கந்தம் கமழும் குழலி! பந்தார் விரலி!
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
முதல் பாடலில் கண்ணனை எழுப்பினார்கள். ஆனால் அவன் எழவில்லை. பலதேவன் கூடவே இருப்பாரே அவர் மூலம் கண்ணனை எழுப்பலாமே! என பலதேவனையும் எழுப்பினார்கள். என்றாலும் கண்ணன் எழவில்லை. அப்பொழுதுதான் அவர்களுக்கு ஒன்று புலப்படுகிறது. கண்ணன் நப்பின்னையுடனல்லவா உறங்குகின்றான். அவளோ, கண்ணனை சிறிதும் பிரியாதவாளாயிற்றே! முதலில் அவளையல்லவா எழுப்பவேண்டும் என்று தெளிந்தவர்களாய் நப்பின்னையை எழுப்புகிறார்கள்.
அப்படி எழுப்பும் போதும் நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்! என்று அழைக்கிறார்கள். முதல் பாடலில் ஒரு தலைவனாக மக்களுக்கு வேண்டியதெல்லாம் கேட்காமலே தரக்கூடிய அறம் செய்யும் நந்தகோபாலா என்றழைத்தார்களல்லவா? அப்படிப்பட்ட தலைவனின் மருமகளே! என்றழைக்கும் போது அவள் தர மறுக்க முடியாதல்லவா?
அதுமட்டுமல்ல நாந்தகோபன் எப்படிப்பட்டவன், உந்து மதக்களிற்றன். களிறு என்றாலே வலிமைப் பொறுந்தியது, அதிலும் மதங்கொண்ட களிற்றின் வேகம் மிக அதிகமாயிருக்கும். அப்படி மதங்கொண்டு, உந்தி தள்ளி வர ஆயத்தமாயிருக்கிற களிற்றைப் போல் வலிமையானவன், பகைவரைக்கண்டு அச்சம் கொள்ளாத தோள்களை உடையவன். அப்படி வலிமையோடு எங்களைக் காக்கும் நந்தகோபனின் மருமகளே என்று அழைப்பதனால் அவன் பெருமையை இவள் நிலைநாட்ட வேண்டுமல்லவா! எனவே இவர்கள் கேட்பதைத் தயங்காது கொடுத்துக் காப்பாள் என்ற நம்பிக்கை இவர்களுக்கு.
ஒரு பெண்ணிற்கு தாய்வீட்டுப் பெருமை என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குறியது தான். என்றாலும் ஒரு பெண்ணின் அடையாளம் அவள் புகுந்தவீடுதான். அதனாலும் அவளை நந்தகோபன் மருமகளே! என்றழைக்கிறார்கள்.
கந்தம் கமழும் குழலி! இறைவன் வாசனைப்பொருள் அதில் வாசமாக இருப்பது தாயார். அவனது வாசம் அவள் கூந்தலில் நிறைந்திருப்பதால் கந்தம் கமழும் குழலி என்றழைக்கின்றனர்.
வந்தெங்கும் கோழி அழைத்தன காண், மாதவி பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவினக் காண்! என்று விடிந்ததன் அடையாளம் சொல்லி எழுப்புகிறார்கள்.
கோழி, விடிந்ததும், வெளிச்சத்தைக் கண்டதும் கூவக்கூடியது. அப்படி கோழிகள் பலவும் எல்லா இடங்களிலும் கூவ ஆரம்பித்துவிட்டன. நீ எழுந்து கதவைத் திறக்க மாட்டாயோ! அதுமட்டுமல்ல மாதவிப்பந்தலில் அமர்ந்து குயில்களும் கூவ ஆரம்பித்துவிட்டன.
கோழி கூவி எழுதல் இன்றும் கூட நாம் கேள்விப்படுவது தான். இன்று கோழி கூவி எழுந்தாலே மிகப் பெரிய விஷயம்.
