Sunday, 2 April 2023

வாயில் காப்பார், கோவில் காப்பார்

வாயில் காப்பார், கோவில் காப்பார்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!

என்று பாவை நோன்பிற்காக நீராட போவோம், என்றுதானே முதலில் அழைக்கிறாள் ஆண்டாள். தோழியரெல்லம் வந்து விட்டனர். ஆனால் ஆண்டாள் நேராக பாவைக் களமாகிய ஆற்றங்கரைக்குச் செல்லாமல் ஆயர் பாடியின் தலைவனாகிய நந்தகோபரின் மாளிகைக்குச் சென்று அங்கிருப்போரை எழுப்புகிறாள்.

மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது ஆயர் குலப்பெண்ணாகத் தன்னை வரித்துக் கொண்ட ஆண்டாள், கண்ணன் மேல் கொண்ட பக்தியால் அவனை அடைய வேண்டும் என்றெண்ணியவளாய் தம் தோழியரை எழுப்பிக் கொண்டு நீராடி பாவை நோன்பிருக்க நந்தகோபன் மாளிகையில் துயிலும் கண்ணன் அருள் வேண்டிப் பாடுகிறாள் என்பதாக பொருள் கொள்ளலாம்.

அதேசமயம், தோழியரை எழுப்புதல் என்பது தனது முன்னோர்களான பத்து ஆழ்வார்களை வணங்கி அவர்கள் வழிகாட்டலோடு இறைவனை அடைய முயல்வதாகவும் பொருள் கொள்ளலாம்.

தூங்கி கொண்டிருப்பதாக அறியப்படுவது நமது மனம். உலக இன்பங்களில் மூழ்கி உண்மையை உணராதிருக்கும் நம் மனத்தை எழுப்பி உண்மைப் பொருள் உணர்ந்து இறையனுபவம் பெற விளைவதாகவும் பொருள் கொள்ளலாம். இங்கு நீராடுதல் என்பது இறைவனின் கருணை மழையில் நனைதல். அவன் அருள் வெள்ளத்தில் மூழ்கி திளைத்தலையே ஆண்டாள் குறிப்பிடுகின்றாள்.

இறைவன் கருணை மழைப் பொழியக் கூடியவன். நமது முயற்சி என்ற சின்ன உந்துதலோடு நாம் அவன் அருள் வெள்ளத்தில் மூழ்கித் திளைக்க, தீங்கின்றி மாதம் மும்மாரி பொழியும், நீங்காத செல்வம் நிறையும் என்பதே ஆண்டாள் நமக்குக் காட்டுவது.

வாழ்க்கை என்பது இலக்கு அல்ல. இலக்கை நோக்கியப் பயணம். வாழ்க்கை அனுபவம் என்பது பயணத்தின் அனுபவம் தான். இறைவனை நோக்கிய பயணத்தை நாம் எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தான் ஆண்டாள் தன் பாசுரங்களில் காட்டுகிறாள்.

இந்த வாழ்க்கை பயணத்தில் நம்மை நாம் அறிந்துக் கொள்ள, அதன் மூலம் உண்மை பொருளை அறிய நமக்கு வழிகாட்டியாய் இருப்பவர் நமது ஆச்சாரியர்கள்.

நம்மில் பலரும் குழந்தைகளாய் ஆடி, பாடி வளர்ந்து, படித்து, அறிந்து இல்லறத்தில் மகிழ்ந்து, உலக இன்ப துன்பங்களுக்கு ஆட்பட்டு ஒரு கட்டத்தில் நிதானிக்க மறந்து சுழன்று இறைவனை வணங்குவதைக்கூட ஒரு சடங்காகச் செய்ய பழகிவிடுகிறோம். வாழ்வின் உண்மையை அறிய முடியாத நிலையில் சிக்குண்டுவிடுகிறோம்.

அப்படியில்லாமல் இறைவனை அடையும் இந்த வாழ்க்கைப் பயணத்தில் காண்பதெல்லாம் அவனாகவே காணவும் செய்வதெல்லாம் அவனுக்காகவே செய்யவும் வேண்டும் என்பதைத் தான் ஆண்டாள் காட்டுகிறாள்.

பதினாறு பதினேழாம் பாடல்களில் நந்தகோபன் மாளிகையின் காவலர்களை கதவைத் திறக்குமாறு வேண்டி உள்ளிருக்கும் நந்தகோபர் முதல் பலதேவர் வரை எழுப்பி கண்ணன் அருள் வேண்டி பாடுகிறாள்.

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.

கோவில் என்பது இறைவன் குடியிருக்கும் உள்ளம். வாயில் என்பது நமது புலன்கள். நமது மனத்தினை தெளிவுபடுத்தி அதன்மூலம் நம் புலன்களை நெறிபடுத்தி, நமக்கு உள்ளே உறையும் இறைவனை, அவனது உண்மையான அழகை காணவும் நம் புலன்கள் அனைத்தாலும் இறையனுபவமே பெறவும் உதவக்கூடியவர்கள், உலக இன்பம் என்ற மாயக்கதவைத் திறந்து உண்மை அழகைக் காட்டக்கூடியவர்கள் நமது ஆச்சாரியர்கள்.

