நந்த கோபாலா எழுந்திராய்! எம்பெருமாட்டி யசோதா! அறிவுராய்
அடுத்ததாக, நந்தகோபாலன், யசோதை, கண்ணன், பலதேவன் என்ற வரிசையில் எழுப்புவதாக அமைகிறது பாடல். இந்த வரிசையில் ஒரு அழகு உண்டு. வீட்டில் சின்னக் குழந்தை அம்மா அருகில் தானே படுக்கும். அது போல் தான் முதலில் நந்தகோபன் மாளிகை. அவரைத் தாண்டித்தான் உள் நுழைய முடியும் அடுத்ததாக தாய் யசோதை அடுத்து கண்ணன், அவனுக்கு எந்தபக்கத்திலிருந்தும் துன்பம் வந்துவிடக்கூடாது என்று காப்பதற்காக பலதேவன் மாளிகை கடைசியாக அமைந்திருக்குமாம்.
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.
அம்பரம் என்ற சொல் இரு இடத்தில் வந்திருக்கும். அம்பரம் என்றால் உடை. மனிதருக்கு அடிப்படையான தேவைகளைத் தருபவன் தலைவன் அல்லவா. அப்படி உடை, நீர், உணவு ஆகியன கொடுத்து அறம் தவறாது இருக்கும் தலைவனே நந்த கோபாலா எழுந்திராய். எங்களுக்கு வேண்டியதெல்லாம் நாங்கள் கேட்காமலே தருபவனே! இன்று கண்ணன் அருளையும் நீயே எங்களுக்குத் தரவேண்டும். ஆச்சாரியர் என்பவன் தம் மாணாக்கருக்கு வேதத்தின் பொருள் மட்டுமா சொல்லித் தருவார், இறை அனுபவத்தையும் அடையாளம் காட்டுபவர் அவரே! எனவே கண்ணன் அருள் பெற எங்களுக்கு உதவ வேண்டும். எழுந்திராய்!!
அடுத்ததாக கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே, குல விளக்கே! எம்பெருமாட்டி யசோதா! அறிவுராய்.
கொழுந்து என்பது மரத்தின் கிளைகளின் நுனியில் புதிதாக முளைத்திருக்கும் புதிய இலை கொத்து. ஒரு பெரிய மரம் உயிர்ப்போடு இருக்கிறது என்பதற்கு துளிர்விடும் கொழுந்துகளே சாட்சி. கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே என்றால், தலைவனை கொழுக் கொம்பாக கொண்டு விளங்கும் கொடி போன்ற ஆயர் பெண்களுக்கெல்லாம் எடுத்துக் காட்டாக விளங்கும் ஆயர் குலத்தின் விளக்கே! எம்பெருமாட்டி யசோதா என்று அழைக்கின்றனர். யசோதை என்பது இலக்குமி தேவியைக் குறிப்பதாகவும் கூறுவர்.
அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான்’ இங்கு அம்பரம் என்பது பூமிக்கு உடைபோல் இருக்கும் ஆகாயத்தைச் சுட்டுகிறது. ஆகாயத்தை கிழித்தவாறு உயர்ந்து வளர்ந்து உலகை அளந்த தேவர்களின் தலைவனே! மறுபடியும் திருவிக்கிரம அவதாரம் சொல்லப்படுகிறது. அதிதி, தனது குழந்தைகளாகிய தேவர்கள் அசுரர்களிடம் தோற்று துன்புறுகிறார்கள் என்பதால் தேவர்களைக்காக்க திருமாலை வேண்டுகிறாள். திருமாலும் வாமன அவதாரம் எடுத்து மூவடி மண் கேட்டு உலகளந்த பெருமானாக தேவர்களைக் காக்கிறார். இப்படி ஒரு பெண்ணிற்காக இறங்கிய நீ, எங்களுக்கும் இறங்கி அருள்வாய் என்றே வந்திருக்கிறோம், எழுவாயாக என வேண்டுகின்றனர்.
அடுத்து பலதேவர், இவர் ஆதிஷேஷனின் வடிவமாக பார்க்கப்படுகிறார். இராமாவதாரத்திலே தம்பியாக அவதரித்தவர் கிருஷ்ணாவதாரத்திலே அண்ணனாக அவதரித்திருக்கிறார். பெருமாளை என்றும் பிரியாதவரல்லவா ஆதிஷேஷன். அவரது காலடியை என்றும் தொடர்பவரல்லவா!! பெருமாள் துயின்றால் படுக்கையாகவும், அமர்ந்தால் ஆசனமாகவும், நின்றால் குடையாகவும் இருந்து கைங்கர்யம் செய்பவரல்லவா!! எனவே தான் செம்பொன் கழலடி செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கேலோர் என்பாவாய் என்றழைக்கிறாள். இராமாவதாரத்தில் பதினாங்கு வருடங்கள் உண்ணாமலும் உறங்காமலும் இருந்து அவன் துயில் கொள்ள காவல் காத்த நீ இன்று எங்களுக்காக அவனை எழுப்பி உதவ மாட்டாயோ என அழைக்கிறாள்.
இங்கு ஒரு கேள்வி எழும் பலதேவனைப் போல் சுபத்திரை கண்ணனின் தங்கை அல்லவா! சுபத்திரையை ஏன் எழுப்பவில்லை ஆண்டாள்!!
சுபத்திரை வசுதேவருக்கும் அவரது முதல் மனைவியும் பலதேவரின் தாயுமான ரோகினிதேவியாருக்கும் பிறந்த பெண். கம்சவதத்திற்குப் பின் வசுதேவரையும் தேவகியையும் விடுவிக்கிறார் கண்ணன். அதன் பிறகு சுமார் எட்டு வருடங்கள் கழித்து தான் வசுதேவருக்கும் ரோகினிக்கும் மகளாக பிறக்கிறாள் சுபத்திரை. இந்த சுபத்திரையைத்தான் அர்ஜுணன் மணக்க உதவி செய்கிறார் கண்ணன். அப்படி பார்க்கையில் வயதில் மிகவும் இளையவள் சுபத்திரை. அதுமட்டுமல்ல ஆயர்பாடியில் சுபத்திரை இல்லை. கம்ச வதத்திற்கு பின் கண்ணன் துவாரகையை உருவாக்கி அங்கே சென்றுவிட்டான். ஆயர்பாடியில் இல்லை. இதனாலும் ஆண்டாள் சுபத்திரையை பற்றி பாடவில்லையோ!!!
இனி அவள் நப்பின்னையை எழுப்பப் போகிறாள். கண்ணனை எழுப்பப் போகிறாள். அவன் புகழ் பாடி பறை கொள்ள வேண்டப் போகிறாள். அந்த அழகை பார்ப்போம்.
No comments:
Post a Comment