இங்கு கோழிகள் அழைத்தன என்கிறாள். முந்தைய பாடலில் வெள்ளை விளிச் சங்கைப் பார்த்தோம் அல்லவா! அங்கு வெள்ளைச் சங்கு விளித்ததால் அது விளிச் சங்கம் ஆயிற்று! கோவில் திறந்து விட்டதை அடியவருக்கு அறிவிக்க சங்கு ஊதி அழைக்கப்பட்டது. பின் தங்கள் திருக்கோவில் சங்கிடுவதற்காக பல வெண்பல்தவத்தவர் சென்றதைப் பார்த்தோம்.
எனவே இப்பொழுது பல கோவில்கள் திறந்துவிட்டன எனத் தெரிகிறது. இங்கு கோழி அழைபது என்பது எல்லா கோவில்களிலும் எழும் நாதத்தைக் குறிக்கிறது. கண்ணா எழுந்தருளி எங்களுக்கு அருள வேண்டும் என்று எல்லா கோவில்களிலும் இறைவன் நாமம் ஒலிக்கின்றதாம்.
மாதவி பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவினக் காண்! குயில் இருக்கிறதே அது தனக்காக கூடுகூட கட்டிக் கொள்ளாத சோம்பேறி. அது நன்றாக விடிந்த பிறகுதான் கூவும். இலைகள் அடர்ந்திருக்கும் மாதவிக் கொடியில் இருந்து அவை கூட பலமுறை கூவிவிட்டன.
இங்கு குயில் கூவுதல் என்பது அடியவர்கள் வந்து அருள் வேண்டி இறைஞ்சுவதைக் குறிக்கின்றது. கண்ணா! பக்தர்கள் எல்லோரும் பலமுறை உன் நாமம் சொல்லி வேண்டுகின்றனர், நீ எழுந்து அருள் செய்ய வா! என்று அழைக்கிறாள்.
அது சரி, இவ்வளவு தூரம் விடிந்தது நப்பின்னைக்குத் தெரியாமலா உறங்குகிறாள். இருக்கலாம், ஒருவேளை அவள் இருள் நிற கண்ணனை அணைத்தவாறல்லவா தூங்குகிறாள். வெளிச்சம் வந்தது தெரியவில்லையோ!!
அடுத்து,
பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!
நப்பின்னை, கண்ணனுடன் இரவெல்லாம் பந்துவிளையாடினாள் போலும். ஒரு கையில் கண்ணனை அனைத்தவாறும் ஒரு கையில் பந்துடனும் உறங்குகிறாள். எனவே பந்தார்விரலி என்று அழைக்கிறார்கள். இவளுக்குத் தான் பந்தாட பிடிக்கும் என்பது முன்பே அறிந்ததுதானே!
கம்ப இராமாயணத்தில் விஸ்வாமித்திரர், தாடகை வதமானதும் இராமனையும் இலக்குவணனையும் அழைத்துக் கொண்டு மிதிலை தெருவில் நடந்து வந்துக்கொண்டிருக்கிறார். சீதை, அவளது மாளிகையின் உப்பரிகையில் நிற்கிறாள், அந்த பக்கம் அவர்கள் வர, அண்ணலும் நோக்க, அவளும் நோக்க, இராமாயணக் கதை நகர்கிறது
இந்த காட்சிக்கு மிக அழகாக உரை சொல்லியிருப்பார்கள் முன்னோர்கள். உப்பரிகையில் சீதை பூப்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். அக்காலத்தில் மென்மையான பூக்களினால் பந்து செய்து விளையாடுவது பெண்களின் வழக்கம் தானே. அப்பந்தை அவள் தோழி நீலமாலை சற்று வேகமாக அடித்து விட அது சீதையைத் தாண்டிச் சென்று தெருவில் விழுகிறது. அதை காணவே சீதை உப்பரிகையில் வந்து நிற்கிறாள். அதேகணம் இராமன் அப்பக்கம் வர
கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்ததால் இருவரும் மாறிபுக்கு இதயம் எய்தினர்.