குருவே! நாங்கள் கதவின் அழகிலேயே மயங்கிக் கிடக்கிறோம். அதனைத் திறந்து எங்களுக்கு உண்மை அழகை காட்டுவீராக என்று குருவை வேண்டுவதாக பொருள் கொள்ளலாம். மாயக்கதவினால் மூடப்பட்டுள்ள உள்ளம் திறக்குமானால் உள்ளே உறையும் இறைவனை நாம் உணரலாம். அப்படி உண்மைப் பொருளை உணரும் பொழுது நமது புலங்களெல்லாம் அவ்விறையனுபவத்தையே அனுபவிக்கும்.

ஆயர் பாடி என்பதை ஜீவர்கள் வாழும் உலகமாகக் கொண்டால், இவ்வுலகிற்கு தலைவனாக விளங்கக்கூடியவர் இறைவன். என்றாலும் இறைவன் ஆச்சாரியர்களுக்கு அடங்கியவன். குருவின் மூலமாகவே இறைவனை அடைய முடியும் என்பது வைணவ தத்துவம். திருப்பாவையில் நந்தகோபர் என்பது ஆச்சாரியரையே குறிக்கும். வேதத்தின் பொருளை நாம் உணரதருபவர் ஆச்சாரியார் எனின் வேதத்தின் பொருளாக விளங்கும் கண்ணனை தருபவர் ஆச்சாரியர்தானே!!

இங்கு கண்ணனாக இருக்கும் பொழுது ஆயர்பாடிக்கு தலைவனாக இருக்கக் கூடிய நந்தகோபரின் ஆளுகைக்கு ஆட்பட்டவனாகவே இறைவன் இருக்கிறான். நந்தகோபரின் அரண்மனையைக் காப்பவனே, கொடிகளும் தோரணங்களும் கட்டப்பட்டிருக்கும் பல வாயில்களைக் காப்பவனே இந்த அழகிய மணிக் கதவைத் திறப்பாயாக. நாங்கள் தூய மனத்தோடு வந்துள்ளோம். கண்ணன் விழித்து எங்களுக்கு அருள வேண்டும். நாங்கள், அவன் துயிலெழப் பாடுவோம். எங்களுக்கு அருள்வதாக முன்பே அவன் வாக்களித்துள்ளான். நீ மீண்டும் மீண்டும் மறுத்துச் சொல்லாமல் கதவைத் திறப்பாயாக! என்று கேட்கிறாள்.

இதை இன்னொரு விதமாக மனத்திற்குச் சொல்வதாகவும் காணலாம். மனமே இறைவனை அடைய வைராக்கியம் கொண்டுவிட்டோம் மீண்டும் மீண்டும் சலனப்படாதே! என்பதாகவும் கொள்ளலாம்.

இங்கு நென்னலே வாய் நேர்ந்தான் என்பதற்கு, முன்பே எங்களுக்கு வாக்களித்துள்ளான் என்பது பொருள். எப்போது வாக்களித்தான், யாரிடம் வாக்களித்தான்!!

பகவத்கீதையின் பக்தி யோகத்தில்

“செயல்களனைத்தையும் எனக்கே அர்ப்பணித்து, என்னையே (அடையத்தக்க) தங்கள் உயர்ந்த நோக்கமாகக் கொண்டு, என்னையே வழிபட்டு, வேறு எதிலும் அர்ப்பணிப்பைச் செலுத்தாமல், என்னையே தியானித்து, (இப்படியே) என்னிலேயே தங்கள் மனத்தை நிலைக்கச் செய்பவர்கள் எவரோ, அவர்களை, (இந்த) மரணத்தின்பாற்படும் உலகம் எனும் கடலில் இருந்து தாமதமில்லாமல் நான் விடுவிப்பேன். 12:6-7

எவ்வித பலனை எதிர்பாராது பகவானிடம் முழு மனதுடன் பக்தி செலுத்துவது “அநன்ய பக்தி “ஆகும். இவ்வாறு பக்தி செலுத்தி பகவானையே சரணாகதி அடைந்த பக்தர்களை காப்பது எனது கடமை என பகவான் உறுதிமொழி தருகிறார்.

கண்ணன் அருளிய கீதைக்கு கண்ணதாசன் விளக்க உரை எழுதியிருப்பார். பக்தியோகம் அவரது வரிகளில்…

ஒருநிலை மனது கொண்டு
ஒருநிலை அறிவை ஏற்றுக்
கருமத்தின் பலன் துறந்து
காலமெல் லாமும் இந்தத்
தருமத்தின் தலைவன் தன்னை
தழுவிய பேர்க ளெல்லாம்
திருவுற்றுத் தினமும் வாழ்வார்
தேருக விஜயா! என்றான்

இப்படி கண்ணன் முன்பே வாக்குறுதி தந்திருக்கிறான். ஏனவே அவன் சொன்னது போல் நாங்கள் தூயோமாய் வந்தோம், எங்கள் நோக்கம் நிறைவேற எங்களுக்கு உதவுவாயாக என்று இறைவனை நமக்கு காட்டக்கூடிய ஆச்சாரியர்களை வேண்டுகின்றாள் ஆண்டாள். இப்படி அற்புதமான பக்தியோகத்தைத் தானே ஆண்டாள் தம்பாடல்கள் முழுவதிலும் காட்டுகிறாள்.

No comments:

Post a Comment