல புற அழகைக் காட்டும் கண்ணாடி உள்ளிருக்கும் இறைவனையும் காட்டவேண்டும், எனவே அவற்றுடன் கண்ணனையும் தந்தருளாய்!

கண்ணா, தகுதியானதைப் பார்த்து அருளக்கூடியவனே உன்னையே சரணென்று வந்தோம், எங்களுக்காக நீ எழுந்து அருள்வாய்!

இப்படி, மைத்தடங்கண்ணினாய், கொத்தலர் பூங்குழல் நப்பின்னை நங்காய், திருவே! என்று பிராட்டியையும், மலர்மார்பா, கப்பம் தவிர்க்கும் கலியே! செப்பமுடையாய்! திறலுடையாய்! வெப்பம் கொடுக்கும் விமலா! என்று கண்ணனையும் அழைக்கும் ஆண்டாள், இவ்விரு பாடல்களிலும் கண்ணனையும் பிராட்டியையும் இணைத்தே பாடுகிறாள். முக்கியமாக நப்பின்னையுடன் கலந்து இருக்கும் கண்ணனையேப் பாடுகிறாள் ஆண்டாள்.

இறைவனின் சக்தியின் வடிவமே தாயார். தாயாரின் புருஷகாரமே இறைவன். இருவரும் பிரிந்திருப்பதே இல்லை. உயிர்களின் உன்னத நோக்கமாகிய இறைவனை அடைய தாயாரே வழிகாட்டுகிறாள் என்பது வைணவ தத்துவம்.

ஸ்ரீமன் நாராயண சரனௌ சரணம் பிரப்த்யே
ஸ்ரீமதே நாராயணாய நம:

என்கிற த்வய மந்திரம் இதையே குறிக்கிறது. ஸ்ரீ என்றால் இலக்குமி. ஸ்ரீ யுடன் கூடியவனாக இருக்கக்கூடிய நாராயணனின் பாதங்களே சரணம் என்று பற்றுகிறேன். பிராட்டியும் பெருமாளும் சேர்ந்திருக்கும் கோலத்தில் சகல கைங்கர்யங்களும் செய்வதையே வேண்டுகின்றேன் என்பது பொருள்.

எம்பிரானும் பிராட்டியும் சேர்ந்தநிலையில் அவர்களுக்கு கைங்கர்யம் செய்வதையே வேண்டுகிறாள். ஆண்டாள். இங்கு அடைய வேண்டியவனும் தாயாருடன் சேர்ந்த கண்ணனே! அருள வேண்டியதும் தாயாருடன் சேர்ந்த கண்ணனே!

எனவே, கண்ணனை அடைய வழிகாட்ட வேண்டிய நீ இவ்வாறு கண்ணனை எமக்கருளாமலிருக்கலாமா? அது உன் தன்மைக்கு உகந்ததல்லவே!

அதுமட்டுமல்ல நீ எங்கள் தாயாக இருக்கிறாய். குழந்தைகள் கேட்பதை தாய் மறைத்துக்கொள்வாளா? அது தாய்க்கு பெருமையல்லவே! எனவே கண்ணன் அருள் பெற நீ உதவுவாயாக என்று வேண்டுகிறாள்

இங்கு இராவணனைப் போல் இணைந்தவர்களைப் பிரிக்க நினைக்கவில்லை ஆண்டாள். அணைத்தவாறே வாய் திறவாய்! என்கிறாள். மலர்ந்த மார்பினனாய் இருக்கும் போது வாய் திறந்தால் நன்மையல்லவா உண்டாகும்.

வாய் திறவாய் என்றால், அவன் என்ன சொல்லவேண்டும் என்று ஆண்டாள் கேட்கிறாள்!

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ,
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:

என்ற சரம சுலோகத்தில் கண்ணன் சொன்னதைப் போலவே இன்று கண்ணனையே சரணாகதி என்று வந்த இவர்களுக்கு ‘மா சுசஹா’ என்று கூறி அவன் அருள வேண்டும் என்று தான் ஆண்டாள் வாய் திறவாய்! என்கிறாள்.

`மாசுசஹா' என்றால் ’எதற்கும் கவலைப்படாதே... உனக்கு எது நடந்தாலும் நான் துணையிருக்கிறேன்’ என்று பொருள்'' என்றார். போர்களத்தில் கண்ணன் அர்சுனனுக்கு சொல்லும் கீதோபதேசத்தில் இவ்வாறு சொல்கிறார். கருமத்தில் பலனைத் துறந்து என்னையே கதி என்று சரணடை, உனது பாபங்களை எல்லாம் போக்கி, மோட்சத்தைக் கொடுக்கிறேன். கவலைக் கொள்ளாதே! என்பதே இதன் கருத்து.

வைணவ சரணாகதியில் மந்திரோபதேசமாக மூன்று மந்திரங்கள் உண்டு.

1. ஓம் நமோ நாராயணாய ‘
என்ற எட்டெழுத்து மந்திரம்.

2. ஸ்ரீமன் நாராயண சரனௌ சரணம் பிரப்த்யே
ஸ்ரீமதே நாராயணாய நம:
என்கிற த்வய மந்திரம்

3. ஸர்வ தர்மான் பரித்யஜ்ய
மாமேகம் சரணம் வ்ரஜ,
அஹம் த்வா சர்வ பாபேப்யோ
மோக்ஷயிஷ்யாமி மா சுச:
என்ற சரம சுலோகம்.

இதன் உள்ளார்ந்த அர்த்தங்கள் பல பக்கங்களில் பெரியவர்களால் விளக்கப்படுகின்றது. திருப்பாவை இச்சரணாகதி தத்துவத்தை மிக எளிதாக கடைபிடிக்க வழிகாட்டுகிறது. இவ்விருப் பாடல்களும் த்வய மந்திரத்தின் விளக்கமாக அமைந்துள்ளது.

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை
நப்பின்னை சூடிய மலர்கள் கொத்து கொத்தாக அலர்ந்திருந்தனவாம்.

மலர்களின் பல நிலைகளை முன்பே பார்த்தோம். ‘போது’ என்று சொல்லக்கூடிய மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலையடைவது தான் அலர்தல். இங்கு ஒரு அழகான பாடல் அறிந்து மகிழதக்கது.

அவிழ்ந்தன தோன்றி; அலர்ந்தன காயா;
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை; மகிழ்ந்து இதழ்
விண்டன கொன்றை; விரிந்த கருவிளை;
கொண்டன காந்தள் குலை

இதில் தோன்றி, காயா, முல்லை, கொன்றை, கருவிளை, காந்தள் ஆகியன் மலர்கள். அவிழ்ந்தன, அலர்ந்தன, நெகிழ்ந்தன, இதழ் விண்டன, விரிந்தன, குலை கொண்டன என்பதெல்லாம் மலர்தலைக்குறிக்கும் பலச் சொற்கள் இப்பாடல் பொருள் பின்வரு நிலை அணியாக அமைந்துள்ளது. காயா அலர்ந்ததாம். காந்தள் குலையாக கொத்தாக மலர்ந்ததாம், இப்படித்தான் நப்பின்னையின் கூந்தலிலும் மலர்கள் கொத்து கொத்தாக அலர்ந்தனவாம். அதனால்தான் கந்தம் கமழும்குழலியாக இருந்தாளோ!!!

No comments:

Post a Comment