அப்பொழுது பந்தார் விரலியாகத்தானே அவளை பார்த்தான் இராமன். இன்று அதை நினைவு கூறி, பெண்ணே உன் மைத்துனன் பேர் பாடுகின்றோம். நீ, உன் செந்தாமரைக் கையால் சீராக அணிந்த வளையல்கள் ஒலிக்க மகிழ்வோடு திறப்பாயாக என்கிறார்கள். இனிமேலும் அவள் மகிழாதிருப்பாளா!!
மைத்துனன் என்ற சொல் அக்காலத்தில் கணவனையே குறித்து நின்றது. ‘மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்ற கணாக்கண்ட’தாகத்தானே இன்னொறு இடத்திலும் ஆண்டாள் குறிக்கிறாள். பின்பு காலபோக்கில் பல சொற்கள் மாறுவது போல் இச்சொல்லும் பொருள் மாறியிருக்கலாம்.
இராமானுஜர் அத்துழாயைக் கண்டு மெய்சிலிர்த்து விழுந்து வணங்கியதும் அவளைப் பந்தார்விரலியாகப் பார்த்ததினால் தானே! பெரிய நம்பியின் பெண் அத்துழாய், பந்து விளையாடிக் கொண்டிருந்தவள், கையில் பந்துடன் ஓடி வருகிறாள். அதேசமயம் பிட்சைக்காக வந்துக் கொண்டிருந்த திருப்பாவை ஜீயர் என்றழைக்கப்படும் இராமானுஜர் உந்துமதக்களிற்றன் என்ற இப்பாடலை பாடிக்கொண்டே வருகிறார். அவர் பாடினார் என்றால் கண்ணனையும் ஆண்டாளையும் அப்பாடலில் கூறப்பட்டுள்ள அனைத்து உள்ளார்ந்த அர்த்தங்களையும் அனுபவித்துக் கொண்டே தானே பாடுவார். அப்படிப் பட்ட மேன்மையான சிந்தனை நிலையில் கையில் பந்துடன் அத்துழாயைப் பார்த்ததும் அவருக்கு அப்பெண் நப்பின்னையாகவே தெரிகிறாள். உடனே மெய்சிலிர்த்து அவள் காலில் விழுந்துவிடுகிறார். பநதார் விரலிக்கு அப்படி ஒரு பெருமை உண்டு.
இந்த பாடலில் நந்த கோபனின் மருமகளான நப்பின்னையை ஆண்டாளும் தோழிகளும் அழைக்கும் அடைமொழிகளில் இன்னொரு சிறப்பும் உண்டு. முதலில் கந்தம் கமழும் குழலி! என்றார்கள். அவள் கூந்தல் மணம் கமழ்ந்து நுகர்வில் இன்பம் தந்தது. அடுத்து அவளது பந்தார் விரலை, செந்தாமரைக் கையைப் பார்க்கின்றனர். காணலில் இன்பம் கொண்டனர். அவள் கைகளில் சீராக அமைந்த வளையல்கள் ஒலிக்க செவிக்கின்பம் உண்டாயிற்று. அவள் மைத்துனன் பேர் பாடவும் வாக்கில் இனிமையை உணர்ந்தனர். சொல்ல சொல்ல இனிக்குமல்லவா அவன் பெயர். இப்படி எல்லா புலங்களாலும் இறையனுபவம் பெற்ற அவர்கள் கண்ணனைக் கண்டதும் மெய்க்கின்பம் எய்துவார்களல்லவா? அதனால் தான் நப்பின்னை பிராட்டியே! கண்ணனை எங்களுக்குக் கொடுத்து, நாங்கள் உய்ய அருளவேண்டும் என்றழைக்கிறார்கள். இங்கு கண்ணனை அடைதல் என்பது. அவனே புருஷோத்தமன். ஜீவர்கள் எல்லாம் அவனை அடையவேண்டியவர்கள் என்பதாக காணவேண்டும்.
No comments:
Post a Comment